போக்சோ வழக்கில் ஜெம் வீரமணிக்கு 21-ந்தேதி வரை நீதிமன்ற காவல்
1 min read
Gem Veeramani remanded to judicial custody until the 21st in POCSO case
7/10/2026
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி, சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தமிழகத்தைத் தாண்டி தேசிய அளவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் இதுவரை முக்கியக் குற்றவாளியான வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் தப்ப முடியாது எனவும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிடுள்ளார்.
வீரமணி மீது இதுவரை 15-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், காவல்துறை தரப்பில் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முதல் அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து விசாரணை தீவிரமடைந்தது. இந்த வழக்கை விசாரிக்க 4 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.) அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிப்பதற்காக சிறப்புப் புலனாய்வுக் குழு சார்பில் பிரத்யேக செல்போன் எண் (9345319676) வெளியிடப்பட்டது. இந்த எண்ணுக்குத் தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதன் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜெம் வீரமணி மீது மதுரையை சேர்ந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணைக்காக அவரை சென்னையில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். முந்தைய விசாரணையின்போது காணொலி காட்சி வாயிலாக ஜெம் வீரமணியை நீதிபதி விசாரித்த நிலையில், இன்று விசாரணைக்காக வீரமணியை நீதிபதி பத்மா முன்பு போலீசார் நேரில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பத்மா, போக்சோ வழக்கில் ஜெம் வீரமணியை 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனிடையே வீரமணியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை தரப்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறை மனு மீது நாளை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.