பிரதமர் மோடியின் அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு
1 min read
Prime Minister Modi’s government completes 25 consecutive years in office.
7/10/2026
பிரதமர் மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி குஜராத் முதல்-மந்திரியாக பதவியேற்றார். 2014-ம் ஆண்டு மே மாதம் வரை குஜராத் முதல்-மந்திரியாக இருந்த அவர், அதன்பின்னர் பிரதமராக பொறுப்பேற்றார். இதன்மூலம் அரசு பொறுப்பில் தொடர்ந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
பிரதமர் மோடி 25 ஆண்டுகள் தொடர்ந்து அரசு தலைவராக பணியாற்றியதை பாஜகவினர் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அரசு பொறுப்பில் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி, டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
இந்நிலையில், அரசு பதவிக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
2001ல் குஜராத் முதல்-மந்திரியாகும்போது இந்த உயரத்துக்கு வருவேன் என நினைக்கவில்லை. நான் இன்னும் மாணவன் தான். கற்றுக்கொண்டே இருக்கிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். ஒவ்வொரு வெற்றி, தோல்வியிலும் பாடம் கற்றுக்கொள்கிறேன்.
இன்னும் சிறப்பாக செயல்படுவது எப்படி என தோல்வி எனக்கு கற்றுக்கொடுக்கிறது. 25 ஆண்டுகள் தொடர்ந்து சேவையாற்ற வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு தலைவணங்குகிறேன். மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் உயர்ந்துள்ளேன். பா.ஜ.க., என்.டி.ஏ. மற்றும் உடன் இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கு நன்றி.
140 கோடி மக்களுக்காக இன்று விநாயகர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தேன். எனக்காகவும் இறைவனிடம் வேண்டினேன். இன்னும் ஆற்றலுடனும், வலிமையுடனும் பணியாற்ற பிரார்த்தனை செய்தேன். இந்த நேரத்தில் இந்திய அரசியலமைப்புக்கும் மரியாதை செலுத்துகிறேன். உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவோம். 2047ல் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவோம்.
எனக்கு எதையாவது கற்றுக்கொடுத்த ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு அனுபவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் பணிவைக் கற்றுக்கொடுத்தார்கள். என்னை தாழ்த்தியவர்கள் மீண்டும் எப்படி எழுவது என்பதைக் கற்றுக்கொடுத்தார்கள். என் ஆதரவாளர்கள் என்னை ஊக்குவித்தார்கள், அதே நேரத்தில் என் விமர்சகர்கள் எனக்குள் பார்க்கக் கற்றுக்கொடுத்தார்கள். எனக்குத் துணையாக நின்றவர்கள் நம்பிக்கையின் சக்தியைக் காட்டினார்கள்
ஒவ்வொரு நெருக்கடியும் என் பொறுமையைச் சோதித்தது, ஒவ்வொரு வெற்றியும் என் பொறுப்புகளை விரிவுபடுத்தியது, மேலும் ஒவ்வொரு சாதனையும் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல எனக்கு தைரியத்தையும் உறுதியையும் அளித்தது
இவ்வாறு அவர் கூறினார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
தலைமைப்பொறுப்பில் தேசத்திற்கு 25 ஆண்டுகள் சேவையாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மன மார்ந்த நல்வாழ்த்துகள். நாட்டின் சேவைக்கான உங்களின் பயணம், ‘அனைவரின் ஆதரவு, வளர்ச்சி, நம்பிக்கை, பிரயாசம்’ என்ற கொள்கையின் வழிகாட்டுதலுடன், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையை ஒரு நாடு தழுவிய இயக்கமாக உருமாற்றியுள்ளது.
நான் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, மேம்பட்ட இணைய இணப்பு, எண்ணிம முன்னேற்றம், விரிவடையும் வாய்ப்புகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் பாரதம் அடைந்துள்ள கண்கூடான மாற்றத்தைக் கண்டிருக்கிறேன்.
25 கோடி மக்களைக் கடும் வறுமையிலிருந்து விடுவித்ததே, உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் மாபெரும் சாதனையாகும். இது மனித வரலாறு ஒரு போதும் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். பாரதத்திற்கு நீங்கள் தொடர்ந்து ஆற்றிவரும் இவ்வேளையில், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், வலிமையையும் அருளட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.