ஆந்திராவை தொடந்து கேரளம் செல்கிறார் முதல்-அமைச்சர் விஜய்
1 min read
Following his visit to Andhra Pradesh, Chief Minister Vijay is heading to Kerala.
15.10.2026
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தின் திறப்பு விழா வருகிற 16-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இந்த நூலகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார்.
அங்கு பெரியார் சிலை மற்றும் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதற்காக பெரியார் நூலக வளாகத்தில் விழா மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவையில் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். முதல்-அமைச்சரின் கோவை பயணத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோவையில் இருந்து முதல்-அமைச்சர் விஜய் நாளை கேரள மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கோவை அவிநாசி சாலை அருகே ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக முதல்-அமைச்சர் விஜய் திருச்சூருக்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதல்-அமைச்சரின் திருச்சூர் பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. முதல்-அமைச்சர் வருகையின்போது கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக அவரது பயணத்திட்டம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஆந்திர மாநிலம் சென்றிருந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள பிரசித்தி பெற்ற விஜயவாடா துர்க்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய்யின் கேரள பயணம் குறித்த தகவல் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.