October 18, 2026

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோய்க்கான 137 மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறைய வாய்ப்பு

1 min read

Prices of 137 cancer drugs may decrease by up to 70 percent

18.10.2026
மத்திய அரசின் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், விலை கட்டுப்பாட்டின் கீழ் வராத 137 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் 30 சதவீதத்திற்கு மேல் லாபம் பெறக் கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் புற்றுநோய் மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் சில வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மருந்துகளின் உற்பத்தி விலைக்கும், விற்கப்படும் விலைக்கும் இடையே பல மடங்கு கூடுதல் லாபம் வைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தாங்க முடியாத பொருளாதாரச் சுமையைச் சந்தித்து வந்தனர். இதைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோய் சிகிச்சையை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எளிதாக்கவும், விலை நிர்ணய வரம்பை மீறி கொள்ளை லாபம் அடிப்பதைத் தடுக்கவும் மத்திய அரசு இந்த சீர்திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது.

சுகாதாரப் பணிகள் தலைமை இயக்குநரகத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளைச் சேர்ந்த முன்னணி புற்றுநோய் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் குழு பரிந்துரைத்த பட்டியலின் அடிப்படையில்தான் இந்த 137 மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளின் விற்பனை லாபம் அதிகபட்சம் 30 சதவீதத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட சில மருந்துகளின் விலை 70 சதவீதம் வரை அதிரடியாகக் குறைய வாய்ப்புள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெறும் மருந்துகளின் விவரங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்படும்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அரசிதழ் அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 7 நாட்களுக்குள் அனைத்து மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தாங்கள் திருத்தியமைத்த புதிய விலை விவரங்களை என்பிபிஏ அமைப்புக்குத் தெரிவிக்க வேண்டும். மாற்றப்பட்ட புதிய மற்றும் குறைந்த விலைகள் வரும் நவம்பர் 9-ஆம் தேதி முதல் கட்டாயமாக அமலுக்கு வரும்.

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தங்களது திருத்தப்பட்ட விலை பட்டியலைத் தங்களது அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிட வேண்டும். மேலும், அனைத்து சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கும் இதைப் பரவலாக விநியோகிக்க வேண்டும். சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் தாங்கள் விற்கும் மருந்துகளின் புதிய விலையை அனைவரும் பார்க்கும் வகையில் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். நுகர்வோர்கள் மருந்தின் விலையை ‘Pharma Sahi Daam’ செயலி மூலமாகவும், என்பிபிஏ அதிகாரப்பூர்வ வலைதளம் வழியாகவும் எளிதாகச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

பெரும்பாலான புற்றுநோய் மருந்துகள் நேரடியாக மருத்துவமனைகள் மூலமாகவே நோயாளிகளுக்கு வழங்கப்படுவதால், நவம்பர் 9 முதல் குறைந்த விலையிலேயே மருந்துகள் வழங்கப்படுவதை மருத்துவமனைகள் உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாநில மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் இந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்துத் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கில் செலவு செய்துவரும் கோடிக்கணக்கான குடும்பங்களுக்குப் பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *