October 21, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு அன்னிய சக்திகள் சதி- மோகன்பகவத் பேச்சு

1 min read

Foreign forces are conspiring to bring about a change of government in India – Mohan Bhagwat

21.10.2026
மராட்டிய மாநிலம், நாக்பூரில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரம்பரியமிக்க வருடாந்திர விஜயதசமி விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. இந்த விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தலைமை தாங்கினார். இதில் தமிழக முன்னாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் அணிவகுப்பு நடந்தது.

விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-

மேற்கத்திய நாடுகளில் இருந்து ஒரு புயல் வீசி கொண்டிருக்கிறது. பண்பாடு, மனிதநேய விழுமியங்கள் என அனைத்தையும் அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில சக்திகள் செயல்படுகின்றன. வளர்ந்த நாடுகள் கூட இந்த சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு வந்த செய்திகளைப் பாருங்கள். பிரான்ஸில் என்ன நடக்கிறது? அல்பேனியாவில் என்ன நடக்கிறது? வங்கதேசத்தில் என்ன நடந்தது? நேபாளத்தில் என்ன நடந்தது? இவற்றுக்குப் பின்னால் அந்த சக்திகளின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆட்சியை மாற்றினால் நிலைமை மாறிவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அப்படி இதுவரை நடந்ததில்லை. முன்பும் நடக்கவில்லை. இப்போதும் நடக்கவில்லை.

தங்களது சுயநலத்துக்காகச் செயல்படுபவர்கள்தான் தொடர்ந்து செல்வாக்குடன் இருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டியவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக உலகம் முழுவதும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. இந்தியாவிலும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால், கடந்த சில பத்தாண்டுகளாக இந்தியா பின்பற்றி வரும் உறுதியான கொள்கைகள், வலுவான தலைமைத்துவம் ஆகியவற்றால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, இந்திய இளைஞர்களிடையே தேசப்பற்று அதிகரித்துள்ளது. நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும், உலக அளவில் இந்தியாவுக்கு இருக்கும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வும் வளர்ந்துள்ளன. இதனால் அன்னிய சக்திகளின் திட்டங்கள் பலிக்கவில்லை.

இந்தியாவின் வளர்ச்சி தொடர்ந்தால் உலக நாடுகளில் குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களுக்குச் சாதகமானவர்களை அதிகாரத்தில் அமர்த்தும் இந்தச் சக்திகளின் முயற்சிகள் தோல்வியடைந்துவிடும். அதனால்தான் இந்தியாவைத் தங்களது மிகப்பெரிய எதிரியாக கருதுகின்றன.

இந்தியாவையும், இந்து சமூகத்தையும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் எப்படிச் சீர்குலைப்பது என்று திட்டமிட்டு வருகின்றன. இதற்காகக் கூட்டங்களையும் நடத்துகின்றன. இந்தச் சக்திகளுக்கு ஆதரவாகச் சிலரும் செயல்படுகின்றனர். பதவி ஆசை கொண்ட சில அரசியல் தலைவர்களும் தங்களது சுயநலத்துக்காக இவர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர்.

இந்தியாவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சர்வதேச சக்திகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. இந்தியா தங்களுக்குத் தேவை என்று நினைக்கும் இந்த சக்திகள், இந்தியா வலிமையான நாடாக வளர்வதை விரும்புவதில்லை. இந்தியா வளர்ந்தால் தங்களது ஆதிக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுகின்றன. அதனால்தான் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுகின்றன.

இதுபோன்ற முயற்சிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகளால் மக்களிடையே பகைமை உருவாக அனுமதிக்கக் கூடாது. நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *