ஊட்டி, கொடைக்கானல் வர சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
1 min read
Ban on tourists visiting Ooty and Kodaikanal
24.10.2026
நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று (23.10.2026) இரவு முதல் நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துவருவதால் சாலைகளில் மரங்கள் விழுந்தும் மண்சரிவுகள் ஏற்பட்டும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், மிக கனமழை பெய்யும் என முன்னறிவிப்பு உள்ளதால் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை சீராகும் வரை நீலகிரி(ஊட்டி) மாவட்டத்திற்கு வருகை புரிவதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் கொடைக்கானல் மற்றும் மலைகிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கு மண்சரிவு, மரங்கள் சாய்ந்து விழுதல், வெள்ளப்பெருக்கு போன்றவை ஏற்படுகிறது.
கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் மலைப்பாதை உள்ளிட்ட இடங்களில் மண்சரிவு, சாலையில் பள்ளங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடும். தற்போதைய வானிலை நிலவரத்தின்படி வரும் நாட்களிலும் மழை அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய சுற்றுலா தலங்களுக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.
மலைப்பாதையில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். குறிப்பாக இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும். காவல்துறையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.