October 28, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்திய பைலட்டுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு ‘உயரிய விருது’ வழங்கியது

1 min read

UAE government honors Indian pilot with a ‘prestigious award’
28.10.2026
விமானப் பேரழிவைத் தடுத்து நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவரது குழுவினருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு தனது நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

விமானம் பறந்து கொண்டிருந்தபோது, விமானிகள் அறைக்குள் கேப்டன் ஸ்மித் மச்சார் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார். கடுமையான காயங்களுடன் ரத்தம் வழிந்த நிலையிலும், கேப்டன் ஸ்மித் மச்சார் தனது சுயநினைவை இழக்காமல் விமானிகள் அறை கதவைச் சாதுரியமாகத் திறந்துவிட்டார்.

கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாக மற்ற விமானப் பணியாளர்களும், பயணிகளும் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர். இதன் மூலம் ஒரு மிகப்பெரிய விமான விபத்து மற்றும் அசம்பாவிதம் முற்றிலும் முறியடிக்கப்பட்டது.

விமானப் பணியாளர்களின் இந்த அசாத்திய தைரியத்தையும், கடமை உணர்வையும் பாராட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், அவர்களுக்கு ‘முதலாம் வகுப்பு ஆர்டர் ஆஃப் சயீத் II’ என்ற மிக உயரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

துபாய் இளவரசரும், யுஏஇ பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இந்த விருதுகளை விமானப் பணியாளர்களிடம் வழங்கினார். முன்னதாக, அக்டோபர் 3-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை துபாய் இளவரசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது அவர், “மனித உயிர்கள் மீது கேப்டன் ஸ்மித் காட்டிய பொறுப்புணர்வும் தைரியமும் மிக உயரியது. அமீரகத்தின் தேசிய வரலாற்றில் இவருடைய பெயர் என்றும் பெருமையுடன் நிலைத்திருக்கும்” எனத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

கேப்டன் ஸ்மித் மச்சாரின் இந்த வீரச் செயலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் ஸ்மித் மச்சாரை ஒரு உண்மையான “ஹீரோ” என்று பாராட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் படுகாயமடைந்த நிலையிலும் விமானிகள் அறை கதவை திறந்து பெரும் விபத்தைத் தடுத்த அவரது அசாத்திய தைரியத்தைப் பாராட்டியுள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கேப்டன் ஸ்மித்தின் தைரியத்தை வாழ்த்தியுள்ளார். மேலும், இஸ்ரேல் அரசு சார்பில் அவருக்கு ‘சிவிலியன் வீர விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் காயங்களில் இருந்து முழுமையாக குணமடைந்தவுடன் இந்த விருது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனது உயிரையும் பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்தியப் பைலட் ஸ்மித் மச்சாரின் இந்த செயல் உலக அரங்கில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *