இந்தியாவின் 2-வது மதிப்புமிக்க நிறுவனமாக உருவெடுத்து ஜியோ சாதனை
1 min read
Jio achieves a milestone by emerging as India’s second most valuable company.
29.10.2026
இதன் மூலம், இந்தியாவின் டாப் 2 மதிப்புமிக்க நிறுவனங்களும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வசமாகியுள்ளன. இந்த வரலாற்றுச் சாதனையால் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி நெகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆதரவைப் பெற்ற ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், அதன் ஐபிஓ விலையை விட 25%-க்கும் அதிகமான பிரீமியத்தில் பங்குச்சந்தையில் அதிரடியாகப் பட்டியலிடப்பட்டது. பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே நிறுவனத்தின் சந்தை மதிப்பு 13.05 டிரில்லியன் ரூபாயை எட்டியது.
நேற்றைய வர்த்தகத் தொடக்கத்திலும் ஜியோவின் பங்குகள் மேலும் 3.3% உயர்ந்து முதலீட்டாளர்களைக் கவர்ந்தது.
இந்தியாவின் முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்த ஐபிஓ-விற்குப் பிறகும் ஜியோவில் 64%-க்கும் அதிகமான பங்குகளைத் தன் வசம் வைத்துள்ளது.
பங்குச்சந்தைப் பட்டியலிடலுக்கு முன்னதாக நடைபெற்ற விழாவில், முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளும் ஜியோவை உருவாக்கிய தங்களின் பயணப் பாதையைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும், “அடுத்த 50 ஆண்டுகளுக்கு முதலீட்டாளர்களுக்குத் தொடர்ந்து லாபத்தையும் மதிப்பையும் உருவாக்குவோம்” என உறுதியளித்தனர். பிள்ளைகளின் இந்த உரையைக் கேட்டு மேடையிலேயே முகேஷ் அம்பானி நெகிழ்ந்து கண்ணீர் விட்டார்.
வெறும் 3% பங்குகளை மட்டுமே சந்தையில் நீர்த்துப்போகச் செய்ததன் மூலம், ஜியோ நிறுவனம் தனக்கு இருந்த சுமார் 300 பில்லியன் ரூபாய் கடனை முற்றிலும் துடைத்தெறிந்துள்ளது.
அமெரிக்காவின் ஆன்சிட் கேபிடல் அமைப்பின் நிறுவனர் அனுராக் சிங் கூறுகையில், ஜியோவின் தற்போதைய சந்தை மதிப்பு அமெரிக்காவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான AT&T மற்றும் வெரிசோன் ஆகியவற்றின் நிலைக்கு இணையாக உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் நிர்வாக இயக்குநரான ஆகாஷ் அம்பானி எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசுகையில், ‘அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஜியோ ஜனநாயகப்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு , கிளவுட் தொழில்நுட்பம், கணெக்டட் டிவைஸ்கள் மற்றும் விண்வெளியில் இருந்தான கனெக்டிவிட்டி ஆகிய துறைகளில் ஜியோவின் எதிர்கால வளர்ச்சி கவனம் செலுத்தும்.
சமீபத்தில் ஜியோவின் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் திட்டங்களால், எலான் மஸ்க்கின் ‘ஸ்டார்லிங்க்’ இந்தியாவுக்குள் நுழைவதில் தாமதம் ஏற்பட்டு, மஸ்க்கின் அதிருப்தியை அம்பானி குடும்பம் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஜியோவின் இந்த அசுர வளர்ச்சியால், ஒட்டுமொத்த ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு 30 லட்சம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.
இதன் மூலம், இதுவரை இந்தியாவின் முதன்மை கூட்டுநிறுவனமாக இருந்த டாட்டா குழுமத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் கோடி முந்தி, இந்தியாவின் நம்பர் 1 தொழில்துறை குழுமமாக அம்பானியின் ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஏஞ்சல் ஒன் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் வக்கார்ஜாவேத் கான் கூறுகையில், 50 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் மற்றும் 52% செயல்பாட்டு லாப வரம்பைக் கொண்டுள்ள ஜியோ, இந்தியப் பங்குச்சந்தைக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம் என்றார்.
எனினும், தற்போதைய பங்கு விலையிலேயே நிறுவனத்தின் பெரும்பாலான மதிப்பு கணக்கிடப்பட்டு விட்டதால், இனிவரும் காலங்களில் AI சேவைகள் மற்றும் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து பெறும் சராசரி வருவாய் உயர்வைப் பொறுத்தே அடுத்தகட்ட லாபம் அமையும் என சந்தை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.