நியூசிலாந்து: கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி உயிரிழப்பு
1 min read
New Zealand: More than 50 whales stranded on beach and died
6.11.2026
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரை ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள வைராபரா பிராந்தியத்தில் உள்ள புகழ்பெற்ற ங்காயி (Ngawi) கடற்கரைப் பகுதியில், புதன்கிழமை நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கிலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன. கடற்கரையில் இருந்த கூர்மையான பாறைகளுக்கு இடையே சிக்கியதால், அவை கடுமையான காயங்களுக்கு உள்ளாகின.
இதையடுத்து வியாழக்கிழமை அதிகாலை கடற்கரைக்கு வந்த உள்ளூர் மக்கள், திமிங்கலங்கள் பாறைகளுக்கிடையே உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நியூசிலாந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ‘புராஜெக்ட் ஜோனா’ என்ற தன்னார்வ அமைப்பின் மருத்துவக் குழுவினர் மற்றும் உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்கள் இணைந்து திமிங்கலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
கரை ஒதுங்கிய திமிங்கலங்களில் பெரும்பாலானவை பாறைகளில் மோதிய காயங்களாலும், நீர்ச்சத்து குறைவாலும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. உயிருடன் எஞ்சியிருந்த சில திமிங்கலங்களை மீட்புக் குழுவினர் மீண்டும் கடலுக்குள் அனுப்ப முயன்றனர். இருப்பினும், பலத்த காயமடைந்திருந்த கடைசி 4 திமிங்கலங்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.
உயிரிழந்த திமிங்கலங்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்கள் தங்கள் பாரம்பரிய ‘கராகியா’ பிரார்த்தனைகளைச் செய்து, அவற்றின் உடல்களை அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நியூசிலாந்து கடல் பகுதியில் பைலட் திமிங்கிலங்கள் இதுபோன்று கூட்டமாக கரை ஒதுங்குவது வழக்கம் என்றாலும், இப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மிகப்பெரிய சோகம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் கடல்சார் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.