போராட்ட விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள ராகுலுக்கு வணிகர்கள் வலியுறுத்தல்
1 min read
Traders urge Rahul to act responsibly regarding the protests
6.11.2026
வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்வதைவிட போராடும் உரிமை முக்கியத்துவம் வாய்ந்ததா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டு, ராகுல்காந்திக்கு வணிகர்கள் கூட்டமைப்பு கடிதம் எழுதி உள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக டெல்லியில் அடிக்கடி நடைபெறும் போராட்டங்களால் வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பண்டிகைக் காலத்தில் இது தேவையில்லாதது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு அவர்கள் ஏற்கனவே 2 முறை கடிதம் எழுதி இருந்தனர்.
இந்த நிலையில் அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சி.பார்தியா நேற்று ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது-
ஒவ்வொரு குடிமகனின் பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் சுதந்திரத்துக்கான அரசியலமைப்பு உரிமையை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். இருப்பினும், போராட்டம் நடத்தும் உரிமை என்பது வணிக நடவடிக்கைகளை சீர்குலைப்பதற்கும், பொது நடமாட்டத்தை தடுப்பதற்கும் அல்லது கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதற்கும் ஒரு வரம்பற்ற உரிமமாக மாறிவிடக்கூடாது.
போராட்டம் நடத்தும் உரிமையை நீங்கள் ஆதரிக்கும் அதேவேளையில், தொழில் செய்வதற்கும், வணிகம் புரிவதற்கும் உள்ள உரிமையை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் பிரிவை புறக்கணித்துவிட முடியாது. கடந்த ஒரு மாதமாக, குறிப்பாக முக்கியமான பண்டிகைக் காலத்தில், தொடர்ச்சியாக நடைபெற்ற போராட்டங்கள், டெல்லியின் வர்த்தக சமூகத்துக்கு கணிசமான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
வர்த்தகம் செய்வதற்கும், வாழ்வாதாரம் ஈட்டுவதற்குமான உரிமையை விட, போராட்டம் நடத்துவதற்கான உரிமை அதிக முக்கியத்துவம் வாய்ந்ததா?, தேசிய தலைநகரின் வர்த்தக வாழ்க்கையை சீர்குலைப்பது அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் நியாயமானது என்று நீங்கள் கருதுகிறீர்களா?, இந்த தொடர்ச்சியான போராட்டங்களால் ஏற்பட்ட கணிசமான இழப்புகளுக்கு வர்த்தகர்களுக்கு யார் இழப்பீடு வழங்குவார்கள்?.
போராட்டங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்களும், காங்கிரஸ் கட்சியும் பொறுப்பேற்கிறீர்களா?, அல்லது அரசியல் போர்களில் சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரங்கள் வெறும் பக்கவிளைவான சேதமா?, உங்கள் சொந்த வியாபாரம், வாழ்வாதாரம் அல்லது தினசரி வருமானம் பாதிக்கப்பட்டால், இதே போன்ற நீண்டகால இடையூறை நீங்கள் ஆதரிப்பீர்களா?
மற்றவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை ஒரு சிறு வியாபாரி ஏன் மவுனமாகத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
அரசியல் தலைமை சாமானிய குடிமக்களிடம் பொறுப்புணர்வோடும், உணர்வுப்பூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
எனவே, நீங்களும் மற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும், வணிக வளாகங்கள், பொது மக்களின் நடமாட்டம் மற்றும் சாதாரண குடிமக்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறு விளைவிக்காமல், நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நீங்கள் சுயபரிசோதனை செய்து, எங்கள் கவலைகளுக்கு உரிய தீவிரத்துடன் பதிலளிப்பீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதைவிட முக்கியமாக, பொறுப்பான செயலையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.