தமிழகத்தில் 2 நாளில் 443 ரவுடிகள் கைது
1 min read
443 rowdies arrested in Tamil Nadu in 2 days
10.11.2026
மாநிலம் முழுதும், ரவுடிகளுக்கு எதிராக, இரண்டு நாட்களில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 443 ரவுடிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து, டி.ஜி.பி., அலுவலகம், இன்று (நவ.,10) வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் முழுதும், 48 மணி நேரத்தில், ரவுடிகள் 8,628 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில், 443 பேர் நிலுவையில் உள்ள வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், 796 பேர் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
அதேபோல், போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் கீழ், 1,624 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்களில், 77 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களிடம் விசாரணை நடக்கிறது. பழி வாங்கும் நோக்கில் செயல்பட்டதால் கைதாகி, சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த, 2,924 பேர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 163 பேர் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்து, 167 பேர் கைது செய்யப்பட்டனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக, குடி போதையில் வாகனம் ஓட்டிய, 2,865 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்கப்பட்டது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.