தவெக எம்.எல்.ஏக்களை தனித்தனியே அழைத்து பேசிய முதல் அமைச்சர் விஜய்
1 min read
TVK leader Vijay held individual meetings with his party’s MLAs
11.11.2026
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாக தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது முதல்-அமைச்சர் விஜய்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. துணை சபாநாயகர் விவகாரம் மற்றும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியர் குறித்து ஆபாச செய்தி அனுப்பியதாக வெளியான தகவல் உள்ளிட்டவையால் தவெக எதிர்க்கட்சிகளிடம் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில்தான் தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சித் தலைமை ஏற்பாடு செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்களைத் தொடர்புகொண்ட கட்சித் தலைமை, அனைவரும் உடனடியாகச் சென்னைக்குத் திரும்புவதுடன், கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவே சென்னைக்கு வந்துள்ளனர்.
இன்று காலை 11 மணிக்குக் கூட்டம் தொடங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாலை 4 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மாமல்லபுரம் ஓட்டலுக்கு வருகை தந்தனர். மருத்துவ சிகிச்சையில் உள்ள விஎஸ் பாபு, சபாநாயகராக உள்ள ஜேசிடி பிரபாகர், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. முஸ்தபா மற்றும் சில அமைச்சர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்குத் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாகச் சந்தித்து முதல்-அமைச்சர் விஜய் பேசினார்.. 6 மாதங்களில் தொகுதியில் செய்த திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் கேட்டறிந்ததாகவும், சில அறிவுரைகளையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்-அமைச்சர் விஜய்யுடன் ஆலோசனை நடத்திய பிறகு எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது எம்.எல்.ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வெளியான தகவல்கள் வருமாறு;
தவெக எம்.எல்.ஏ.க்களை சிக்க வைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நமக்கு எதிரிகள் அதிகமாக உள்ளனர். தவெக ஆட்சியை முடக்க திமுக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மக்கள் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளேன். நமது கூட்டணியில் உள்ளவர்களைத் தவிர, நமக்கு எதிர்க்கட்சிகள் அதிகமாக உள்ளன.எனவே, எதிர்க்கட்சிகள் விரிக்கும் டிரப்பில் சிக்கிக்கொள்ளக் கூடாது. தவறான வழியில் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் எனது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.. மக்கள் பிரச்சினைகளுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.எந்த பிரச்சினை என்றாலும் எம்.எல்.ஏக்கள் என்னை நேரில் சந்திக்கலாம்”
இவ்வாறு முதல் அமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.
–