கோவை: வீட்டுக்குள் புகுந்து அரிசியை தின்ற காட்டு யானை
1 min read
Coimbatore: Wild elephant enters house and eats rice
11.11.2026
கோயம்புத்தூர் மாவட்டம் கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டை உடைத்து உள்ளே இருந்த ரேஷன் அரிசியை தின்று தீர்த்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த பூங்கோடி என்பவரது வீட்டின் அருகே சென்ற யானை, வீட்டின் சுற்றுச்சுவர், இரும்பு கேட் மற்றும் கூரை ஆகியவற்றை சேதப்படுத்தியது. பின்னர், வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியின் வாசனையை நுகர்ந்த யானை, சுவர் மற்றும் ஜன்னல் வழியாகத் தும்பிக்கையை உள்ளே விட்டு அரிசி மூட்டைகளை இழுத்துத் தின்றுள்ளது. யானையின் சத்தத்தைக் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேதமடைந்த வீட்டைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், யானை வீட்டை உடைத்து அரிசியை தின்னும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கதிர்நாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், சேதமடைந்த வீட்டிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.