சிறார் குற்றங்களுக்கான வயது வரம்பை 16 ஆக குறைக்ககேரள உயர் நீதிமன்றம் பரிந்துரை
1 min read
Kerala High Court recommends lowering the age limit for juvenile offenses to 16
15/11/2026
சிறார் குற்றங்களுக்கான வயது வரம்பை 18-லிருந்து 16 ஆகக் குறைப்பது குறித்து சட்டமன்றங்கள் பரிசீலிக்க வேண்டிய நேரம் இது என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிறார்கள் தொடர்ந்து ஏற்படுத்தும் வாகன விபத்துகள் தொடர்பாக, உயர் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
“இன்றைய காலக்கட்டத்தில் 16 வயதை அடையும் சிறுவர்கள், தாங்கள் செய்வது சரி எது, தவறு எது என்பதைப் புரிந்துகொள்ளும் அளவிற்குப் போதிய மன முதிர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
எனவே, தற்போதைய இந்த போக்கை கருத்திற்கொண்டு, குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களுக்கான வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைப்பது குறித்து நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் பரிசீலிக்க வேண்டிய நேரம் இது.
இந்த முக்கியமான விஷயத்தையும் அரசு உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும்” என நீதிபதி பதருதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் 23 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்ற அப்காரி சட்டத்தின் கீழ், விற்பனையை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் கேளர கலால்துறை ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்லத்தைச் சேர்ந்த வினோத் விக்ரமன் பிள்ளை என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது நீதிமன்றம் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளது.
கேரள அப்காரி சட்டத்தின் (Kerala Abkari Act) கீழ் 23 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கத் தடை இருந்தபோதிலும், மதுபானக் கூடங்களில் (Bars) வயது குறைந்தவர்களுக்கு மது வழங்கப்படுவதைக் கண்டித்து, இதனை தடுக்க நடவடிக்கைக் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கேளர மாநிலம் நெடும்பாஞ்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற மினி கூப்பர் கார் விபத்தை சுட்டிக்காட்டி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.