நதிகளில் நீரின் தரம் குறைந்தால் மாநிலங்களுக்கு கடும் அபராதம்- உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
1 min read
Supreme Court warns of heavy fines for states if water quality in rivers declines
16.11.2026
யமுனை நதியை தூய்மைப்படுத்த பல கோடி ரூபாய் செலவிட்ட போதும், நதியின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், நதி பாயும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நீரின் தரம் குறைந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
உ.பி.,யின் நொய்டா நிர்வாகம் மற்றும் உத்தர பிரதேச அரசு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் அமர்வு, சமீபத்தில் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள நகரங்கள், கிராமங்களில் உள்ள உள்ளாட்சி நிர்வாகத்தின் முழுமையான தோல்வியையே அந்த நதியின் மோசமான நிலை பிரதிபலிக்கிறது. 520 கழிவுநீர் கால்வாய்கள் மூலம் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், யமுனை நதியில் கலக்கப்படுகிறது. எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது.
யமுனை நதி மற்றும் அதில் கலக்கும் முக்கிய கால்வாய்கள் ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசம் மற்றும் மாவட்டத்திற்குள் நுழையும் இடங்களிலும், வெளியேறும் இடங்களிலும் நீரின் தரத்தை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
நதியை துாய்மைப்படுத்த பல கோடி ரூபாய் செலவிட்ட போதும், நதியின் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. ஒரு மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது மாவட்டத்தின் வழியாக யமுனை நதி பாயும் போது அல்லது வெளியேறும் போது, எந்தவொரு அளவுகோலிலும் நீரின் தரம் குறைந்தால், அந்த மாநிலம், யூனியன் பிரதேசம் அல்லது மாவட்ட நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். அவற்றுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும்.
யமுனை நதி என்பது ஒருங்கிணைந்த ஒரே அமைப்பு என்பதால், அந்த நதி பாயும் அனைத்து மாநிலங்களும் அதை பாதுகாக்க கடமைப்பட்டுள்ளன. எனினும், ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. அந்தந்த மாநிலம் நதியில் கலக்கும் மாசின் அளவு மற்றும் அதை கட்டுப்படுத்தும் திறனை பொறுத்தே அவற்றின் பொறுப்பு மற்றும் அபராதம் தீர்மானிக்கப்படும். இத்திட்டத்தை ஒருங்கிணைக்க, யமுனை நதி படுகை மாநிலங்களின் தலைமை செயலர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், இரு வாரங்களுக்குள் சிறப்பு செயலர் அந்தஸ்தில் மூத்த அதிகாரி ஒருவரை ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை 2027 ஜன., 13க்கு ஒத்தி வைத்தது.
டெல்லியில், சமீபத்தில் கொண்டாடப்பட்ட, ‘சாத்’ பூஜை பண்டிகையின் போது, பக்தர்கள் புனித நீராடும் யமுனை நதியில் அடர்த்தியான நச்சு நுரை படர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.