தென்காசி கலெக்டரிடம் பா.ஜ.க, மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி கோரிக்கை
1 min read
BJP District President Anandan Ayyasamy submits a request to the Tenkasi Collector
17.11.2026
தென்காசி மாவட்ட பாஜக தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, புதிதாகப் பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் மோனிகா ராணா அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி ஐந்து கோரிக்கை மனுக்களை அளித்தார்.
- ரயில்வே சுரங்கப்பாதை சென்னிகுளம்–குவளைக்கண்ணி இடையே மூடப்பட்ட ரயில்வே கேட் (LC-463) அருகே தண்டவாளத்தைக் கடந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழப்புகளைத் தடுக்க சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்கவும், கூட்டு ஆய்வு நடத்தி இடைக்காலப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் கோரினார்.
- கீழூர் ராமசாமியாபுரம் சாலை 110க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்திய ஒரே பாதை அடைக்கப்பட்டுள்ளதால், பேச்சுவார்த்தை மூலம் பாதையைத் திறக்கவும், உரிய இழப்பீட்டுடன் நிலத்தைக் கையகப்படுத்தி ரூ.30 லட்சம் சாலைத் திட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தினார்.
தேசிய நெடுஞ்சாலை 744
சுப்பிரமணியபுரம் ஊராட்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதைத் தடுத்து, மாற்று மூடிய வடிகால் அமைக்கவும், சாலையைச் சீரமைக்கவும் கோரினார்.
சுரண்டை வளர்ச்சித் திட்டங்கள்
அரசு மருத்துவமனை விரிவாக்கம், 24 மணி நேர மருத்துவர்கள், பிரதமரின் வீட்டு வசதித் திட்ட வீடுகள், அண்ணா சிலை சுற்றுச்சுவர் அகற்றம், புறவழிச்சாலை மற்றும் தெருவிளக்குகள், தினசரி குடிநீர், செண்பகம் கால்வாய் தூர்வாருதல், கீழச்சுரண்டை பேருந்து நிலையச் சீரமைப்பு, விவசாய விளைபொருள் சேமிப்புக் கிடங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
செண்பகவல்லி தடுப்பணை
1967ல் உடைந்த தடுப்பணையைச் சீரமைக்க ஆனந்தன் அய்யாசாமி தொடர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கு நவம்பர் 26ல் விசாரணைக்கு வருகிறது. தடுப்பணையை நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்த அனுமதி, வனத்துறை பாதுகாப்பு, கேரள அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஆனந்தன் அய்யாசாமி கூறும்போது, “நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் இவை. பலமுறை மனு அளித்தும் தீர்வு கிடைக்கவில்லை. புதிய மாவட்ட நிர்வாகம் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம். இரண்டு உயிர்களை இழந்த பிறகும் மூன்றாவது உயிரிழப்புக்காகக் காத்திருக்கக் கூடாது,” என்றார்.
அப்போது தென்காசி நகர பாஜக தலைவர் சங்கரசுப்பிரமணியன், சுரண்டை தலைவர் கணேசன், நிர்வாகிகள் லட்சுமணபெருமாள், நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர்.