பரமக்குடியில் மதுபானக் கடையை அகற்ற கோரி மறியல் -54 பேர் கைது
1 min read
Protest demanding the removal of a liquor shop in Paramakudi – 54 people arrested
21.11.2026
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பு பகுதியான முதுகுளத்தூர் செல்லும் சாலையில் எண் 6806 மதுபானக் கடை கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இக் கடை போக்குவரத்து மிகுந்த பகுதி மற்றும் கோவில்கள், மருத்துவமனைகள்,பள்ளிகள் அமைந்த பகுதியில் அமைந்துள்ளதால் கல்வி நிலையங்களுக்கு சென்று வருபவர்கள், பெண்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதையடுத்து மதுபானக் கடையை இப்பகுதியில் இருந்து அகற்ற வேண்டுமென தாய் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் பி.எம்.பாண்டியன் தலைமையில் தோழமை கட்சிகள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட மதுபான மேலாளர் ஆகியோரை பல மாதங்களாக நேரில் சந்தித்து
வலியுறுத்தியும், பல ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் இதுநாள்வரை எவ்வித பயனும் ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஐந்து முனை சந்திப்பு சமீபம் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் மதுபானக் கடையை அகற்ற வலியுத்தி நேற்று பிற்பகல்
தாய் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் பி.எம்.பாண்டியன் தலைமையில் தமிழ் புலிகள் கட்சி,ஆதித் தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட தோழமை கட்சியினர் பரமக்குடி ஐந்து முனை சந்திப்பு மதுரை – ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 25 நிமிடம் சாலை போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சுகுமாறன், நகர் காவல் ஆய்வாளர் பார்த்திபன், மதுபான சில்லரை விற்பனை உதவி மேலாளர் முருகவேல்,பரமக்குடி மண்டல துணை வட்டாட்சியர் எம். முத்துராமன்,வருவாய் ஆய்வாளர் ஆர்.தவநீதி,கிராம நிர்வாக அலுவலர் (காட்டுபரமக்குடி) செல்வஹரீஸ் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் ஐந்து முனை சந்திப்பு சமீபம் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மதுபானக் கடையை(எண் 6806) 45 நாட்களுக்குள் அகற்றுவது என மதுபான சில்லரை விற்பனை உதவி மேலாளர் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தாய் தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் பி.எம். பாண்டியன் தலைமையில் 54 க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின்பு மாலையில் விடுதலை செய்யப் பட்டனர்.
-குணாளன்,நிருபர்