திருப்பரங்குன்றம் மலை மீது தீபம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்
1 min read
Deepam on Tiruparankundram Hill: Tamil Nadu government files review petition in the Supreme Court
22.11.2026
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் தர்கா நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல், கார்த்திகை திருநாளன்று பக்தர்கள் அனைவரையும் மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கக் கோரியும், தொல்லியல் துறை அனுமதி பெற வேண்டும் என்ற சரத்துக்கு எதிராகவும் ராம ரவிக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல்.எம்.பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இரு தரப்பும் மூன்று நாட்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற ஒருமுறை மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே, வரும் கார்த்திகை தீபத்தன்று (நவம்பர் 24) ஒருநாள் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஒருமுறை அனுமதி அளிப்பது பின்னாளில் ஒரு முன்னுதாரணமாக மாறிவிடக்கூடும் என்பதால் ஏற்படும் அபாயங்களை நீதிமன்றம் உணர்ந்திருக்கிறது. எனினும், உயர் நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் தீபம் ஏற்ற அனுமதி அளித்திருப்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்கிறது.
அதேசமயம், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை ஓர் இன்றியமையாத நடைமுறையாக உறுதி செய்து கடந்த ஜனவரி 6 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் இறுதி கருத்துகளுக்கு தடை விதிக்கப்படுகிறது
நவம்பர் 24 அன்று தீபம் ஏற்றும் குழுவில் இடம் பெறுபவர்களை கோயில் நிர்வாகம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். இந்த நிகழ்வுக்கான பொறுப்பு அதிகாரியாக மதுரை மாவட்ட ஆட்சியர் செயல்படுவார். பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல் ஆணையர் மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்களைக் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊர்வலங்கள் நடத்தவோ, முழக்கங்களை எழுப்பவோ அல்லது பொதுமக்கள் ஒன்றுகூடவோ அனுமதி இல்லை. தீபம் ஏற்றும் இடத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தீபம் ஏற்றியவுடன் அந்த குழுவினர் உடனடியாக தீபத்தூண் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அங்கு தற்காலிகமான அல்லது நிரந்தரமான எந்தவொரு அமைப்பையும் விட்டுச் செல்லக்கூடாது.
மலையில் உள்ள தர்கா உட்பட எந்தவொரு மதச் சின்னத்துக்கும் எவ்வித சேதமோ அல்லது மாற்றமோ செய்யக் கூடாது. தர்காவுக்குச் செல்லும் பக்தர்களின் வழிபாடடு உரிமையிலோ அல்லது அவர்கள் தர்காவை பயன்படுத்துவதிலோ எந்தவித இடையூறும் செய்யக்கூடாது.
தீபத்தூண் மீது விளக்கேற்ற அனுமதிக்கும் இந்த இடைக்கால உத்தரவு யாருக்கும் எந்தவொரு சட்டப்பூர்வமான உரிமையையும் வழங்காது. வரும் ஆண்டுகளில் இதை ஒரு முன்னுதாரணமாகக் கருதக்கூடாது.
மாநில அரசு எழுப்பிய சிக்கல்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படும். நவம்பர் 24 ன்று தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், உடனடி மற்றும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டே இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 24-ம் தேதிக்கான இந்த அனுமதி, ஓர் இன்றியமையாத மத நடைமுறையாக அங்கீகரிக்கப்பட்டதாக எவரும் கருதவோ அல்லது முடிவு செய்யவோ கூடாது. வெவ்வேறு நம்பிக்கை கொண்டவர்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன் தங்கள் மத உரிமைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்த நிகழ்வு முடிந்த மூன்று நாட்களுக்குள் இது குறித்த நிலை அறிக்கையை மாவட்ட ஆட்சியர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 2027-ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இரண்டாவது வரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று (நவ. 21) நள்ளிரவில் அவசரமாகச் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபம் வரவுள்ளதால் இம்மனு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் நிலையில், இன்று வரை விசாரணைக்காகப் பட்டியலிடப்படவில்லை. நாளை பட்டியலிடப்பலாம் என்று தெரிகிறது.