திருவண்ணாமலையில் மகாதீபம்
1 min read
Maha Deepam in Tiruvannamalai
24.11.2026
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் இன்று (நவ. 24) மாலை 6 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்படுவதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணிதீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பஞ்சமூர்த்திகள் சாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
இதைத்தொடர்ந்து 6 மணிக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர், சாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வந்து ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
அர்த்தநாரீஸ்வரர் காட்சி தந்ததும் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில் மலைஉச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது கோவிலில் கூடியிருக்கும் பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி கோஷமி்ட்டனர்.
மகா தீபம் ஏற்றப்பட்டதும் கிரிவலப்பாதையில் இருக்கும் பக்தர்கள் மலையை நோக்கி மகாதீபத்தை வணங்கினார்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து இருந்தனர்.