November 24, 2026

Seithi Saral

Tamil News Channel

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது

1 min read

A new low-pressure area is forming in the Bay of Bengal

24.11.2026
தமிழகத்தில் சென்னை உட்பட ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகி உள்ளது. நேற்று இரவு முதல் மிதமாகவும் சில நேரங்களில் கனமழையாகவும் கொட்டியது.

இந்த நிலையில் கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட அனேக மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தெற்கு அல்லது தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரு சில நாட்களில் உருவாக வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் தமிழகத்திற்கு அதிக மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் துரை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இதுவரையில் பற்றாக்குறையாகவே உள்ளது. அக்டோபர் மாதத்தில் 17 செ.மீ., நவம்பர் மாதத்தில் 18 செ.மீ. சராசரியாக இக்காலகட்டத்தில் மழை பொழிவு இருக்க வேண்டும். ஆனால் நவம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.

டிசம்பர் மாதத்தில் 9 செ.மீ. மழை சராசரியாக பெய்ய வேண்டும். இதுவரையில் பற்றாக்குறை அளவில் பருவமழை இருந்து வருகிறது.

இந்த நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. அது பற்றிய அறிவிப்பு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வெளியாகும்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலையில் தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கலாம். அது தாழ்வு மண்டலமாக அடுத்தடுத்து வலுப்பெறுமா, புயலாக மாறுமா என்பது பற்றி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பருவமழை காலத்தில் இதுவரை 3 புயல்கள் உருவாகி அவை ஆந்திரா நோக்கி சென்றுள்ளது. அதனால் கனமழையை கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தமிழகத்தை ஏமாற்றி சென்றது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *