பிஸ்லெரி குடிநீர் விவகாரம்: பாக்கெட் குடிநீர் மாதிரிகளைச் சேகரித்து மத்திய அரசு பரிசோதனை
1 min read
Bisleri drinking water issue: Central government collects samples of packaged drinking water for testing
26.11.2026
பிஸ்லெரி குடிநீர் விவகாரம் எதிரொலியாக நாடு முழுவதும் பாக்கெட் குடிநீர் மாதிரிகளைச் சேக ரித்து பரிசோதனை செய்ய உள்ளதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
கோவாவில் தயாரிக்கப்பட்ட பிஸ்லெரி நிறுவனத்தின் குறிப்பிட்ட ஒரு தொகுதி பாக்கெட் குடிநீர் மாதிரி ஆய்வகப் பரிசோதனையில் தோல்வியடைந்தது. அதாவது ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவை விட புரோமேட் அதிகமாக இருந்ததும், பின்னர் நடத்தப்பட்ட மேல்முறையீட்டு ஆய்வில் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும் ‘பாலிநியூக்ளியர் அரோமேடிக் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் பாக்கெட் குடிநீர் மாதிரிகளையும் சேகரித்து, அவற்றின் தரத்தைப் பரிசோதிக்கும் பணியில் உணவு பாதுகாப்பு ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரஜித் புன்ஹானி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் “நாடு முழுவதும் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தியா மிகப்பெரிய நாடு என்பதால், அனைத்து மாதிரிகளையும் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிட ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் நோக்கி பால், இறைச்சி, முட்டை, தானியங்கள் மற்றும் குளிர்பானங்கள் வரிசையில் தற்போது குடிநீரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் பேக்கேஜிங் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதிசெய்ய விரைவில் ஆய்வு தொடங்கப்படும். தவறான விளம்பரங்கள் மற்றும் லேபிளிங் தொடர்பான புகார்கள் மீதும் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.