November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: நாளை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்

1 min read

Kashi Tamil Sangamam event: Vice President C.P. Radhakrishnan to inaugurate it tomorrow

27.11.2026
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான பண்பாடு, மொழி, நாகரிகத் தொடர்புகளை வலுப்படுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலில் நடத்தப்படும் இந்த நிகழ்வு, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற உணர்வை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

காசி தமிழ் சங்கமத்தின் ஐந்தாவது ஆண்டு நிகழ்வை (காசி தமிழ் சங்கமம் 5.0) துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (2026 நவம்பர் 28) வாரணாசியில் தொடங்கி வைக்கிறார். டிசம்பர் 12-ம் தேதி வரை நடைபெறும் இந்நிகழ்வின் நிறைவு விழாவில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார்.

இந்த ஆண்டின் கருப்பொருள் ‘திருக்குறள் பயில்வோம்’ என்பதாகும். திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் உள்ள 1,330 குறள்கள் அறம், பொருள், இன்பம் என மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன. அவற்றில் இடம்பெற்றுள்ள வாழ்வியல் கருத்துகளை இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் அறிந்து அன்றாட வாழ்வில் பின்பற்றச் செய்வதே இந்நிகழ்வின் நோக்கமாகும்.

தமிழ்நாட்டிலிருந்து சுமார் 1,400 பேர் ஏழு குழுக்களாக இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 200 பேர் இடம்பெறுவர். 8 நாட்கள் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்தில் நான்கு நாட்கள், சுற்றுலா தொடர்பான நிகழ்வுகளிலும், நான்கு நாட்கள், பிற நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், தொழில் வல்லுநர்கள், கைவினைக் கலைஞர்கள், பெண்கள், ஆன்மிகத் தலைவர்கள் எனப் பல்வேறு பிரிவினர் இதில் பங்கேற்கின்றனர்.

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில், சாரநாத், ராம்நகர் கோட்டை, பாரத மாதா கோயில் ஆகிய இடங்களை அவர்கள் பார்வையிடுவார்கள். கங்கா ஆரத்தி, கங்கையில் நீராடுதல், கல்வி சார்ந்த கலந்துரையாடல்கள், கலை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கின்றனர். பிரயாக்ராஜில் திரிவேணி சங்கமத்தையும், அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவிலையும் அவர்கள் பார்வையிடுவார்கள். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பூர்வீக இல்லம், கேதார் காட், காசி மடம் ஆகிய இடங்களுக்கும் அவர்கள் செல்வார்கள்.

காசி தமிழ் சங்கமத்தின்போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 ஆசிரியர்கள் உத்தரப் பிரதேசத்திற்குச் சென்று பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்பிக்க உள்ளனர். வாரணாசி பள்ளிகளில் வாசிப்புப் பழக்கம், கதை சொல்லுதல் தொடர்பான நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.

திருக்குறள் குறித்த தேசிய மாநாடு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெறும். தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்களுக்கான அரங்குகளும் அமைக்கப்படும்.

மேலும், திருக்குறளின் 1,330 குறள்களும் 22 இந்திய மொழிகளில் மக்களிடம் கொண்டு செல்லப்பட உள்ளன. இதன் மூலம் தமிழின் தொன்மை, திருக்குறளின் வாழ்வியல் கருத்துகள் ஆகியவை நாடு முழுவதும் உள்ள இளைய தலைமுறையினரைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *