தென்காசி மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்
1 min read
‘Vetri’ Women’s Goat Rearing Scheme in Tenkasi District
27/11/2026
தென்காசி மாவட்டத்தில் வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மோனிகா ராணா கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக பகுதியில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நடப்பாண்டில் தகுதி வாய்ந்த ஊரக மகளிருக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் செம்மறி ஆடு, வெள்ளாடுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ரூ.30.000/- மதிப்புள்ள 5 செம்மறி ஆடு/வெள்ளாடுகளும் (அதில் 1 ஆண் கிடா, 4 பெண் ஆடுகள் அல்லது 5பெண் ஆடுகளும்.) அதற்குரிய காப்பீடு(2 ஆண்டுகளுக்கான) வழங்கப்பட்ட ஆடுகளை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து, மற்றும் தீவன செலவினத்திற்காக ரூ.2,500/- வழங்கப்படும். ஆடுகள் நல்ல முறையில் பராமரித்து வருவோர்க்கு ஓராண்டுக்கு பிறகு ரூ.2,000/- ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
இத்திட்டத்தில் 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட ஆதரவற்ற விதவைகள். கணவரால் கைவிடப்பட்ட மகளிர், திருநார்கள், மாற்றுத்திறனாளி மகளிர், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் அல்லது மாற்றுத்திறனுடைய குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட மகளிர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பயனாளிகள் / குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நிலம் உள்ளவர்கள். குடும்ப ஆண்டு வருமானம் 2.5 இலட்சத்திற்கு மேல் உள்ளவர்கள். ஏற்கனவே கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக கால்நடைகள் வழங்கிய திட்டத்தில் பயன்பெற்றவர்கள், கால்நடை வைத்திருப்பவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கோழியினம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க இயலாது.
இத்திட்டம் தென்காசி மாவட்டத்தில் வளமிகு வட்டார வளர்ச்சி திட்டம் ஃபோகஸ் பிளாக் டெவலப்மென்ட் திட்டம் மற்றும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டம் செயல்படும்.
குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடப்பாண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப் படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சி ஒன்றியங்கள் குறித்த மாவட்ட இணையதளம் www.tenkasi.nic.in” மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இணையதளத்தில் (www.ahd.tn.gov.in) அறிந்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தெரியாதவர்கள் கீழ்கண்ட நிலையங்களில் உள்ள விண்ணப்ப உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்.
- கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் அலுவலக மையம். தென்காசி. (இருப்பு ஆலங்குளம்)
- அனைத்து கால்நடை நிலையங்கள் குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் இது குறித்து மேலும் அறிய அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகவும்.
டொமைன் பெயர்: tnahschemes.tn.gov.in
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மேற்கண்ட இணையதளத்தின் மூலம் 27.11.2026 முதல் 17.12.2026 வரை விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் மோனிகா ராணா. தெரிவித்துள்ளார்.