November 27, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 340 ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.1,037.70 கோடி ஒதுக்கீடு

1 min read

Rs 1,037.70 crore allocated to upgrade 340 panchayat roads to district roads in Tamil Nadu

27.11.2026
தமிழகத்தில் 340 ஊராட்சி சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த ரூ.1,037.70 கோடி ஒதுக்கீடு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:-

ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 340 ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகள் தரத்திற்கு உயர்த்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2026–27ஆம் ஆண்டுக்கான நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானிய கோரிக்கையின் போது, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் , கிராமப்புற போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தை அறிவித்தார். பள்ளிகள், மருத்துவ நிலையங்கள், சந்தைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை கிராமப்புற மக்கள் எளிதாக அணுகும் வகையில், ஆண்டுதோறும் ரூ.2,550 கோடி மதிப்பீட்டில் 2,000 கி.மீ. நீளமுள்ள கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

போக்குவரத்து அளவின் அடிப்படையில், ஆண்டுதோறும் 1,000 கி.மீ. நீளமுள்ள ஒற்றை வழித்தட இதர மாவட்ட சாலைகள் ரூ.1,300 கோடி மதிப்பீட்டில் இடைநிலை வழித்தடமாக அகலப்படுத்தப்படும். மேலும், 1,000 கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் ரூ.1,250 கோடி மதிப்பீட்டில் இதர மாவட்ட சாலைகள் தரத்திற்கு உயர்த்தப்படும்.

இத்திட்டத்தின் ஊராட்சி சாலைகள் மேம்பாட்டுப் பிரிவின்கீழ், ரூ.1,037.70 கோடி மதிப்பீட்டில் 797.13 கி.மீ. நீளமுள்ள 340 கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலைகள் தரத்திற்கு உயர்த்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மண்டலத்தில் 226.83 கி.மீ. நீளமுள்ள 103 சாலைகள் ரூ.316.41 கோடியிலும், கோயம்புத்தூர் மண்டலத்தில் 326.21 கி.மீ. நீளமுள்ள 131 சாலைகள் ரூ.410.77 கோடியிலும், மதுரை மண்டலத்தில் 66.66 கி.மீ. நீளமுள்ள 29 சாலைகள் ரூ.88.28 கோடியிலும், திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 177.43 கி.மீ. நீளமுள்ள 77 சாலைகள் ரூ.222.24 கோடியிலும் தரம் உயர்த்தப்படவுள்ளன.

சாலைகளின் நிலை, உள்ளூர் தேவைகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு இச்சாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *