தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது
1 min read
TVK MLA Arul Vignesh arrested
27/11/2026
பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி (தனி) த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரான அருள் விக்னேஷ் (வயது 36), தனது செல்போனில் இருந்து கடந்த ஜூலை மாதம் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். இதுகுறித்து பெண் கலெக்டர் கொடுத்த புகாரின் பேரில் அருள் விக்னேஷ் எம்.எல்.ஏ. மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷனாஸ் விசாரணை மேற்கொண்டார்.
இதற்கிடையே இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரியாக ஐ.ஜி. காமினி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிருஷ்டி சிங் நேற்று முன்தினம் தனது விசாரணையை தொடங்கினார்.
கலெக்டரின் முகாம் அலுவலகத்திற்கு நேரில் சென்று பெண் கலெக்டரிடம் 1½ மணி நேரம் விசாரணை நடத்தினார். மேலும் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட உயர் அதிகாரிகளிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கை கண்காணிக்கும் கண்காணிப்பு அதிகாரியான ஐ.ஜி. காமினி நேற்று காலை 9.30 மணியளவில் கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். தொடர்ந்து விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. காமினி ஆகியோர் காலை 10 மணியளவில் கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு சென்றனர்.
தொடர்ந்து கண்காணிப்பு அதிகாரி ஐ.ஜி. காமினி முன்னிலையில் மாவட்ட பெண் கலெக்டரிடம் விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங், தீவிர விசாரணை மேற்கொண்டார். இதில் செல்போனில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி என்ன?, எம்.எல்.ஏ. மூலம் கொடுக்கப்பட்ட தொந்தரவுகள் என்னென்ன? என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டு அதை அறிக்கையாக தயார் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணை மதியம் 12 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ. தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக, மாவட்ட பெண் கலெக்டர் ரகசிய வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று மதியம் கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வந்தார். அங்கு கள்ளக்குறிச்சி குற்றவியல் விரைவு நீதிமன்ற நீதிபதியின் தனி அறைக்கு கலெக்டர் சென்றார். பின்னர் அந்த அறையின் கதவு மூடப்பட்டது. நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் கலெக்டர் ஆஜராகி அருள்விக்னேஷ் எம்.எல்.ஏ. தனக்கு அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தி தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
முன்னதாக இந்த வழக்கில் சாட்சியங்களாக சேர்க்கப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, கோட்டாட்சியர் முருகன், தாசில்தார் சேகர் மற்றும் கலெக்டரின் பாதுகாவலர், உதவியாளர்கள் ஆகியோர் நீதிபதி சுவாதி அழகப்பன் முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். முன்னதாக அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்பட்ட நிலையில், இதுவரை ராஜினாமா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.