ஆசிட் சில்லறை விற்பனைக்கு தடை – உச்சநீதிமன்றம் பரிந்துரை
1 min read
Ban on retail sale of acid – Supreme Court recommendation
29.11.2026
ஆசிட் சில்லறை விற்பனையை முழுமையாகத் தடை செய்வது குறித்து மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஷாஹீன் மாலிக் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே அரசு மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருந்தகங்கள் வழியாக ஆசிட் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கும் சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவ அதிகாரி அல்லது சிவில் சர்ஜனிடம் முன்கூட்டிய எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெற வேண்டும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
ஆசிட் வாங்கும் நபர்கள், தாங்கள் வாங்கிய ஆசிட் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அல்லது திசைதிருப்பப்பட்டால், தங்களுக்குத் தெரியாது என்று கூறினாலும் அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டிய நிலை உருவாகும் என்று உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ள கட்டமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு விற்பனையும் குறிப்பிட்ட படிவத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்றும், அதில் வாங்குபவரின் அடையாளம், ஆதார் அல்லது அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை, முகவரி, தொடர்பு விவரங்கள், வாங்கப்படும் அளவு மற்றும் நோக்கம் ஆகியவை பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், தவறாகப் பயன்படுத்தப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைச் செலவுக்காக வாங்குபவரின் அசையாச் சொத்து விவரங்களைச் சேகரித்து அவற்றை இணைக்கும் யோசனையையும் அமர்வு முன்வைத்துள்ளது.
ஆன்லைன் உள்ளிட்ட தனிநபர்களின் சில்லறை ஆசிட் விற்பனையைத் தடுப்பதுடன், அமிலத் தாக்குதல் தடுப்பு மற்றும் அவசரகால உதவி குறித்த பாடங்களைப் பள்ளி மற்றும் கல்லூரிப் பாடத்திட்டங்களில் சேர்க்கவும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி. பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய சட்ட சேவைகள் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், மாநில அதிகாரிகள், தீக்காய சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இதற்கான குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முந்தைய வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், சந்தையிலும் இணையத்திலும் ஆசிட் எளிதாகக் கிடைப்பதும், வழக்கு விசாரணைகள் மற்றும் மறுவாழ்வில் ஏற்படும் தாமதங்களும் தொடர்ந்து கவலையளிப்பதாகக் கருதி, நடைமுறைப்படுத்தக்கூடிய கடுமையான திட்டத்தை நோக்கி அரசுகள் நகர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.