ஜார்க்கண்ட்: சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
1 min read
Jharkhand: 13 people killed in road accident
29.11.2026
ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தில் இன்று அதிகாலை வேகமாகச் சென்ற எஸ்யூவி கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். குஜு பகுதியில் உள்ள பைங்கி கிராமத்திற்கு அருகே ராஞ்சி – பாட்னா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த அனைவரும் பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கார்பியோ காரில் மூன்று பெண்கள் உட்பட மொத்தம் 13 பேர் பயணித்தபோது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது என்று ராம்கர் துணைக்கோட்டக் காவல்துறை அதிகாரி அலோக் ரஞ்சன் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. விபத்திற்கான துல்லியமான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. வாகனத்தில் 14 பேர் பயணித்துள்ளனர். அதிகாலை 2.30 மணியளவில் அனைவரும் ராம்கர் சதர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், 13 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று ராம்கர் சதர் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் அனில் குமார்தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட கோர சாலை விபத்தில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவருக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.