April 28, 2024

Seithi Saral

Tamil News Channel

மானசீக மகள்-4 (தொடர் கதை- எழுதியவர் கண்ணம்பி ஆ.ரத்தினம்)

1 min read

Manasega Magal- Novel By Kannambi AA.Rathinam

22-2-2020

(தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதால் கோபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி வந்தான் செல்வன். தாய் அவனுடன் வர மறுத்துவிட்டாள். செல்வன் ஒரு அச்சகத்தில் வேலைக்கு சே்ர்ந்தான். அங்கே வேலை பார்க்கம் ரோசி என்ற பெண்ணை காதலித்தான். அவளும் அவனை விரும்பினாள்)

மாலை ஆறு மணிக்கு ரோசி புறப்பட்டுப் போகும்வரை மவுனமே நிலவியது. வழக்கமாக மத்தியானம் அவளும் அவனும் சேர்ந்திருந்துதான் சாப்பிடுவார்கள். அவள் கொண்டு வருவதை அவனுக்கு வைப்பாள். அவன் கொண்டுவருவதை அவளுக்கு வைப்பான். ஆனால் இன்று மத்தியானம் அப்படி எதுவும் பரிமாறிக்கொள்ளவில்லை. எதையோ, எதற்கோ சாப்பிட்டு முடித்து எழுந்துவிட்டார்கள்.
மாலையில் வீட்டுக்குப் புறப்படும்போது செல்வனிடம் வந்தாள். அவள் கண்களில் நீர் பெருகியிருந்தது. “செல்வன்… நாளையிலிருந்து நான் வேலைக்கு வர விரும்பல்ல” என்றாள். அந்தச் சொல் அவன் இதயத்தின் ஆணிவேரை வெட்டி எறிந்ததுபோல் இருந்தது.
“என்ன ரோசி இப்படி சொல்றே. . .” என்றான்.
“உண்மைதான் செல்வன். . . முதலாளி சொன்னது உண்மைதான். கொஞ்ச நாளா எப்பவும் என் மனம் குழம்பிப் போய்தான் இருக்கு. என் மனசுக்குள்ள எப்போதும் கேள்விகள். அதுக்குப் பதில் சொல்லத் தெரியாம தவிக்கிறேன். அதனாலதான் வேலையில் என்னால் முழுக் கவனம் செலுத்த முடியல்ல” என்றாள்.
“அப்படி என்ன குழப்பம்” எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானே…” என்றான் செல்வன்.
“சொல்லணும்னுதான் நினைப்பேன். அடுத்த நிமிடம் எப்படி சொல்றதுன்னு தவிப்பேன். இது நடக்கிற காரியமான்னு. . . தள்ளிப் போட்டுக்கிட்டே போறேன்.” என்றாள்.
“சரி… நீ வராம இருந்தா… நான் எப்படி வேலையில கவனம் செலுத்துறது… ஒரு நாள் நீ வரல்லன்னா என் மனம் படுகிற பாடு எனக்குத்தான் தெரியும்… நீ வராமலே இருந்தா நான் என்ன செய்வேன்” என்று இழுத்து நிறுத்தினான்.
“அதே பாடு எனக்கும் இருக்கு… உன்ன ஒரு நாள் பார்க்கல்லேன்னா என் மனம் படுகிற பாடு எனக்குத்தான் தெரியும். இந்த மனநிலையை வளர்த்துக்கிட்டே போனா அதுக்கு முடிவென்ன” என்கிறதுதான் என் கேள்வி.
“அம்மா, அப்பாகிட்ட இல்லாம தனியா இருக்கிற என் மேல நீ காட்டுன பாசம்தான் ஒரு பிடிப்பை ஏற்படுத்தியிருக்கு. இதுக்கு மேல நீ கொண்டுவர்ற சாப்பாட்டுல எனக்குப் பங்கு குடுக்கிற. பழம் கொண்டு வந்து அதைக்கூட உரிச்சி குடுக்குற… கடலை உருண்டை, எள்ளுருண்டை வீட்ல செய்ற அச்சு முறுக்கு, பலகாரங்கள் கொண்டு வந்து குடுக்கிற… அநாதை போல இருக்கிற எனக்கு நீ காட்டுற அன்புதான் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கு. இந்த நேரத்துல நீ இனி வர மாட்டேன்னு சொன்னா நான் எங்கே போவேன்.” என்று கேட்கும்போது அவன் முகத்தில் கலவரம் படர்ந்தது.
“சரி… இப்படியே ரெண்டுபேரும் அன்பை வளர்த்துக்கிட்டே போனா… நம்மளால பிரிஞ்சி இருக்க முடியாது. நம்ம சேர்ந்து வாழணும். அப்படி நம்மள சேர்ந்து வாழ விடுவாங்களா” பேசும் போது விம்மினாள்.
செல்வனின் கண்கள் கனிந்தன. “அதை நினைச்சா நெஞ்சை பெயர்த்தெடுத்தது போலத்தான் இருக்கு. என்ன செய்றது வேற வேற ஜாதியில பிறந்திட்டோம், வேற வேற மதத்தில பிறந்திட்டோம். மனசு மட்டும் வேற வேறயா இருக்க முடியாம எப்படி ஒண்ணு சேர்ந்ததுன்னு தெரியல்ல.”
“வேற… வேற ஜாதி, வேறு வேற மதம் இதையெல்லாம் வேரோடு பிடுங்கி எறியுறதுக்குத் துணிச்சல் இருந்தா நம்மளால ஒண்ணுசேர முடியும். ஆனா துணிச்சல் இல்லியே. . . நான் என் குடும்பத்தைப் பெரிசா எடுக்காம இருக்கணும், நீ உன் குடும்பத்தை பெரிசா எடுக்காம இருக்கணும். குடும்பத்தில் நம்ம விருப்பத்த சொல்லிப் பாக்கணும். நம்மள சேர்த்துவைக்க அவங்க விரும்பல்லன்னா… அப்புறம் நாமாக ஒரு முடிவு எடுக்கணும். உன்னால முடியுமா?” என்றாள்.
“எனக்குத்தான் குடும்பம் இல்லியே… அப்பா குடிகாரர். அம்மா என்னோட வரமாட்டேன்னுட்டாங்க. நான் அநாதை. இந்த அநாதைக்குத் துணையா இருக்கணும்னு உனக்குத் துணிச்சல் இருந்தாதான் நம்ம ஒண்ணு சேரமுடியும்” என்றான் செல்வன்.
“சரி முதல்ல எங்கம்மாகிட்ட பேசிப் பார்க்கிறேன். அப்புறம் நடக்கிறத பிறகு யோசிப்போம்” என்றாள் ரோசி.
“அப்படின்னா… நாளைக்கு வருவியா, மாட்டியா?”
உன்னைப் பார்க்காம ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளைத் தள்ளுறதே ஒரு யுகமா இருக்கு. நான் எப்படி வராம இருக்கப் போறேன். ஏதோ வாய் பேசுது. மனசு மவுனம் சாதிக்குது” என்றாள் பெருமூச்சுடன்.
இருவரும் பிரியா விடை பெற்றார்கள்.
அவள் பஸ் நிறுத்தம் சென்றாள். பஸ்ஸில் ஏறி அச்சகம் வழியாகத்தான் அவள் ஊருக்குப் போக வேண்டும். ஒவ்வொரு நாளும் அவள் பஸ்ஸிலிருந்து பார்வைக் கொக்கியால் அவனைக் கவ்வாமல் போகமாட்டாள்.
கடற்கரை நோக்கிச் செல்லும் பஸ் அது. கடற்கரையில்தான் அவள் வீடு. அவள் படிக்கும்போது திருக்குறளை ஆழ்ந்து படித்தாள். வள்ளலார் நூல்களை ஆழ்ந்து படித்தாள். அவள் மனதில் ஜீவகாருண்ய சிந்தனை வளர்ந்தது. உயிர்களைக் கொல்வது பாவம், தின்பது பாவம் என்ற சிந்தனை அவள் உள்ளத்தில் ஊறி வளர்ந்தது.
*
செல்வன் பெரிய அளவில் படிக்காதவன். அவனையும் நன்றாகப் படிக்க செய்யவேண்டும். அவளுடைய ஊர் நூலகத்திலிருந்து பல புத்தகங்கள் எடுத்து கொண்டுவந்து கொடுத்தாள்.
“இரவு தனியாக அறையில்தானே இருக்கிறே… எதையும் நினைச்சி மனதைக் குழப்பிக்கொள்ளாமல் இருக்கணும்னா ஏதாவது நல்ல புத்தகம் படிச்சிக்கிட்டேயிருக்கணும். அந்தப் புத்தகம் நம்மகிட்ட பேசிக்கிட்டேயிருக்கிற மாதிரியிருக்கும். புத்தகம் பேசாது. அத எழுதியவர் நம்மகிட்ட பேசிக்கிட்டிருக்கிற மாதிரி ஆறுதலா இருக்கும்.” என்று சொல்லி முதலில் திருக்குறள் கொண்டு கொடுத்தாள்.
“திருக்குறள் படிக்கிற அளவுக்கு நானென்ன உன்னை மாதிரி இலக்கியமா படிச்சிருக்கேன். . . வாத்தியார் இல்லாம எப்படிப் படிக்கிறது? என்று கேட்டான்.
“சரி… இன்று முதல் நான்தான் உனக்கு வாத்தியார்… தினமும் சாயங்காலம் வேலை முடிஞ்சதும் ஒரு மணி நேரம் உனக்கு கிளாஸ் எடுக்கப்போறேன்” என்றாள்.
“அப்படின்னா… நீ வாத்தியார்… நான் மாணவனா. . . நல்லாயிருக்கு. அப்புறம் நான் என்னைக்கு கணவனாகிறது?”
“ஆசையைப் பாரு… ஆசையை, கணவன் ஆகுறது சர்வ சாதாரணம். அறிஞன் ஆகுறதுதான் பெரிய விஷயம். உன்னை ஒரு அறிஞனாக, கவிஞனாகத்தான் பார்க்க ஆசைப்படுகிறேன். உனக்குள்ளே ஒரு ஞானம் இருக்கு. அந்த ஞானத்தை அறிவைக் கொண்டு வளர்க்க முடியும். உன் ஞானம் உலகத்துக்குப் பயன்படணும். அப்படி ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழணும் என்பதுதான் என் ஆசை.” என்று சொல்லி முடித்தாள்.
“ஆசையெல்லாம் நல்லாதான் இருக்கு. அறையில் பாடம் நடக்குதா… அல்லது வேற ஏதாவது நடக்குதான்னு முதலாளி சந்தேகப்பட்டா என்ன பண்றது? நீ எனக்கு பாடம் சொல்லித் தந்துவிட்டு இருட்டான பிறகு போனா வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா” என்று கேட்டான்.
“அதை நான் பார்த்துக்கிறேன்… நம்ம பாடத்தை ஆரம்பிப்போம். அப்புறம் ஏதாவது பிரச்சினை வந்தா யோசிப்போம். என்றாள் ஆசுவாசமாக.
“பிரச்சினை ஒண்ணுமில்ல… நீ… ரெம்ப அழகா இருக்கிறே… தனியறையில கையை, கால வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியுமான்னுதான் யோசிக்கிறேன்.” என்று சொற்களை இழுத்து நிறுத்தினான்.
“சபலங்களைச் சவால் ஆக்கிக் காட்டணும். அதைத்தான் பெரியவங்க சொல்லியிருக்கிறாங்க. நீயும் அழகா லட்சணமாதான் இருக்கிறே… நீ சிரிக்கிற சிரிப்பே ஆளை மயக்கும். மயக்கினாலும் அதுக்கெல்லாம் நம்ம அடிமையாகிடக் கூடாது. நான் பைபிள் படிச்சவ. எங்க வீட்லதான் சர்ச் சாவி தொங்குது. அது எப்போதும் என்னை நேர்வழியில்தான் போகச் சொல்லத் தூண்டுமே தவிர குறுக்குவழியில் போகச் சொல்லாது” என்று சொற்களை அடுக்கி வைத்தாள்.
அடுத்த நாள் ரோசி செல்வனுக்குத் திருக்குறள் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினாள். அவள் சொல்லுகின்ற ஒவ்வொரு சொல்லும் அவள் உள்ளத்தில் கூடு கட்டின. கூட கோபுரமாக வளர்ந்தது. திருக்குறளில் உள்ள 1330 குறளும் மனப்பாடமாகி விட்டது. பல அறிஞர்களின் உரைகளைக் கற்றான். எந்த அதிகாரத்தில் எந்தக் குறளைக் கேட்டாலும் பாட்டும் பொருளும் சொல்கின்ற நிலைக்கு உயர்ந்தான். வானொலியில் ‘குறள் கூறும் சிந்தனை’ என்ற தலைப்பில் அவன் பேச்சு மூன்று நாட்கள் வானொலியில் ஒலி பரப்பானது. செல்வனின் பேச்சு பல நேயர்களால் வரவேற்கப்பட்டது. பலரிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்தன. தொடர்ந்து திருக்குறள் என்னும் கடலின் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்க முயன்றான். பல நூல்கள் கற்றான். கற்கக் கற்க நூல்களில் அந்தக் கருத்துக்களைப் பதிவு செய்ய விரும்பினான். எழுதினான்… எழுதினான். பல நூல்கள் வெளிவந்தன. பல ஊர்களில் செல்வனைச் சொற்பொழிவாற்ற அழைத்தனர். அழைப்புக்கு மறுப்பு சொல்லாமல் விழாக்களில் கலந்துகொண்டான். அவனை முதல் தரப் பேச்சாளன் என்று எல்லாரும் பாராட்டினர். இருபது வயதில் பெரிய அறிவு பெற்றுவிட்டான். அவனது பரிணாம வளர்ச்சி எழுத்தாளனாகவும் பேச்சாளனாகவும் பரிமாணம் பெறச்செய்தது.
செல்வனின் திறமையும் பெருமையும் பரவியது. நாடறிந்த அறிஞன் ஆனான். அச்சக முதலாளி ஆச்சரியப்பட்டார். அவனை அச்சகம் என்ற கூட்டுக்குள் அடக்கிவைக்க நினைக்கவில்லை. செல்வனின் அறிவைப் பயன்படுத்தி ஒரு பத்திரிகை நடத்தலாம் என்று யோசித்தார். கம்ப்யூட்டர், ஆப்ஸெட்மெஷின்கள் அமைக்கப்பட்டன. ‘காலம்’ என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. பத்திரிகையில் பல நல்ல அம்சங்கள் இடம்பெற்றன. காலம் பத்திரிகைக்குப் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் உருவானார்கள். செல்வன் நல்ல வருமானம் பெற்றான். தொலைக்காட்சிகளில் தோன்றி பேட்டி கொடுத்தான். பேசினான்.

(தொடரும்)

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.