April 19, 2024

Seithi Saral

Tamil News Channel

அமுதாவின் ஆசைகள் / நாடகம் / கடையம் பாலன்

1 min read

Amuthavin Aasaikal / Drama by Kadayam Balan

காட்சி 23

இடம்- அசோக்குமார் வீடு

பங்குபெறுபவர்கள்= அமுதா, ராஜேஷ், பவித்ரா, கைசூப்பி கைலாசம், ஆனந்த்

================

அமுதா: என்ன ராஜேஷ் எல்லாப்பணத்தையும் முதலீடு பண்ணியாச்சி. இன்னும் வருமானம் எதையும் காணோமே?

ராஜேஷ்: ஆமா முதலீடு செய்திருக்கோம். ஷேர் மார்க்கெட் இப்போ கொஞ்சம் டல்லா இருக்கு. கொஞ்ச நாள் பொறுமையா இருங்க. அதுக்கு அப்புறம் நல்ல ஷேர் எல்லாம் நல்ல  விலைக்கு போகும்.

அமுதா: அந்த வாட்டர் தொழிற்சாலை என்னாச்சி. இன்னும் இயங்காம இருக்கு?

ராஜேஷ்: இப்ப கார்பரேஷன்ல நல்ல தண்ணியா விடுறாங்க. அதோ விழிப்புணர்வுன்னு சொல்லி மினரல் வாட்டர் எல்லாம் குடிக்காதீங்கன்னு ஒரு குரூப்பே பிரசாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. அதனால இப்போ இருக்கிற தண்ணி கம்பெனியே டல் அடிச்சிட்டு இருக்கு.

அமுதா: அதனால….?

ராஜேஷ்: அதனால தற்போதைக்கு நமது கம்பெனியை இயக்காம மூடி வைச்சிருக்கோம்.

அமுதா: அப்போ வருமானத்திற்கு….?

ராஜேஷ்: உங்க சொத்து எங்கேயும் போகல. அப்படியே இருக்கு. கூடிய சீக்கிரம் வட்டியும் முதலுமா உங்க கைக்கு வந்து சேரும். அதோட விவாகரத்து கிடைச்சிட்டா ஜீவனாம்சமும் உங்களுக்கு கை நிறைய கிடைக்கும்.

அமுதா: சரி அது இருக்கட்டும்.. இப்போ வருமானத்துக்கு என்ன செய்றதுன்னுகேட்டேன்.

ராஜேஷ்: என்ன செய்றது. இருக்கிறதை வச்சி சமாளிக்கணும். உங்களுக்கு சாப்பாட்டுக்கு வேண்டியதை நானே கவனிச்சிக்கிடுதேன்.

பவித்ரா: என்ன இப்படி சொல்றீங்க? எங்களுக்கு எந்த பிஸ்னசும் வேண்டாம். எங்க  பணத்தையும் நகைகளையும் திருப்பி கொடுத்திடுங்க. நாங்க சமாளித்துக் கொள்கிறோம்.

ராஜேஷ்: என்னம்மா சின்னப்பிள்ளைத்தனமா பேசுற. உங்க பணத்தையும் நகைகளையும் நானா வச்சிருக்கேன். நீங்கத்தான் முதலீடு பண்ணி இருக்கீங்க. நாளைக்கே பணம் வரும்போது எனக்கா கொடுப்பீங்க.

அமுதா: பவித்ரா சும்மா இரு. ராஜேஷ் இப்போ நாம என்ன செய்யறது?

ராஜேஷ்: அமுதா நீங்க ஏன் கவலைப்படறீங்க. நான் இருக்கேன். உங்களை என்ன அம்போன்னா விட்டுட போறேன்.

பவித்ரா: அக்கா நம்ம ஆனந்த் இப்போ இந்த ஊர்லத்தான் இருக்கிறாரு. அவரை வரச்சொல்லி ஏதாவது உதவி செய்யச் சொல்றேன். (செல்போனை எடுத்து டயல் செய்கிறாள்) ஹலோ ஆனந்த் உங்களை எங்க அக்கா பாக்கணும்ன்னு சொன்னாங்க. உடனே எங்க வீட்டுக்கு வாங்க… சரி… வீட்லத்தான் இருக்கிறோம்… ஓ.கே.

ராஜேஷ்: என்ன பவித்ரா… உன்கூடவே வருவானே அவன்கிட்ட உதவி கேட்கபோறீயா?

பவித்ரா: ஆமா.

ராஜேஷ்: அவன் ஒரு பரதேசி பய. அவன் எங்கே உனக்கு உதவி பண்ணப்போறான்.

பவித்ரா: அவரோட அப்பா பெரிய பணக்காரன்.

ராஜேஷ்: (கிண்டலாக) அப்படியா…. சரி யாருடைய உதவியும் உங்களுக்கு வேண்டாம். என் பொண்டாட்டி, கொளுந்தியாளா இருந்தா இப்படியா அம்போன்னு விடுவேன். இரண்டு பேரையும் ராணிங்க மாதிரி வைச்சிக்குவேன்… சரி இப்பவும் கெட்டுப்போகல… நான் அசோக்குமாரை மாதிரி உங்களை கைவிட மாட்டேன். டேய் கைலாசம்… வாடா…

கைசூப்பி கைலாசம்: அண்ணே என்ன அண்ணே?

ராஜேஷ்: எடுடா அதை.

(கைசூப்பிப்பி கைலாசம் பைக்குள்விடும்போது…)

நில்லு நில்லு கையை நல்லா துடைச்சிட்டு எடு.

கைசூப்பி கைலாசம்: இந்தாங்க அண்ணே.

அமுதா: என்ன ராஜேஷ் தாலி.. உங்களுக்கு கல்யாணமா? பொண்ணு யாரு? எந்த ஊரு? நல்லப்பொண்ணா?

ராஜேஷ்: அமுதா அணில் கடிச்சப் பழம்தான் ருசிக்கும். அதேபோலத்தான் எனக்கும் அணில் கடிச்ச பழம் மாதிரி பொண்ணு இருக்கணும்.

அமுதா: அப்படியா விதவைக்கு வாழ்வு கொடுக்கப்போறீங்களா?

ராஜேஷ்: விதவைக்கு வாழ்வு கொடுத்தால் என்ன? வாழாவெட்டிக்கு வாழ்வு கொடுத்தா என்ன? எல்லாமே நல்ல சேவைதானே.

அமுதா: என்ன சொல்றீங்க… பொண்ணு யாரு?

ராஜேஷ்: என்ன அமுதா புரியலியா? நீங்க கூட ஒரு வாழாவெட்டித்தானே.

அமுதா: ராஜேஷ் என்ன உங்களுக்கு பைத்தியம் பிடிச்சி போச்சா?

ராஜேஷ்: ஆமா எனக்கு உங்க மேல பைத்தியம்தான். அமுதா உங்களை அசோக்குமார் புரிஞ்சிக்கல.. நான் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சி வச்சிருக்கேன். உங்களை புரிஞ்சிக்காதவனை விட்டு பிரிஞ்சி வந்திட்டிங்க. இனிமே உங்களை புரிஞ்சிக்கிட்டவன்கூட வாழலாம். அசோக்குமார் மாதிரி இல்லாம… உங்களையும் உங்க தங்கச்சியையும் நான் நல்லா வச்சிக்குவேன்.

அமுதா: சீ நாயே என்னடா பேசறே. நான் இப்பவே என் புருஷன்கிட்ட போறேன்.

ராஜேஷ்: நீங்க ரெண்டு பேரும் எங்கேயும் போக முடியாது. இந்த வீட்டை சுத்தி என் ஆளுங்க நிக்கிறாங்க. அமுதா உன் கழுத்தில கிடக்கிற தாலிய கழற்றி எறிச்சிட்டு நான் கட்டுற தாலிய போட்டுக்க. அதுதான் உனக்கும் நல்லது உன் தங்கச்சிக்கும் நல்லது.

பவித்ரா: அதோ ஆனந்த் வந்திட்டாரு… இனிமே உன்னை என்ன பண்ணுகிறோம் பாரு?

(ஆனந்த் வருகிறான்)

ஆனந்த் இவன்கிட்ட இருந்து எங்கள காப்பாத்துங்க. உங்க அப்பாவுக்கு போன் செய்து ஆளுங்கள அனுப்புங்க.

ராஜேஷ்: அவங்க அப்பாவுக்கு போன் செய்ய வேண்டாம். அவரே வருவாரு.

ஆனந்த்: என்ன எங்க அப்பாவா? அவங்க உனக்கு தெரியுமா?

ராஜேஷ்: தெரியு டா பரதேசி. என்னிக்கு நான் அமுதாவீட்டுக்குள்ள நுழைஞ்சேனோ அன்னிக்கே உன்னைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிட்டேன். டேய் இந்த பரதேசியோட அப்பன் கட்டப்பீடி கனகராஜ் வரச் சொல்லுங்க.

(கிழிஞ்ச சட்டையும் பரட்டை தலையும் உடைய குடிகாரன் கட்டப்பீடி கனகராஜ் வருகிறான்)

கட்டப்பீடி கனகராஜ்: டேய் ஆனந்த் பணக்கார வீட்டு பொண்ணை காதலிக்கிறதா சொன்னியே. இந்தப் பொண்ணுதானே அவா. அழகாக இருக்கா…

ஆனந்த்: அப்பா ஏன் இங்கே வந்திங்க. அதுவும் சாராயம் குடிச்சிட்டு. ஒரே நாத்தமா இருக்கு…

கட்டப்பீடி கருப்பன்: டேய் எனக்கும் அந்த காலத்தில இதே மாதரி பொண்ணு கிடைச்சிருந்த நான் ஏன் சாராயம் குடிக்கிறேன்.

ராஜேஷ்: தம்பி உங்க அப்பாவை நாங்கத்தான் இங்க தூக்கிட்டு வந்தோம்.

பவித்ரா: அடப்பாவி என்னை ஏமாத்திட்டியே.

ஆனந்த்: நான் எங்கே ஏமாத்தினேன். நீதானே என்னுடைய மிஸ்டு கால பயன்படுத்தி லயன்ல வந்தே. இப்போவும் என்ன நான் ஏழைத்தான். ஆனா நல்ல பையன். அண்ணன் ராஜேஷ் நினைச்சா நம்ம கல்யாணத்தை ஜாம்ஜாம்ன்னு நடத்திடுவாரு.

பவித்ரா: கல்யாணமா உனக்கும் எனக்குமா? பணக்காரன்னு ஏமாத்தின உன்னை என்ன செய்யறேன்னு பாரு.

ராஜேஷ்: அம்மா பவித்ரா முன்னப்பின்னே தெரியாம காதலிப்பிங்க. அவனைப்பத்தி தெரிஞ்சப்பிறகு கொதிப்பீங்க.

அமுதா: டேய் எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாத்திட்டிங்க. நாங்க இப்போவே என்புருஷன்கிட்ட போறோம்.

ராஜேஷ்: எப்படி போவீங்க இந்த தாலிய மனம் முவந்து ஏத்துக்க… அதுக்கு அப்புறம் நீ ராணியா இந்த ஊரை வலம் வரலாம். அம்மா  பவித்ரா நீ எனக்கு கொளுந்தியாளா வந்திட்டா உனக்கு இந்த பரதேசி பய வேண்டாம். நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்து வைக்கிறேன். என் திட்டம் நிறைவேறுத வரைக்கும் நீங்க யாரும் வெளியே போக முடியாது.

========

காட்சி  24

இடம்  தனி வீடு (அசோக்குமார் அறை)

பங்குபெறுபவர்கள்= விமலா, அசோக்குமார், 2 ரவுடிகள்)

=====================

விமலா: (போனில் பேசியபடி) சரி எல்லா வேலையையும் இன்னிக்கே முடிச்சிடுங்க. நான் ஈவினிங் வந்து சம்பளத்தை கொடுக்கிறேன்.

(அடுத்த நம்பருக்கு டயல் செய்து…) சார் உங்க வேலைய நல்லபடியா முடிச்சிகொடுத்திட்டோம்… அப்புறம் அந்த கவர்மெண்ட் காண்டிராக்ட்டை எம் பேருல்ல நல்லபடியா முடிச்சி கொடுத்திங்க. அதையும் ரொம்ப சிறப்பாகவே செய்து கொடுக்கிறோம்… உங்களுக்கு வேண்டிய கமிஷனை நானே கொடுத்திடுதேன்.  ஆமா…. அசோக்குமார் சாருக்கு உடம்பு சரியில்லை. எல்லாமே நான்தான் பார்த்துக்கிறேன்.

(வேறொரு நம்பருக்கு போன் செய்து..)

ஹலோ ஆடிட்டர் அம்பலமா… அசோக்குமார் சாரோட கணக்கை எல்லாம் பார்த்து டாக்ஸ் கட்டிடுங்க…. ஓ அவருக்கு டாக்சே கட்ட வேண்டாமா? அப்படியே என் அக்கவுண்டையும் பாருங்க. எனக்கு எவ்வுளவு டாக்ஸ் வருகிறது… அடேயப்பா அவ்வளவு பணமா… என்ன சார் செய்ய… உழைச்சி உழைச்சி வீணா வரியா கெட்ட வேண்டியது இருக்கு.. என்னப்பண்றது. அதை கட்டிடுங்க.

(செல்போனை ஆப் செய்துவிட்டு)

ஐயோ அவங்களுக்கு மருந்து கொடுக்கணுமே… அசோக்குமார்ர ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்க டாக்டர் சொல்லி இருக்காரு. நாம நாலு நாள் ரெஸ்ட் எடுக்க வைக்கணும். அதுக்குள்ள அவரை என் கழுத்தில தாலி கட்டறதுக்கு ஏற்பாடு செய்யணும்.

அசோக்குமார்: (உள்ளே இருந்து வந்து) என்ன விமலா… எனக்கு டாக்சே கட்ட வேண்டியதில்லையா?

விமலா: ஆமாங்க.. உங்களுக்கு வரியே கட்டாம நான் எப்படி கணக்கை காட்டிருக்கேன் பார்த்திங்களா?

அசோக்குமார்: உனக்கு இன்கம்டாக்ஸ் கட்டணுமா?

விமலா: ஆமா உங்களுக்கு எந்த தொந்தரவும் கூடாதுங்கிறதுக்காக எல்லாத்தையும் என் தலைமேல தூக்கி வைச்சிக்கிட்டேன்.

அசோக்குமார்: உன் பேர்ல அவ்வளவு பணமா போட்டிருக்கே. என்ன அநியாயம்  பண்ணி இருக்கீங்க.

விமலா: என்னங்க உங்கக்கிட்ட கேட்டுத்தானே இதை எல்லாம் செய்தேன். இப்பபோய் அநியாயம்ன்னு சொல்றீங்க.

அசோக்குமார்: அந்த கவர்ன்மெண்ட் காண்டிராக்டை ஏன் உன்பேர்ல முடிக்க சொன்ன?

விமலா: ஓகோ எல்லாவிஷயத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தீங்களா? நீங்க மயக்கத்திலே இருக்கீங்கன்னு நினைச்சி பேசிட்டேன்.

அசோக்குமார்: இதோ நான் என்ன செய்கிறேன் பாரு.

(செல்போனில் டயல் செய்கிறான்.)

ஹலோ சந்திரசேகரனா… நான்தான் அசோக் பேசறேன். ஆமா அந்த கவர்ன்மெண்ட் காண்டிராக்கடை ஏன் என் பேருல முடிக்கல.. வேண்டாம் என்பேர்லயே முடியுங்க… ஏன் முடியாது…. அப்படியா சொத்து எம்பேர்ல இல்லியா? சரி.. வச்சிடறேன். விமலா என்ன பண்ணின. என் சொத்தை முழுவதையும் உன் பேர்ல எப்போ மாத்தின?

விமலா: நீங்க அடிப்பட்டு ஆஸ்பத்திரியில கிடக்கும்போது நல்ல காண்டிராக்ட் வந்தது. அந்த ஏலத்தில கலந்து கொள்வதற்காக உங்க சொத்து பவரை எழுதி வாங்கிக்கிட்டு போனது நினைவுல இல்லியா?

அசோக்குமார்: அய்யோ நான் உடம்பு சரியில்லாத நேரத்தில அரைகுறை மயக்க க்ததில இருந்தபோ எப்படியோ எழுதி வாங்கிக்கிட்டியே… சரி இப்போவே என் சொத்துப் பவரை கேன்சல் பண்ணிடுதேன்.

விமலா: அது முடியாதுங்க. அந்த கவர்ன்மெண்ட் காண்டிராக்ட் முடிஞ்சப்பிறகுதான் உங்க கைக்கு வரும்.

அசோக்குமார்: அடப்பாவி..

விமலா: நோ டென்சன்…. நான் என்னையே உங்களுக்கு ஒப்படைச்சிட்டேன். அப்படி இருக்கிறப்ப சொத்து யாரு பேருல இருந்தா என்ன? பணம்கூட எங்கிட்டத்தான் நிறைய இருக்கு. ஆனா எல்லாமே உங்க பணம்தான். அதை நாளைக்கே உங்கக்கிட்ட ஒப்படைக்க தயார். பிறகு ஏன் கவலைப் படறீங்க.

அசோக்குமார்: சரி இப்பவே வா பேங்குக்கு… பணத்தை எல்லாத்தையும் எம் பேருக்கு மாற்று.

விமலா: அது எப்படி முடியும். நீங்க எனக்கு தாலிகட்டுங்க. அமுதாவோட விவாகரத்து ஆனதும் நாம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிடுவோம். அதுக்கு அப்புறம் எல்லா சொத்து பணத்தையும் உங்க பேருல எழுதி வைச்சிடுதேன்.

அசோக்குமார்: விமலா அது நடக்காத காரியம். மரியாதையா என் பணத்தை தாரீயா இல்ல..

விமலா: உங்களால ஒண்ணும் செய்ய முடியாது. டேய் இங்கே வாங்கடா.

( இரண்டு ரவுடிகள் வருகிறார்கள்.)

இவரை இங்கிருந்து வெளியே போகவிடாதீங்க.

(விமாலா போகிறாள்)

அசோக்குமார்: டேய் என்னை விடுங்கடா என் மனைவி அமுதாவை பார்க்கணும்.

ரவுடி: சார் உங்கள வெளியில விடக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. மீறி போனீங்கன்ன இந்த மயக்க ஊசியை போடச் சொன்னாங்க.

அசோக்குமார்: அடக்கடவுளே நாங்க யாருக்கு என்ன தப்பு பண்ணினோம். எங்க குடும்பத்துக்கு ஏன் இவ்வளவு பிரச்சினை.

============================

காட்சி 25

இடம்= சாலையோரம்

பங்குபெறுபவர்கள்= முனியன், கருப்பன்,

=============

முனியன்: என்ன கருப்பா… எங்க நம்ம கைசூப்பி கைலாசத்தை காணோம்.

கருப்பன்: அண்ணே உங்களுக்கு தெரியாதா? அவன் இப்போ ராஜேஷ் கூட சேர்ந்து ரவுடியாவே ஆயிட்டான்.

முனியன்: என்ன கோமாளி ரவுடி ஆயிட்டானா?

கருப்பன்: ஆமா ராஜேஷ் அசோக்குமார் குடும்பத்தை பிரிச்சான். இப்போ அமுதாவோட சொத்தை எல்லாத்தையும் ஆட்டைய போட்டுட்டான். அவன் காதலிச்சானே விமலா… அவள் அசோக்குமார் வீட்டுல புகுந்து அவன் சொத்தை எல்லாத்தையும் பறிச்சிக்கிட்டாள்.

முனியன்: அவங்க குடும்பத்தை ராஜேஷ் கெடுக்கிறான்னு  தெரியும். அசோக்குமாரும், அமுதாவும் பிரிஞ்சதும் தெரியும். ரெண்டு பேரும் திருந்தி ஒண்ணா ஆயிடுவாங்கன்னு நினைச்சேன்.

கருப்பன்: அவங்கள ராஜேஷ் சேர விடுவானா? கைசூப்பி மாதிரி பசங்களை வச்சி என்ன அட்டூழியம் பண்ணுறான்.

முனியன்: அமுதா இன்னுமாடா திருந்தாம இருக்கா?

கருப்பன்: திருந்தி என்ன பிரயோஜம்? அமுதாவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ராஜேஷ் மிரட்டுறான். அங்க விமலா தனக்கு தாலிக்கட்டச்  சொல்லி அசோக்குமாரை மிரட்டுறா? இப்ப ரெண்டு பேரையும் வீட்டில அடைச்சி வைச்சிருக்கிறதா கேள்வி.

முனியன்: இத இப்படியே விடக்கூடாது. போய் கைசூப்பி கைலாசத்தையும் அவ அடியாட்களையும் கூட்டிட்டு வா.

(கருப்பன் உள்ளே செல்கிறான்)

முனியன்: அமுதா வீட்டில் இவ்வளவு பிரச்சினையா? என்ன செய்யலாம்?

(கைசூப்பி மற்றும் இரண்டு ரவுடிகளை  அழைத்து வருகிறான்)

கைசூப்பி கைலாசம்: அண்ணே கூப்பிட்டிங்களா?

முனியன்:(காலால் உதைத்து) ஏலே என்ன தைரியம் இருந்தா ராஜேசோட சேர்ந்து அமுதா குடும்பத்தை சின்னாபின்னமாக்குவீங்க..

கைசூப்பி கைலாசம்: அண்ணே எனக்கு விமலாவை கட்டி வைக்கிறதா ராஜேஷ் சொன்னான். அதனாலத்தான்..

முனியன்: ஏலே அவன் அசிங்கத்தை திங்கச் சொன்னா திம்பியா? அடப்பாவி ஒரு குடும்பத்தையே கெடுத்துட்டிங்களா. எல்லாத்துக்கும் காரணம் இந்த கைசூப்பித்தான். இவனை அடித்துவெளுங்கடா-.

(எல்லோரும் அடிக்கிறார்கள்)

கைசூப்பி கைலாசம்: அண்ணே என்னை மன்னிச்சிடுங்க. நான் திருந்திட்டேன்.

முனியன்: என்ன செய்வியோ எனக்கு தெரியாது. அமுதாவையும், அசோக்குமாரையும் வெளியே கொண்டு வரணும்.

கைசூப்பி கைலாசம்: அவங்க ரெண்டு பேரையும் நான் வெளியில கொண்டு வாரேன். அதுவரைக்கும் நான் ராஜேஷ் ஆளுன்னுதான்  தெரியுணும். அது மட்டுமல்ல. ராஜேஷ் பறிச்சி வைச்சிருக்கிற சொத்து பத்திரம், நகைகள் எல்லாம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியும் அதையும் எடுத்துட்டு வந்துடறேன்.

முனியன்: சரி உடனே அந்த வேலையை செய். உனக்கு வேண்டிய ஆட்களை கூட்டிட்டு போ. நானும் வர்றேன்.

கைசூப்பி கைலாசம்: நான் அமுதா அக்காவையும், அவங்க தங்கச்சியையும் வெளியே அனுப்பி வைக்கிறேன். அந்த நேரம் பார்த்து ராஜேசை நீங்க ஏதாவது சொல்லி அங்கே அனுப்பி வையுங்க. ராஜேஷ் அங்க வந்து என்கிங்கிட்ட சண்டை போடுவான். அந்த நேரம் பார்த்து நீங்க ரெண்டு மூணு பேரு.. ராஜேஷ் வீட்டுக்கு போங்க. அங்க பரண் மேல ரிப்பேரான டி.வி. இருக்கும். அடுத்த ரூம்ல ஓடாத பேன் இருக்கும். அவைகள திறந்து பார்த்தீங்கன்ன அமுதா அக்காவோட நகைகள் எல்லாம் இருக்கும். அதை நீங்க மீட்டுட்டு வந்திடுங்க. இந்தாங்க ராஜேசின் வீட்டு போலிசாவி.

========

காட்சி 26

இடம்& அசோக்குமார் வீடு

பங்குபெறுபவர்கள்= அமுதா, பவித்ரா, கைசூப்பி கைலாசம், ராஜேஷ், முனியன், போலீசார்

==============

அமுதாவும், பவித்ராவும் வீட்டில் அடைப்பட்டு கிடங்கிறார்கள்.

கைசூப்பி கைலாசம்: அமுதா அக்கா என்ன மன்னிச்சிடுங்க. நானும் ராஜேசின் தில்லுமுல்லுக்கு துணையா இருந்துட்டேன். இப்ப இங்க யாரும் இல்லை. நீங்க உடனே தப்பிச்சி நம்ம முனியன் அண்ணன் வீட்டுக்குள்ள போய் ஒளிஞ்சிக்கிடுங்க. மத்த வேலைய நாங்க பார்த்துக்கிறோம்.

அமுதா: உன்னை நம்பலாமா? நீ உண்மையிலேயே திருந்திட்டியா?

கைசூப்பி கைலாசம்: உண்மையிலேயே நான் திருந்திட்டேன். சீக்கிரம் போங்க. அந்த படுபாவி ராஜேஷ் இங்க வர்றதுக்குள்ளே போங்க. முடிஞ்சா போலீஸ் ஸ்டேஷனுக்கே போங்க. எந்த காரணத்தை கொண்டும் அசோக்குமார் அண்ணன்கிட்ட  இப்போதைக்கு போக வேண்டாம்.

(அமுதாவும், பவித்ராவும் தப்பி ஓடுகிறார்கள்.)

கைசூப்பி கைலாசம்:  எப்பா நான் செய்த பாவத்துக்கு கொஞ்சம் பரிகாரம் தேடிக்கிட்டேன். இனிமே ராஜேஷ் வருவான் அவன்கிட்ட எப்படி தப்பிக்கலாம்…?

ராஜேஷ்:(வந்து) டேய் கைலாசம் எங்கடா அமுதாவையும் பவித்ராவையும் தப்பிக்கவிட்டாய்?

கைசூப்பி கைலாசம்: அண்ணே உங்களுக்கு விவரம் தெரியாதா? அவங்களை அடைச்சி வைச்சிருக்கிற விசயம் முனியனுக்கு தெரிஞ்சி போச்சி. அவன் போலீசுக்கு தகவல் கொடுத்துட்டான். போலீஸ் வந்தா உங்களைத்தானே பிடிப்பாங்க. அதான் அவங்க வர்றதுக்குள்ளே அவங்களை வெளியே போகச் சொல்லிட்டேன்.

ராஜேஷ்: அவங்கள வேற இடத்துக்கு மாத்தி இருக்க வேண்டியதுதானே. ஏன் தப்ப விட்டாய்.

கைசூப்பி கைலாசம்: அண்ணேன் அவங்களபத்தி நமக்கென்ன கவலை. அவங்க சொத்துதானே உங்களுக்கு வேணும். அவங்களுடைய நகை சொத்து எல்லாமே இப்ப உங்கக்கிட்டத்தானே இருக்கு.

ராஜேஷ்: சரி நான் அந்த நகை சொத்து பத்திரங்களை எல்லாம் வேற இடத்துக்கு கொண்டு போறேன்.

(அந்த நேரத்தில் முனியன், போலீசார், அமுதா, பவிதரா ஆகியோர் வருகிறார்கள்.)

முனியன்: (வந்து) எங்கேயும் போக முடியாது. அண்ணே உங்களை பிடிக்க மாமா வீட்டுல இருந்து ஆளுங்க வந்துட்டாங்க.

ராஜேஷ்: டேய் கைசூப்பி ஏண்டா அவங்களை போலீஸ் ஸ்டேசனுக்கா அனுப்பி வைச்சே?. உன்னை நம்பித்தானே அவங்களை உங்கிட்ட ஒப்படைச்சேன்.

கைசூப்பி கைலாசம்: ஆமா நீ மட்டும் என்னவாம். விமலாவை எனக்கு கட்டி வைக்கிறதா சொல்லி நீயே காதலிச்சியே.

முனியன்: சரி சார் இவனை கைது பண்ணுங்க. டேய் அசோக்குமாரை மீட்டு வரப்போனவங்க என்னாச்சி.

கைசூப்பி கைலாசம்: அவங்க வேலையை கச்சிதமா முடிச்சிடுவாங்க.

போலீஸ்: சரி அமுதா, பவித்ரா நீங்க ரெண்டு பேரும் இந்த ராஜேஷ் மீது புகார் எழுதி தரணும். இந்த புகார் மனுவில கையெழுத்துப்போடுங்க.

(போலீசார் ராஜேசை கைது செய்கின்றனர்.)

ராஜேஷ்: எங்க வீட்டுக்கு போகணும். அதுக்கு கொஞ்சம் அனுமதி கொடுங்க சார்.

முனியன்: எதுக்கு? நீ மோசடி செய்து பதுக்கி வைச்சிருக்கிற பணம் மற்றும்  தஸ் தா வேஜுக்களை எடுக்கதுக்காகவா? அதை எல்லாத்தையும் கைப்பற்றிவிட்டோம்.

போலீஸ்: அதை நாங்க முறைபடி கோர்ட்டில் ஒப்படைச்சிடுவோம்.

ராஜேஷ்: டேய் கைசூப்பிப்பி என்னை ஏமாத்திட்டியா? என்கூட இருந்தே என்னைக் காட்டிக் கொடுத்திட்டியா? உன்னை சும்மாவிட மாட்டேன்.

கைசூப்பி கைலாசம்: அப்பாவியா இருந்த என்னை கெடுத்ததே நீதான்.

முனியன்: சரி வாங்க அசோக்குமாரை விடுவிப்போம்.

=========================

காட்சி 27

இடம் =தனி வீடு(அசோக்குமார் அறை)

பங்கேற்பவர்கள்&விமலா, அசோக்குமார், அடியாட்கள், போலீஸ், கைசூப்பி கைலாசம், முனியன். அமுதா, பவித்ரா, ஆனந்த், )

======================

விமலா: என்னங்க என் கழுத்திலே தாலிக்கட்டுங்க. நாம இந்த உலகத்தில சந்தோஷமாக ஒரு நல்ல தம்பதியா வாழ்வோம்.

அசோக்குமார்: வேண்டாம். நீ நல்ல பொம்பளயே இல்லை. என் பணம் எல்லாத்தையும் மோசடி செய்துட்டே.

விமலா: பணம் மட்டுமல்ல. என்னையே உங்களுக்கு தரேன்னுதான் சொல்றேன். அதுக்குத்தான் இந்த தாலிய கட்டுங்க.

அசோக்குமார்: அம்மா தாயே எனக்கு நீயும் வேண்டாம். இந்த பணமும் வேண்டாம். என்னை மட்டும் விட்டுடு. நா எங்கேயோ போய் எப்படியோ பிழைக்கிறேன்.

(வெளியே போக முயற்சிக்கிறான். அவனை அடியாட்கள் அடித்து தடுக்கிறார்கள்.)

அசோக்குமார்: அய்யோ ஏண்டா என்னை விட மாட்டேங்கிறீங்க. பணத்துக்காக இப்படி கூலி வேலை செய்யாதீங்கடா. இதுவே நாளைக்கு உங்க வாழ்க்கைக்கு உலை வச்சிடும்.

(அந்த நேரத்தில் போலீசார் வருகிறர்கள்.)

விமலா:  ஆ போலீஸ்… வாங்க சார். என்ன சார் காண்டிராக்ட்ல ஏதேனும் பிரச்சினையா?

போலீஸ்: காண்டிராக்டல என்ன பிரச்சினைன்னு இனிமேதான் பார்க்கணும். முதல்ல உன்னுடைய காண்டக்லதான் பிரச்சினை. இந்த அசோக்குமாரை சட்டத்துக்கு விரோதமாக அடைச்சி வைச்சிருக்கிறதா எங்களுக்கு புகார் வந்திருக்கு.

விமலா: அடைச்சி வச்சிருக்கேனா. நானா. சார் அவருக்கு நான் அசிசிண்டண்ட். வருங்கால மனைவி.

அசோக்குமார்: இல்லை.. இல்லை.. இவ என்னை சட்டவிரோதமா அடியாட்கள் மூலம் அடைச்சி வச்சிருக்கிறாள்.

விமலா: இல்லை சார் இவருக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் பெட் ரெஸ்ட் எடுக்கச்சொல்லி இருக்கிறார். ஆனால இவரு வெளியில போகணும்ன்னு பிடிவாதம் பிடிக்கிறார். அதனாலத்தான் ரெண்டு பேரை இவருடைய பாதுகாப்புக்காக போட்டியிருக்கேன்.

(முனியன், அமுதா, பவித்ரா, வருகிறார்கள்)

முனியன்: இனிமே அவரை யாரும் பார்த்துக்கிட வேண்டாம். அவருடைய மனைவியே பார்த்துக்குவா.

விமலா: இவ்வளவு நாளும் எங்க போனாங்க?

முனியன்: எங்களுக்கு எதுவுமே தெரியாதுன்னு நினைச்சியா? நீயும் ராஜேசும் சேர்த்து இவங்கக்கிட்ட இருந்து பணம் பறிக்க திட்டம் போட்டது தெரியும். அதற்கு பிறகு குடும்பத்தையே சின்னாபின்னாமாக்கினதும் தெரியும். ராஜேசை போலீசார் கைது பண்ணிட்டாங்க. இப்போ நீயும் மாமியார் வீட்டுக்கு போக வேண்டியதுதான்.

விமலா:  அய்யோ என்னை மன்னிச்சிடுங்க.

(இன்னொரு போலீஸ்காரர் ராஷேசையும் ஆனந்த் மற்றவர்களையும் அழைத்து வருகிறார்.)

அசோக்குமார்: முனியா நீதான் என்னை மீட்டாயா? ரொம்ப நன்றிப்பா.

அமுதா: என்னை மன்னிச்சிடுங்க. பணம் பணம்ன்னு ஆசைப்பட்ட இந்த அமுதாவின் ஆசையால சரியான பாடம் கத்துக்கிட்டேங்க. இருக்கிற விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படக்கூடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்.

முனியன்: அண்ணேன் அசோக்குமார் நீங்களும்…

அசோக்குமார்: ஆமாப்பா நானும் குடும்பங்கிறத மறந்து பிஸ்னஸ் பிஸ்னஸ்ன்னு அலைச்சிட்டேன். அதனாலத்தான் அவளுக்கு விபரீதமான ஆசை வந்துட்டு. பணம்  சம்பாதிக்கிறது சந்தோஷமாக வாழத்தானே. அதனால எல்லாரும் குடும்பத்துக்கும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்குங்க.

போலீஸ்: சரி சார் இந்த விமலா மீது நீங்க ஒரு புகார் கொடுங்க. இவளையும் உள்ளத்தள்ளி பின்னிடுவோம்.

விமலா: வேண்டாம் நான் எல்லாத்தையும் உங்கக்கிட்டயே கொடுத்துவிடுகிறேன். என்னை மன்னிச்சிடுங்க.

கைசூப்பி கைலாசம்: எனக்காக விமலாவை மன்னிச்சிடுங்க.

அசோக்குமார்: நான் யார் மேலேயும் புகார் கொடுக்கல. இனிமேலாவது நாங்க நல்லபடியா வாழத்தான் விரும்பறோம்.

ஆனந்த்: பவித்ரா என்னை மன்னிச்சிடு. நான் உன்னை ஏமாத்திட்டேன். ஆனாலும் உன்னை என்னால மறக்க முடியல.

பவித்ரா: நான்  பெரியவங்க சொல்ல கேட்காததாலே உங்கிட்ட ஏமாந்திட்டேன். இனிமே எங்க அத்தான் சொல்றபடிதான் கேட்பேன். எங்கிட்ட பேசாதே.

அசோக்குமார்: குடும்பத்திலே பெரியவங்க சண்டை போட்டா சின்னவங்க தடம்புரண்டு போவாங்கன்னு சொல்லுவாங்க. அதுக்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. அதனால எந்த கணவன்&மனைவியும் இனியே சண்டையே போடாதீங்க. சண்டை போட்டாலும் நாலு சுவத்துக்குள்ள போடுங்க.

ஆனந்த்: பவித்ரா என்னை மன்னிப்பியா?

முனியன்: பவித்ரா நீ திருந்திட்டே. ஆனா இந்த பயலை நீ மன்னிக்காதே. நீ இவனை ஏத்துக்கிட்டா எல்லா பசங்களும் இவனை மாதிரியே மிஸ்டு கால்  கொடுத்து பெண்களுக்கு வலைவிரிப்பாங்க. அந்த வலையில  விழுந்திட்டா பெண்களால  வெளியே வரவே முடியாதுன்னு இவங்க நினைக்கிறாங்க. காலம் மாறிப்போச்சு. திருந்தின பெண்கள் தன்னை ஏமாத்தினவனை எந்தக் காரணம் கொண்டு ஏதுக்காதீங்க. அதுமட்டுமல்ல… அந்த அயோக்கியன்களுக்கு எதிரா போராடவும் தயாங்காதீங்க.

கைசூப்பி கைலாசம்: இளம் பெண்களே இனிமே  மிஸ்டு கால் ஆண்களை நம்பாதிங்க. உங்க வாழ்க்கையே மிஸ் ஆயிடும்.

அசோக்குமார்: விமலா உன் ஏழ்மையை பயன்படுத்தி ராஜேஷ் உன்னை கெட்ட வழிக்கு திருப்பி ட்டான். அதேபோல அவனால கைலாசமும் தீய வழிக்கு போனான். இப்போ நீங்க ரெண்டு பேரும் திருந்திட்டீங்க. விமலா உன்னை உண்மையிலேயே காதலிச்ச நம்ம கைலாசகத்தையே  நீ கல்யாணம் பண்ணிக்கோ.

விமலா: கைசூப்பியை கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா இனிமே கைசூப்பக்கூ£து.

முனியன்: என்னம்மா நீயே அவனை கைசூப்பின்னு கூப்பிடுறியே?

விமலா: போங்க அண்ணே, என்னதான் இருந்தாரும் வருங்கால புருஷனை பேரு சொல்லிக்கூப்பிடக்கூடாது. அதனாலத்தான் கைசூப்பின்னு கூப்பிட்டேன்.

கருப்பன்: ஏலே நான் ஒருதடவை கைசூப்பின்னு சொன்னதுக்கு என்னைய என்னா அடி அடிச்சே-. இவா மட்டும் சொன்னா இளிச்சிக்கிட்டு இருக்கிற.

கைசூப்பி கைலாசம்: அவா என்னோட வருங்கால மனைவி…

விமலா:  என்னங்க… இனிமே நீங்க கைசூப்பவேக்கூடாது.

கைசூப்பி கைலாசம்: இனிமே சாப்பிடறதுக்கு கூட என் விரல் வாய்க்குள்ளே போகாது.

கருப்பன்: அப்படின்னா உன் விரலை வெட்டிட போறீயா?

கைசூப்பி கைலாசம்: எம்பொட்டாட்டி ஊட்டி விடுவா.

முனியன்: விமாலா இந்த உனக்கு அட்வான்சா கல்யாண பரிசு தர்றேன்.

விமலா: பைக்குள்ள என்ன பரிசு இருக்கு.

முனியன்: வர்க்கிமுட்டிக்காய். அந்த காலத்தில சின்னப்பிள்ளையில பால்குடியை மறக்கிறதுக்கு இந்த கசப்பான காயத்தான் தடவுவாங்க. கைலாசம் அம்ம இந்த வர்க்கிமுட்டிக்காய பயன்படுத்தல. நீயாவது படுக்கப்போகும்போது இந்த காயவெட்டி அவன் விரல்ல தடவு. கை வாய்க்குள்ளே போகாது.

======================

சுபம்

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.