அமுதாவின் ஆசைகள்-18 / நாடகம் / கடையம் பாலன்
1 min readAmuthavin Aasaikal-18 / Drama by Kadayam Balan
காட்சி 18
இடம்& தனிவீடு (அசோக்குமார்)
பங்குபெறுபவர்கள்= விமலா, அசோக்குமார்
====================
விமலா: நாம ராஜேஷ் சொன்னபடி அசோக்குமார் வீட்டுக்குள்ள புகுந்தாச்சி. இனிமே இவரோட பணத்தை அபகரிக்கிறதுதான் வேலை. அங்கே அமுதா சொத்த ராஜேஷ் பறிச்சிடுவாரு. அதுக்கு அப்புறம் சொகுசான வாழ்க்கை வாழலாம்.
(அந்த நேரத்தில் போன் வருகிறது. போனை எடுத்து விமலா பேசுகிறாள்)
விமலா: ஹலோ யாரு பேசறீங்?…. சார் வெளியில போயிருக்காங்க… நான் அவங்க ஆளு… இல்லை அவங்க பி.ஏ. பேசறேன். என்ன சார்? … அப்படியா சார். ரொம்ப சந்தோஷம் சார். உங்கள பற்றி அசோக்குமார் சார் நல்லாவே சொல்லி இருக்காரு. சார் அந்த காண்டிராக்ட்டை எங்ககிட்ட கொடுங்க சார். நாங்க நல்லபடியா முடிச்சி கொடுத்துடுவோம்….. ஓ.கே. சார்…
அசோக்குமார்:( வந்தபடி) என்ன விமலா.. என்ன சாப்பாடு ரெடி பண்ணிட்டியா?
விமலா: கொஞ்ச நேரத்தில முடிச்சிடுவேன் சார். அப்புறம் உங்களுக்கு போன் வந்தது.
அசோக்குமார்: ஆமா எங்கிட்டயும் பேசினாரு. அந்த காண்டிராக்டை நீயே சாமர்த்தியமாக பேசி வாங்கிட்டியே… பராவாயில்லை. அவரும் உன்னை திறமைசாலின்னு புகழ்ந்தார். அந்த காண்டிராக்ட்டுக்கு கடுமையான போட்டி இருந்தது. அதை போன்லயே பேசி முடிச்சிட்டியே. இதுல நல்ல லாபம் கிடைக்கும். கிரேட் விமலா.
விமலா: சார் இன்னொரு விஷயம்… நான் சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே?
அசோக்குமார்: சொல்லு… நான் ஏன் தப்பா நினைக்கப்போறேன்.
விமலா: இல்ல இந்த காண்டிராக்ட் மூலமா கிடைக்கிற பணத்தை என் அக்கவுண்ட்ல போடச் சொல்லுங்க..
அசோக்குமார்: என்ன உன் அக்கவுண்டலயா?
விமலா: ஆமா இதுல நல்ல வருமானம் கிடைக்கும். இன்கம் டேக்ஸ் பிரச்சினை வரும். அதனால பினாமியா என்னை வச்சிக்கிடுங்க. என் அக்கவுண்ல போடச் சொல்லுங்க.
அசோக்குமார்: அது வந்து… வந்து…
விமலா: என்மேல நம்பிக்கை இல்லையா? ஆமா நான்ன்னு இல்லை. யாரையும் பண விஷயத்துல நம்பக்கூடாது-. அதனால என் அக்கவுண்ட் பாஸ்புக், ஏடிஎம். கார்டு எல்லாத்தையும் நீங்களே வச்சிக்கோங்க. அதோ என் அக்கண்ட்ல போடப்படுற பணத்துக்கு நான் உங்கக்கிட்ட கடன் வாங்கினதா பாண்டு பத்திரத்திலே கையெழுத்து போட்டு தர்றேன்.
அசோக்குமார்: (அமைதியாக இருந்தான்)
விமலா: என்ன சார் இன்னும் நான் சொல்றதுல நம்பிக்கை இல்லியா? இத எனக்காக சொல்லவில்லை. உங்க நன்மைக்காகத்தான் சொல்றேன்.
அசோக்குமார்: சரி, சரி விமலா உன் பேர்லேயே போடச் சொல்றேன்.
விமலா: சரி சாப்பாடு ரெடி பண்ணுறேன்.
அசோக்குமார்: விமலா நான் சைட்டுக்கு போறேன். நீ இந்த மாதம் வரவு&செலவு கணக்கை எல்லாம் பார்த்து முடிச்சிடு. விமலா உங்க அம்மாவை பார்த்தேன். அவங்க உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படறாங்க. உனக்கு ஒரு நல்ல பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.
விமலா: கல்யாணமா? எனக்கா? சார்…. உங்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் சேவை செய்யவே விரும்பறேன்.
அசோக்குமார்: எனக்கு சேவை செய்றது இருக்கட்டும். அதுக்கும் உன் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்?
விமலா: அமுதா அக்கா உங்கக்கூட இல்லியே. நான் கல்யாணம் ஆகி போயிட்டா, உங்களை யார் பார்த்துக்குவா?
அசோக்குமார்: சின்னப்பிள்ளைத்தமா பேசாதே. எங்க வீட்டுப்பிரச்சினை எல்லாம் சீக்கிரம் தீர்ந்துடும். உன் வேலைய மட்டும் பாரு.
(அசோக்குமார் செல்கிறான்)
விமலா: ஆமா இவரு எப்படியும் அமுதாக்கூட சேரலாம்ன்னு நினைக்கிறாரு. அதை நடக்க விடக்கூடாது.
(செல்போனை பார்க்கிறாள்)
ஹை நம்ம அக்கவுண்டல 10 லட்சம் ஏறிடுச்சி… ஆமா அசோக்குமாரை ஏமாற்றி அந்த பணத்தை கொண்டு ராஜேசை கல்யாணம் பண்றதை விட, பேசாம அசோக்குமாரையே கல்யாணம் செய்துகிட்டா, நாம யாரையும் ஏமாத்தாம இவருடைய சொத்தை பூராவும் அனுபவிக்கலாமே. ஆமா இதுதான் நல்ல யோசனை. நாம இனிமே ராஜேசோட தொடர்பை துண்டிக்கணும். எப்படியாவது அசோக்குமாரிடம் இருந்து அமுதாவை பிரிச்சி நாம இந்த வீட்டுக்கு ராணியாகணும்.
=======================
காட்சி 19
இடம்& கோவிலில் சாமியாட்டம்
பங்குபெறுபவர்கள்& சாமி ஆட்டம், கருப்பன்
===================
(கருப்பசாமி ஆடுகிறார். ஆட்டம் முடிந்தவுடன்…)
கருப்பன்: சாமி நொந்து போய் உங்கிட்ட வந்திருக்கிறேன். எனக்கு நல்லவழி காட்டினாங்க.
சாமி: கலங்காதே பக்தா… உன் குறைய சொல்லு.
கருப்பன்: சாமி என்னை ஒருத்தன் காரணம் இல்லாம அடிச்சிக்கிட்டே இருக்கான். அதுக்கு ஒரு நிவாரணம் சொல்லுங்க சாமி.
சாமி:(சாமி ஆடியபடி..) பக்தனே தேங்கா&பழம் கொண்டு வந்தியா?
கருப்பன்: இல்லை சாமி.
சாமி: என்ன ஒரு மாதிரி கெட்ட நாத்தம் வருது. டேய் இன்னிக்கு குளிச்சியா?
கருப்பன்: இல்லை சாமி.
சாமி: குளிக்காம கோவிலுக்கு வரலாமா? ( சாமி கருப்பனை அடிக்கிறார்.)
கருப்ப: அடிக்கு பரிகாரம் தேடி வந்த இடத்திலேயேயும் பரிசா கிடைச்சது அடிதானா.
===========
காட்சி 20
இடம்& அசோக்குமார் வீடு
பங்குபெறுபவர்கள்- அமுதா, பவித்ரா, ராஜேஷ்
==========================
பவித்ரா: அக்கா எனக்கு செமஸ்டர் பீஸ் கட்டணும். பணம் இருக்கா? இல்ல அத்தான்கிட்டத்தான் வாங்கணுமா?
அமுதா: இனிமே அவரைப் பற்றி பேசாதே. உனக்கு தேவையான பணத்தை நானே தர்றேன். ஆமா காலேஜுக்கு எப்ப போகணும்?
பவித்ரா: இன்னும் ரெண்டு நாள் கழிச்சி போகணும்.
அமுதா: பவித்ரா ஆனந்த் எப்படி இருக்கான்?
பவித்ரா: நல்லா இருக்காரு.
அமுதா: ஆமா அவன் உன்னை சுத்தி சுத்தி வாரேனே. உன்னை காதலிக்கிறானா?
பவித்ரா: அவருக்கு என் மேல விருப்பம்தான்.
அமுதா: உனக்கு அவன்மேல விருப்பம் இல்லையா?
பவித்ரா: போங்க அக்கா..
அமுதா: நல்ல பையன்தானே….
பவித்ரா: நல்ல குணம்…. நல்ல பெர்சனாலிட்டி…
அமுதா: பணக்காரங்கத்தானே?
பவித்ரா: ஆமாக்கா அதுல என்ன சந்தேகம்.
அமுதா: உன் படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சிக்கிடலாம்.
பவித்ரா: அத்தான் சம்மதிப்பாரான்னுதான் எனக்கு பயமா இருக்கு-.
அமுதா: அவரைப்பத்தி கவலைப்படாதே. உங்க காதல் விஷயம் அவங்க வீட்டுக்கும் தெரியணும். அப்பத்தான் பின்னாடி பிரச்சினை இல்லாம கல்யாணத்தை வச்சிக்கலாம்.
பவித்ரா: சரிக்கா.
ராஜேஷ்: (வந்து) அமுதா உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.
அமுதா: என்ன விஷயம்?
ராஜேஷ்: நம்ம வாங்கின ஷேர் நல்ல விலைக்கு போகுது.
அமுதா: இப்பவே பணம் வருமா?
ராஜேஷ்: வேண்டாம் அமுதா இன்னும் கொஞ்ச நாள் போன இதைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும்.
அமுதா: சரி அப்படியே செய்யுங்க.
ராஜேஷ்: அமுதா இன்னொரு விஷயமா நான் வந்தேன்…
அமுதா: என்ன சொல்லுங்க.
ராஜேஷ்: ஒரு வாட்டர் கம்பெனி விலைக்கு வந்திருக்கு. அதை வாங்கினா சீக்கிரமே பல கோடிக்கு அதிபதியாகிடலாம்.
அமுதா: சரி வாங்கிடுவோம்.
ராஜேஷ்: அதுக்கு பணம் வேணுமே..
அமுதா: என் நகையை அடமானம் வச்சிக்கலாமா?
ராஜேஷ்: அதுக்கு வட்டியே நிறைய ஆயிடும். இப்பவெல்லாம் நகைகள் விலை கூடுவதே கிடையாது. அதனால நகையை விற்று முதலீடு போடுவோம்.
அமுதா: விற்ற நகைகளை வாங்கிடலாம் அல்லவா?
ராஜேஷ்: இன்னும் ஏராளமான நகைகளை வாங்கலாம் அமுதா. அது மட்டுமல்ல, கூடிய சீக்கிரம் உங்களுக்கு விவாகரத்து ஆயிடும். அப்புறம் உங்களுக்கு ஜீவனாம்சமே நியை வரும். அப்படி இல்லாட்டி அசோக்குமாரோட பாதி சொத்து உங்க கைக்கு வந்துடும்.
அமுதா: அவரு சொத்துக்கு நான் ஆசைப்படல. ஆனா அவரு செய்த தப்ப உணரணும். அதுக்காக அவரோட பணம் முழுவதும் எங்கிட்ட வந்தாகணும்.
=====
காட்சி 21
இடம்& (தனி வீடு) அசோக்குமார் அறை
பங்குபெறுபவர்கள்= விமலா, கைசூப்பி கைலாசம், அசோக்குமார், போஸ்ட்மேன்
=====================
விமலா: இந்த அசோக்குமாரை எப்படியாவது மயக்கி நம்ம கழுத்திலே தாலி கட்ட வைச்சிடணும். நம்ம கல்யாணம் முடியும் வரைக்கும் நம்மளுடைய திட்டம் ராஜேசுக்கு தெரியக்கூடாது.
(கைசூப்பி கைலாசம் வருகிறான்)
விமலா: என்ன கைலாசம் இங்கே வந்திருக்கே. அண்ணனை பார்க்க வந்தியா?
கைசூப்பி கைலாசம்: அண்ணனை மட்டும் பார்க்க வரவில்லை. உன்னையும்தான்.
விமலா: ராஜேஷ் எதாவது சொல்லி அனுப்பினரா?
கைசூப்பி கைலாசம்: ஒண்ணும் சொல்லைவில்லை. ஒண்ணு தெரியுமா, அமுதா அக்கா விவாகரத்து செய்யப்போறாங்க. அவங்களும் ராஜேசும் ரொம்ப நெருங்கி பழகுறாங்க. அநேகமாக அவங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு நினைக்கிறேன்.
விமலா: அப்படியா ரொம்ப சந்தோஷம்.
கைசூப்பி கைலாசம்: விமலா இப்ப நீ ரொம்ப வசதியா ஆயிட்டே. என்னை மட்டும் மறந்திடாதே. சரி ராஜேசிடம் ஏதாவது சொல்லணுமா?
விமலா: ஒண்ணும் சொல்ல வேண்டாம். சரி.. அசோக்குமார் வர்ற நேரம். நீ உடனே கிளம்பு.
கைசூப்பி கைலாசம்: ஆமா இப்போதைக்கு நாம பழகுகிறது யாருக்கும் தெரிய வேண்டாம். நான் வர்றேன்.
(கைசூப்பி கைலாசம் செல்கிறான்)
விமலா: நல்ல செய்தியை கைசூப்பி கொண்டு வந்திருக்கான். அமுதாவும் அசோக்குமாரை பிரிஞ்சிடுவா. ராஜேசும் நம்மள விட்டு பிரிஞ்சிடுவான். எனக்கு அசோக்குமாரை கைப்பிடிக்க எந்த தடையும் இருக்காது.
அசோக்குமார்(வந்து): என்ன ஒரே சந்தோஷமா இருக்கிற?
விமலா: சந்தோஷம்தான். ஆனா…
அசோக்குமார்: என்ன ஆனா?
விமலா: நம்ம பிஸ்னஸ் நல்லா லாபத்தை கொடுக்கிறத நினைச்சா சந்தோஷம். ஆனா அமுதா அக்காவை நினைச்சா கவலையா இருக்கு.
அசோக்குமார்: அவள் கூடிய சீக்கிரம் திருந்தி வருவா?
விமலா: அப்படித்தான் நானும் நினைச்சேன். ஆனா நடக்கிறது வேறமாதிரில்லா இருக்கு.
அசோக்குமார்: என்ன சொல்ற…?
விமலா: ஆமா சொல்லவே கஷ்டமா இருக்கு… ராஜேசும் அவங்களும்… ரொம்ப அன்னியோனியமா இருக்காங்களாம்.
அசோக்குமார்: ச்ச அப்படி எல்லாம் இருக்காது. அமுதா பணத்தாசை பிடிச்சவத்தான். ஆனா இப்படி மோசமா எல்லாம் நடந்துக்க மாட்டாள்.
விமலா: இல்லைங்க… அவங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப்போறாங்களாம்.
அசோக்குமார்: விமலா… நாக்கு இருக்குன்ன எதை வேண்டுமானாலும் பேசாதே. அமுதாவைப்பற்றி எனக்கு நல்லா தெரியும்.
(அந்த நேரத்தில் தபால்காரன் உள்ளிருந்தபடி தபால் தபால்ன்னு சத்தம் போடுகிறான்.)
இதோ தபால் வருகிறது. வாங்கி வருகிறேன்.
(உள்ளே சென்று தபாலோடு வருகிறான்)
விமலா: என்ன லட்டருங்க?
அசோக்குமார்: (சோகமாக இருக்கிறான்) விமலா நீ சொன்னது உண்மைதானோ… அமுதா எனக்கு மோசம் பண்ணிட்டா..
விமலா: இந்த லட்டர்ல என்ன எழுதி இருக்காங்க.
அசோக்குமார்: இது லட்டர் இல்லை. விவாகரத்து நோட்டீசு. அமுதா எனக்கு விவாகரத்து நோட்டீசு அனுப்பி இருக்கிறா?
விமலா: என்னங்க… இந்த நேரத்திலத்தான் நீங்க தைரியமா இருக்கணும். உங்களுக்கு பக்க பலமா நான் இருக்கிறேன்.
அசோக்குமார்: எப்படி…. எப்படி…. அமுதாவா எனக்கு துரோகம் பண்ணுறா… விமலா என்னால நம்ப முடியலியோ…
விமலா: ஒரு பெண்ணே துணிந்து முடிவு எடுக்கும் போது நீங்க என்ன செய்வீங்க… கவலையை விடுங்க… என் வாழ்க்கையையே நான் உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
அசோக்குமார்: விமலா நீ சின்னப்பொண்ணு. அப்படி எல்லாம் பேசக்கூடாது. எனக்கு வந்த பிரச்சினையை நான் பார்த்துக்கிறேன். நீ.. நீயாவது நல்லா இருக்கணும்.
(அழுகிறான்)
விமலா: இந்த நிலையில உங்களை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். நீங்க என் கழுத்தில தாலி கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி நான்தான் உங்க மனைவி.
=======
காட்சி 22
இடம்= சாலையோரம்
பங்கு பெறுபவர்கள் =அசோக்குமார், ராஜேஷ், 2 ரவுடிகள், விமலா
=================
அசோக்குமார்: டேய் ராஜேஷ் ஏண்டா எங்க வீட்ல புகுந்து பிரச்சினை உண்டு பண்ணுற?
ராஜேஷ்: மிஸ்டர் அசோக்குமார்… என் மேல எந்த தப்பும் கிடையாது.
அசோக்குமார்: என்னடா எங்கிட்ட இருந்து என் மனைவிய பிரிச்சிட்டே. இப்போ விவாகரத்து நோட்டீசும் அனுப்பி வைச்சிட்டே. அவளை பத்தி தப்பு தப்பா வதந்திய பரப்ப விடறியே. நீ நல்லா இருப்பியா?
ராஜேஷ்: நான் எதுவும் செய்யவில்லை. எல்லாமே அமுதாதான். உங்ககூட வாழ அவங்களுக்கு பிடிக்கல. அதுக்கு நான் என்ன செய்வேன்.
அசோக்குமார்: நீ என்ன செய்வியா? நீதானடே எல்லாத்துக்கும் காரணம். உன்னை…
(ராஜேசின் சட்டையை பிடிக்கிறான்.)
ராஜேஷ்: என்மேலேயே கையை வச்சிட்டியா-? உன்னை என்ன பண்றேன்னு பாரு…
(அசோக்குமாரை அடிக்கிறான். அவன் கீழே விழுகிறான்.)
டேய் வாங்கடா…
(இரண்டு ரவுடி குண்டார்கள் வருகிறார்கள்)
இவனுக்கு கொஞ்சம் பாடம் புகட்டுங்கடா.
(அவர்களும் அசோக்குமாரை அடிக்க…. அவன் கிழே விழுந்து ரத்தம் கொட்டுகிறது.)
ராஜேஷ்: என் பலம் என்னன்னு தெரிஞ்சுதா… இனிமேயாவது என் வழியில குறுக்கிடாதே. ஜாக்கிரதை.
(அந்த நேரத்தில் அமுதா வருவதை அறிகிறான்)
ரவுடி&1: அண்ணே அதோ அமுதா வர்றாங்க.
(உடனே ராஜேஷ் அவசர அவசரமாக இரண்டு ரவுடிகளின் கைகளையும் கட்டுகிறான்.)
ராஜேஷ்: வா அமுதா.. என்ன இந்தப்பக்கம்?
அமுதா: மார்க்கெட் வந்தேன்… யாரு அந்த பக்கம் கீழே விழுந்து கிடக்கிறது? இவங்க யாரு?
ராஜேஷ்: அது வேற யாரும் இல்ல. உங்களோடு மாஜி கணவர்தான். அசோக்குமாருக்கும் இவங்களுக்கும் ஏதோ பணம் கொடுக்கல்&வாங்கல்ல தகராறு. இந்த பசங்க ரெண்டு பேரும் அசோக்குமாரை சரமாரியா அடிச்சிக்கிட்டு இருந்தாங்க. நல்ல வேளையா நான் அந்தப்பக்கம் வந்தேன். எனக்கு மனசு கேட்கல… இவங்கக்கிட்ட இருந்து அசோக்குமாரை காப்பாத்திட்டேன். இவங்களை கட்டிப்போட்டிருக்கேன். போலீஸ்ல ஒப்படைக்கணும்.
அசோக்குமார்: (தட்டுத்தடுமாறி எழுந்து….) டேய் ஏண்டா பொய்சொல்ற.. அமுதா என்னை அடிச்சது இந்த ராஜேஷ்தான்… இந்த ரவுடிகளை அடிக்கச் சொன்னதும் இவன்தான். நீ வந்ததும் நடிக்கிறான்.
அமுதா: டேய் யாருடா இவரை அடிச்சா?
ரவுடி&2: எங்கள மன்னிச்சிடுங்க மேடம். நாங்க பார்த்த வேலைக்கு சரியா கூலித்தரவில்லை. அதோட அன்னிக்கு இந்த ராஜேசை அடிக்கச் சொன்னாரு. இவரு கையையே ஒடிச்சிட்டோம். அதுக்கும் பணம் தரவில்லை. அந்தப் பணத்தை கேட்டோம். அப்போதான் தகராறு வந்து, நாங்க இவரை அடிச்சி உதைச்சிட்டோம் மேடம்.
அசோக்குமார்: அமுதா இவங்க சொல்றதை நம்பாதே. நம்ம இவன்தான் இந்த குண்டர்கள வச்சி என்னை அடிச்சான். நம்ம குடும்பத்தில குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறான். நீ நம்பாதே.
அமுதா: நீங்க ரவுடியாவே மாறிட்டிங்க. இப்ப பொய்யும் சொல்றீங்க. எனக்கு உதவி செய்யறாருங்கிற ஒரே காரணத்துக்காக இவருடைய கையை முறிச்சிட்டிங்க. அவருக்கு நல்ல மனசு இருக்கிறதால உங்க மேலே போலீசிலக்கூட புகார் பண்ணல. இப்போ பாருங்க இந்த ரவுடி பசங்கக்கிட்ட இருந்து உங்களை காப்பாற்றி இருக்கிறாரு.
அசோக்குமார்: அமுதா அமுதா நான் சொல்றதை நம்பு. உனக்கு பணம்தான் பெரிசுன்னு என் சொத்து எல்லாத்தையும் உன் பேருக்கு எழுதி வச்சிடறேன். இவனைவிட்டு வந்துடு. இவன் பொல்லாதவன்.
அமுதா: ஆமா இவரு நல்லவரு. நீங்கத்தான் வில்லனா மாறிட்டிங்களே.. நல்லவேளை உங்களை விவாகரத்து பண்ணிட்டேன். உங்கக்கூட இருந்த என் வாழ்க்கை மட்டுமல்ல என் தங்கச்சி வாழ்க்கையும் நாசமா போயிடும்.
(ராஜேஷ் ரவுடிகளுடன் செல்ல, பின்னால் அமுதாவும் செல்கிறாள்.)
அசோக்குமார்: ஐயோ கடவுளே… இப்படி என் குடும்பத்தை நாசமாக்கிட்டாயே… அது நல்லபாம்பை உண்மையிலேயே நல்ல பாம்புன்னு நினைக்கிறாளே.
(அந்த நேரத்தில் விமலா வருகிறாள்)
விமலா: என்னங்க இந்த கோலம்?
அசோக்குமார்: அந்த படுபாவி ராஜேஷ்தான் என்னை ஆளவச்சி அடிச்சிட்டான்.
ராஜேஷ்: அடப்பாவி, வாங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு…
அசோக்குமார்: வேண்டாம். அவன் அடிச்சதை அமுதாவே நம்ப மாட்டேங்கிறா. எனக்கு எதிரா அவளே சாட்சி சொல்லுவாள். நாம போலீசுக்கு போனா என் குடும்ப மானம்தான் போகும். வேண்டாம் விமலா. என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ…
(தொடரும்)