சேரன்மாதேவி அருகே வாலிபர் வெட்டிக் கொலை
1 min read28.2.2020
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள இடையன்குளம் வடக்கு எருக்களைப்பட்டியை சேர்ந்தவர் ரூபன் வேததுரை (32), விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து யோகேஸ்வரி என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. 27ம் தேதி பிற்பகல் ரூபன், புலவன்குடியிருப்பில் உள்ள குளத்திற்கு பைக்கில் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளக்கரையில் வழிமறித்த மர்ம நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரூபனின் முதுகு தண்டில் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் பலத்த காயமடைந்து ரூபன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். தகவலறிந்த அவரது உறவினர்கள் விரைந்து சென்று ரூபனை மீட்டு சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ரூபன் உயிரிழந்தார்.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார், மருத்துவமனைக்கு சென்று ரூபனின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், தடயங்களை சேகரித்து தப்பியோடிய மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு புலவன்குடியிருப்பு குளத்தில் மண் அள்ளும்போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ரூபன் வெட்டப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.