திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
1 min read18.2.2020
அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் மாசித்திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 28ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு அபிஷேகம், 2.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. காலை 4 மணிக்கு கொடிபட்டம் பல்லக்கில் வைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து 4.30 மணிக்கு கோயிலில் உள்ள கொடிமரத்திற்கு வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து 5.20 மணிக்கு வீரபாகுபட்டர் தலைமையில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு பலவகையான அபிஷேகம், அலங்காரத்தை தொடர்ந்து 6.25 மணிக்கு மகாதீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
முக்கிய திருவிழாவான மார்ச்.5ம் தேதி 7ம் நாள் அதிகாலை 4.30 மணிக்கு மேல் திருக்கோயிலில் சண்முகப்பெருமான் உருகு சட்டசேவையும் காலை 8.30 மணிக்கு சுவாமி சண்முக விலாசத்திலிருந்து வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி சேருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது., மாலை 4.30 மணிக்கு தங்கச் சப்பரத்தில் சிவப்புசாத்தியில் எழுந்தருளுகின்றார். 8ம்திருவிழா 6ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளி சப்பரத்திலும், பகல் 12 மணிக்கு பச்சை சாத்தி சப்பரத்தில் எழுந்தருளுகிறார். 10ம் திருவிழா 8ம் தேதி காலையில் தேரோட்டம் நடக்கிறது. காலை 6.30 மணிக்கு முதலில் விநாயகர், சுவாமி, அம்மாள் தேர்கள் இழுக்கப்படுகின்றன. 9ம் தேதி இரவில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 10ம் தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடக்கிறது. இரவு 9மணிக்கு சுவாமி, அம்மன் மலர்கேடயச் சப்பரத்தில் எழுந்தளுகிறார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.