தென்காசி கோர்ட்டு வழங்கிய முதல் தூக்கு தண்டனை; நீதிபதிக்கு பாராட்டு
1 min readThe first execution by Tenkasi Court; Appreciate the judge
29/2/2020
தாய்-மகள் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தென்காசி கோர்ட்டு வழங்கிய முதல் தூக்கு தண்டனை இதுதான்.
அடுத்தடுத்து கொலை
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூா் அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன். இவருடைய மனைவி பேச்சித்தாய் (வயது 48). இவா்களுக்கு 6 மகள்கள். இவா்களில், மூத்த மகளான கோமதி (21) சற்று மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
அதே ஊரில் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் முத்துராஜ் என்ற ஆண்டவா் (32). இவா் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
இதனால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முத்துராஜ் கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த மாதமே அதாவது பிப்வரி 12-ந் தேதி பேச்சித்தாய், அவருடைய மகள் கோமதி ஆகியோரிடம் தகராறு செய்துள்ளாா். இதுகுறித்து பேச்சித்தாய் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸ் துணை சூப்பிரண்டு விசாரணை நடத்தி, முத்துராஜை எச்சரித்து அனுப்பிவிட்டார்.
தன் மீது போலீசில் புகார் செய்ததால் முத்துராஜ் ஆத்திரம் அடைந்தார். பழிவாங்க காத்திருந்தார். 16 -ந் தேதி பேச்சித்தாய் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
பேச்சித்தாயின் அலறலைக் கேட்டு அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்த அவரது மகள் மாரி ஓடிவந்தார். அவரையும் முத்துராஜ் வெட்டிக் கொன்றார். பின்னர் அங்கிருந்து ஊய்க்காட்டு சுடலைமாட சுவாமி கோவில் பகுதியில் நின்றுகொண்டிருந்த பேச்சித்தாயின் தந்தை கோவிந்தசாமியையும் வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிவிட்டார்.
தூக்கு தண்டனை
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து முத்துராஜை கைது செய்தனா். இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சி. விஜயகுமாா், 3 கொலைகளை செய்த முத்துராஜுக்கு தூக்கு தண்டனை விதித்து நேற்று (வெள்ளிக்கிழமை) தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கீலாக எஸ். ராமச்சந்திரன் ஆஜராகி வாதாடினார்.
முதல் தீர்ப்பு
தென்காசி கோர்ட்டில் இப்போதுதான் முதன்முறையாக தூக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அது மட்டுமல்லாமல் தென்காசி மாவட்டம் உருவான பின் இந்த தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற தீர்ப்புகள் அடுத்து குற்றங்கள் நடக்காமல் பாதுகாக்கும். தென்காசி அமைதியான மாவட்டம் என்ற பெயர் வாங்க இதுபோன்ற தீர்ப்புகள் கைகொடுக்கும்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதியை பலரும் பாராட்டுகிறார்கள்.