May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

2 ஆண்டுகளில் ஓடும் ரெயிலில் 29 பெண்கள் பாலியல் பலாத்காரம்

1 min read
2/3/2020
 கடந்த  2017 முதல் 2019 வரை  ஓடும் ரெயிலில் 29 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளனர்.

 ரெயிலில் பாலியல் பலாத்காரம்

 ஓடும் ரெியிலில் தனியாகச் செல்லும் பெண்கள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் துணிந்து போலீசில் புகார் செய்கிறார்கள். ஆனால் பலர் புகார் செய்யாமல் ஒதுங்கி விடுகிறார்கள். கூட்டம் அதிகம் இல்லாத வேளைகளில் சில பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். இதைவிட ரெயில் நிலையங்களிலும் பாலியல் பலாத்காரம் நடக்கிறது.
 இதுபற்றி மத்திய பிரதேசம் மாநிலம் நீமுச் நகரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரெயில்வே வளாகம் மற்றும் ரெயில்களில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகள் மற்றும் அதுதொடர்பான விசாரணை குறித்த விவரங்களைக் கேட்டிருந்தார்.  
 அதற்கு அளித்த பதிலில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த தகவல்கள் வருமாறு:-

 29 பெண்கள்

 2017-2019 ம் ஆண்டுகளில் ரெயில்வே வளாகங்களில் 136 பேரும், ஓடும் ரெயில்களில் 29 பேரும் என 165 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 
 கடந்த ஆண்டு பதிவான 44 பாலியல் பலாத்கார வழக்குகளில், 36 சம்பவங்கள் ரெயில்வே வளாகத்திலும், 8 சம்பவங்கள் ஓடும் ரெயில்களிலும் நடந்துள்ளன. 2018 ம் ஆண்டு பதிவான 70 பாலியல் பலாத்கார வழக்குகளில் 59 சம்பவங்கள் ரெயில்வே வளாகத்திலும், 11 சம்பவங்கள் ஓடும் ரெயில்களிலும் நிகழ்ந்துள்ளன. 2017ம் ஆண்டு பதிவான 51 பாலியல் பலாத்கார வழக்குகளில் 41 சம்பவங்கள் ரெயில்வே வளாகத்திலும், 10 சம்பவங்கள் ஓடும் ரெயில்களிலும் நடந்துள்ளன. 
 பாலியல் பலாத்காரங்களைத் தவிர பெண்களுக்கு எதிராக 1,672 குற்றங்கள் நடந்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், ரெயில்வே வளாகத்தில் 802 குற்றங்களும், ஓடும் ரெயில்களில் 870 குற்றங்களும் நடந்திருக்கின்றன.
 கொலைகள்
 கடந்த 3 ஆண்டுகளில் ரெயில்வே வளாகங்கள் மற்றும் ரெயில்களில் 771 கடத்தல் சம்பவங்கள், 4,718 கொள்ளை சம்பவங்கள், 213 கொலை முயற்சி சம்பவங்கள் மற்றும் 542 கொலை சம்பவங்கள் நடந்திருக்கின்றன. 
 2017ம் ஆண்டில் பாலியல் பலாத்காரம்  51 ஆக இருந்த நிலையில்  2019 ம் ஆண்டு 44 ஆக குறைந்துள்ளது. ஆனால் இடையில் அதாவது 2018ம் ஆண்டு 70 ஆக உயர்ந்து இருந்தது. 
 கடந்த ஆண்டு (2019)  மட்டும், ரெயில்வே வளாகங்களிலும், ரெயில்களிலும் மொத்தம் 55,826 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. 2017 -ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 71,055 ஆக இருந்தது.


 பாதுகாப்பு உதவி எண்


 பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான உதவிக்காக இந்திய ரயில்வேயில் 24 மணி நேரமும் செயல்படும் 182 என்ற பாதுகாப்பு உதவி எண்ணை செயல்படுத்து வருகிறது. 
 பெண் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஆண் பயணிகள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது ரயில்வே சட்டம், 1989 இன் பிரிவு 162 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகின்றன. 
 2018 ஆண்டு 1,39,422 ஆண்கள் மீதும் 2019 ம் ஆண்டு 1,14,170 ஆண் பயணிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக 2019 டிசம்பர் வரை 511 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
 இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் ரயில்வே முழுவதும் குற்றங்கள் குறைந்துள்ளது. 

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.