May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தண்ணீர்… தண்ணீர்… உருவாகும் புது பிரச்சினை

1 min read

New problem in water

1/3/2020

வறட்சி காலத்தில் குடிக்ககூட தண்ணீர் கிடைக்காமல் பல மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் காலம் இருந்தது. அப்போதெல்லாம் கிணற்று தண்ணீர்தான் பயன்பாட்டுக்கு. பல கிராமங்களில் தண்ணீர் சப்பென்றுதான் இருக்கும். மழை காலத்தில் கலங்கலாக இருக்கும் தண்ணீரை பிடித்து சில நாட்கள் வீட்டில் வைத்தவிட்டால் தெளிந்துவிடும்.


மினரல் வாட்டர்

இன்று கிராமபுறங்களில் கூட காலம் மாறிவிட்டது. வெகு தூரத்தில் இருந்தும் தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வீட்டிற்கே தருகிறார்கள்.
குழாய் தண்ணீரை அப்படியே குடித்து வந்த நாம் அதில் கிருமி இருக்கிறது என்று கூறி கொதிக்க வைத்து குடித்தோம். பின்னர் அதில் அசுத்தம் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை வடிகட்டி குடித்தோம். தண்ணீரை வடிகட்ட இயற்கை முறையிலான சாதனங்கள் வந்தன.
இப்படி பயன்படுத்தியதால் தண்ணீரின் இயற்கை குணம் மாறாமல் இருந்தது.
ஆனால் இப்போது மினரல் வாட்டர் என்று நாம் வாங்கி குடிக்கிறோம். தண்ணீரில் உள்ள கிருமியை கொல்கிறோம் என்று கூறி தண்ணீரல் இருக்கும் நல்ல உயிரணுக்களையும் கொன்று விடுகிறோாம். மினரல் வாட்டரை மீன் தொட்டியில் நிரப்பினால் மீன்கள் செத்துவிடும். அந்த அளவுக்குதான் அந்த தண்ணீரின் நிலை.
ஆனால் அந்த தண்ணீருக்கு இருக்கும் மதிப்பினால் இன்று கேன் தண்ணீர் விற்பனை அமோகமாக நடக்கிறது.
கேனில் வரும் தண்ணீர் எப்படி பட்டது என்பது கூட தெரியாமல் நாம் அதை அமிர்தமாக வாங்கி குடிக்கிறோம். இந்த கேன் தண்ணீர் தொழிற்சாலையை முறைபடுத்து ஐகோர்ட்டு உத்தரவு ஒன்று பிறப்பித்து உள்ளது.

சீல் வைப்பு

தமிழகத்தில் நிலத்தடி நீா் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் தனியாா் கேன் குடிநீா் ஆலைகளை மூடி சீல் வைக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தமிழ்நாடு கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து கடந்த வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் குடிநீா் உற்பத்தியை நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுகின்றனா். இப்போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 4-ஆவது நாளாக நீடிக்கிறது.

இந்த நிலையில் உரிமம் பெறாத தனியாா் குடிநீா் ஆலைகளுக்கு சீல் வைக்கும் பணியை நேற்று (சனிக்கிழமை) முதல் அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். தமிழகம் முழுவதும் 1,689 கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் உள்ளனா். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய 4 மாவட்டங்களில் 470 குடிநீா் உற்பத்தி ஆலைகள் உள்ளன.

இவற்றில் திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 215 குடிநீா் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மாவட்டத்தில் இருந்து தினமும் 5 லட்சம் குடிநீா் கேன்களில் தண்ணீா் வினியோகிக்கப்படுகிறது. 4 மாவட்டங்களில் உள்ள தனியாா் குடிநீா் ஆலைகளில் இருந்து சுமாா் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீா் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைப்பதால் கேன் குடிநீா் விநியோகம் கணிசமாக குறைந்தது.

சென்னையில் 5 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் 23 குடிநீா் ஆலைகளுக்கும், கரூா் மாவட்டத்தில் 8 ஆலைகளுக்கும், ஈரோடு, கோவை, திருப்பூரில் மாவட்டங்களில் 33 குடிநீா் உற்பத்தி நிறுவனங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் 20-க்கும் மேற்பட்ட குடிநீா் உற்பத்தி ஆலைகள் முடக்கப்பட்டுள்ளன.

தட்டுப்பாடு

குடிநீா் ஆலைகள் சீல் வைக்கப்பட்டு வருவதால் வீடுகள், தங்கும் விடுதிகள், கடைகள், ஓட்டல்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கேன் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சென்னையில் 90 சதவீதம் போ் கேன் தண்ணீரைதான் நம்பி உள்ளனா். அவா்களுக்கு கேன் தண்ணீா் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடு காரணமாக ஒரு கேன் தண்ணீா் ரூ.50 முதல் ரூ.60 வரை அதிகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

அரசு விளக்கம்

இந்த நிலையில் இது தொடா்பாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், நிலத்தடி நீா் எடுப்பதற்கு சில வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் நிலத்தடி நீா் எடுக்கப்படும் இடங்கள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீா் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அங்கு குடிநீா் உறிஞ்சி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதி அபாயகரமான பகுதி மற்றும் சராசரியான பகுதிகளில் குடிநீா் உற்பத்தி ஆலைகள் அமைக்கலாம். அந்த பகுதிகளில் கேட்கப்படும் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகின்றன. எனவே கேன் குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு அரசு உரிமம் வழங்குவது இல்லை என்ற தகவலில் உண்மையில்லை. அனுமதி இல்லாத குடிநீா் உற்பத்தி ஆலைகளுக்கு மட்டுமே நீதிமன்ற உத்தரவின்பேரில் சீல் வைக்கப்படுகிறது எனத் தெரிவித்தனா்.

என்ன செய்யலாம்?

தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இயற்கை முறையில் அவரவர் தண்ணீரை சுத்தம் செய்து குடிக்கலாம்.

சாதாரணமாக குழாய்களில் வரும் நீரைப் பிடித்து, கொதிக்க வைத்து குடிநீராகப் பயன்படுத்தலாம். வெந்நீரைக் குடித்தாலே செரிமானத் தொந்தரவுகள், உடல் வலி போன்றவை நீங்கி, நீண்ட ஆயுள் கிடைக்கும்.
மண்பானையில் தண்ணீரைச பிடித்து வைத்துப் குடிக்கலாம். மண்பானை நீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.

செம்புக் குடத்தில் இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வரை தண்ணீரை ஊற்றிவைப்பது மூலமாகத் தண்ணீரில் உள்ள மாசுகளை அகற்றி, நுண்கிருமிகளை அழித்து, தண்ணீரை சுத்தப்படுத்தலாம். மண்பானையில் செப்புக் காசுகளைப் போட்டுவைப்பதன் மூலமாகவும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம். நீரை கொதிக்கவைத்த பின்னர், நெல்லிக்கனிகளையும் சீரகத்தையும் சிறிதளவு சேர்த்து, ஊறவைத்துப் பருகலாம். தண்ணீரை காய்ச்சும்போதே சீரகத்தைப் போட்டும் கொதிக்க வைக்கலாம். நெல்லி ஊறிய நீர், உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கும். சீரகத்தில் உள்ள நுண்சத்துகள் நோய் போக்கும் தன்மையை அதிகரிக்கும்.

தேற்றான் கொட்டை

தேற்றான் கொட்டைகளை நீரில் போட்டுவைக்கலாம். தேற்றான் கொட்டை ஊறிய நீர், மாசுகள் அகன்று தூய நீராக மாறும். சமையலுக்கு உபயோகிக்கக்கூடிய தண்ணீரிலோ குடிக்கும் தண்ணீரிலோ தேற்றான் கொட்டையைப் பொடியாக்கிப் போடலாம். தண்ணீரில் இருக்கக்கூடிய நுண்கிருமி மற்றும் பாக்டீரியாக்களை, பாத்திரத்தின் அடியில் படிய வைத்துவிடும். கேன்வாட்டரிலும் தேற்றான் கொட்டையைப் பயன்படுத்தலாம். நீர்த்தேக்கத் தொட்டியிலும்கூட, உடைத்த தேற்றான் கொட்டையை மெல்லிய துணியில் முடிந்துபோடலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.