May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

காரில் சுற்றி சற்றி லஞ்சம் வசூலித்த துணை கலெக்டர் – பெண்களை ஏமாற்றி சல்லாபம்

1 min read
Seithi Saral featured Image
Deputy Collector on Bribery – Cheating on women

2.3.2020

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே இரும்புலி கிராமத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்(31) என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முன்னோர்களின் பூர்வீக சொத்தை அவரது பெயருக்கு கிரையம் செய்தார். இதற்கான முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தியதாக கூறிய வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரை கட்டண துணை கலெக்டர் தினகரன், இதை சரிசெய்ய ₹50 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கார் டிரைவர் ரமேஷ்குமார் மூலமாக தினகரன் லஞ்சப் பணத்தை வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கொடுக்குமாறு கூறினார். இதையடுத்து ரஞ்சித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்பேரில் கடந்த 28ம்தேதி இரவு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று லஞ்சப் பணம் ரூ.50 ஆயிரத்தை கொடுத்தார். அதனை வாங்கிக் கொண்டு காரில் பறந்த தினகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் விரட்டிச்சென்று மடக்கிபிடித்தனர். மேலும் அவரது கார் டிரைவர் ரமேஷ்குமாரும் பிடிபட்டார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது அலுவலகம், காட்பாடியில் உள்ள வாடகை வீடு, போளூர் உள்ள வீடு ஆகியவற்றில் நடத்திய சோதனையில் மொத்தம் ₹79 லட்சத்து 9 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில், தினகரன் ஒவ்வொரு நாளும் யார் யாரிடம் பணம் பெற வேண்டும் என்று பட்டியல் தயாரித்து வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக மாடுவிடும் திருவிழா நடந்த இடங்களுக்கு சென்ற தினகரன் ஆய்வு செய்வார். அவரது கார் டிரைவர் விழாக் குழுவினரை சந்தித்து டெபுடி கலெக்டருக்கு மரியாதை செய்யுங்க என்று வெளிப்படையாகவே லஞ்சம் கேட்டு வாங்கிச் சென்றுள்ளார். இவ்வாறு லட்சக்கணக்கில் லஞ்சப்பணத்தை வசூலித்துள்ளனர்.

தினமும் யார் யாரை சந்தித்து லஞ்சம் வாங்க வேண்டும், என்று டிரைவர் ரமேஷ்குமாரிடம் தினகரன் பட்டியல் கொடுத்துவிடுவாராம். ரூ2000 நோட்டு விரைவில் செல்லாததாகிவிடும் என்ற சந்தேகத்தால் புதிய 500 ரூபாய் கட்டுகள்தான் கொடுக்க வேண்டும் என்று கண்டிப்புடன் வசூல் செய்து வந்துள்ளார். அலுவலக பணிக்காக காரில் சுற்றிய நேரத்தை விடவும் லஞ்சம் வாங்குவதற்காகவே காரில் சுற்றிய நேரம்தான் அதிகம் என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தினகரனுக்கு 11 அதிகாரிகள் உதவியதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தினகரன் லட்சம், லட்சமாக வாங்கிய லஞ்சப்பணத்தை வைத்துக் கொண்டு  பல பெண்களுடன் சல்லாபமாக வாழ்ந்து வந்ததும் தற்போது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், டிரங்க் பெட்டி நிறைய பணம் இருப்பதால் என்ன என்னவெல்லாம் வேண்டுமோ அதை துணை கலெக்டர் அனுபவித்து வந்துள்ளார். தொடக்க காலத்தில் டிப் டாப்பாக வலம் வந்த இவரை கண்ட அதிகாரிகள்  ரொம்ப ஸ்ட்ரிக்ட்டானவராக இருப்பாரோ என்று பேசிக்கொண்டனர். ஆனால் நாளடைவில் துணை கலெக்டரின் சுயரூபம் தெரிய வந்தது.

வேலூரில் உள்ள தனது அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் இளநிலை உதவியாளர் ஒருவரிடம் தினகரன் மிக நெருக்கமாக பழகியுள்ளார். அவரது செலவுக்கு பணத்தை வாரி வாரி வழங்கியுள்ளார். மேலும் முத்திரைக்கட்டணம் தொடர்பாக எந்த புகார் வந்தாலும் பெண் அதிகாரியே அதை கவனித்து வந்துள்ளார். இதன்மூலம் பணத்தை பெற்றுக்கொண்டு இவரே பணியை முடித்து கொடுத்துள்ளார். பல்வேறு புகார்கள் காரணமாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் கடந்த 4 மாதங்களுக்கு முன் பதவி உயர்வு பெற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வேலூர் தனி துணை ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய காலத்திலேயே ராணிப்பேட்டையில் ரூ.1 கோடி மதிப்பில் சொகுசு பங்களா கட்டியுள்ளார். அரசின் அனுமதி பெற்று இந்த வீடு கட்டினாரா? அல்லது முறைகேடாக லஞ்ச பணத்தில் வீடு கட்டினாரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தினகரன் தனது அலுவலகத்திற்கு சொந்த வேலை காரணமாக வரும் சில பெண்களிடம் கவர்ச்சியாக பேசி வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் தனது வலையில் சிக்கிய பெண்களை வெளி இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். காட்பாடி அடுத்த தாங்கல் கிராமத்தில் தனியாக வாடகை வீடு எடுத்தும் சல்லாபமாக வாழ்ந்து வந்துள்ளார். பல கோடிகள் செலவு செய்து சொகுசு கார், சொந்த ஊரில் பங்களா என்று சொகுசான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இவரின் மன்மத லீலைகள் அலுவலகத்திலும், சொகுசு ஓட்டல் லாட்ஜ்களிலும் அரங்கேறியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாகவும் தொடர்ந்து விசாரிப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

இதனிடைய சென்னையில் உள்ள வருவாய்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து உத்தரவுக் கடிதம் வந்தவுடன் லஞ்ச வழக்கில் கைதான துணை கலெக்டர் தினகரன் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்று வேலூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.