May 25, 2024

Seithi Saral

Tamil News Channel

அதிக வட்டி தருவதாக பலகோடி ரூபாய் மோசடி- புளியங்குடி தம்பதியிடம் விசாரணை

1 min read
Seithi Saral featured Image
Puliyankudi couple investigating multi-crore rupee scam

2.3.2020

தென்காசி எஸ்பி மற்றும் நெல்லை மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புளியங்குடி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலர் திருச்சியை சேர்ந்த நிதி நிறுவனம் மீது புகார் செய்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுரையை சேர்ந்த துரை, அவரது மனைவி இருவரும் உடுமலை பேட்டை மற்றும் திருச்சியில் பகுதியில் பிட் காயின் பெயரில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனத்தை துவக்கி ஒரு இணையதளம் உருவாக்கி ஆன்லைன் வர்த்தகம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை போன்று தோற்றத்தை உருவாக்கி, இவர்களது கம்பெனியில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் முதல் 50 லட்சம் வரை பணம் முதலீடு (டெபாசிட்) செய்யலாம் என்றும் அதற்காக வங்கியில் வழங்கப்படுவதை விட 5 மடங்கு வட்டி மாதத்தின் முதல் வாரத்தில் ஏஜென்ட் மூலம் நேரில் அளிக்கப்படும் என்றனர்.

புதிய டெபாசிட்தாரர்களை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்கு அறிமுக கமிஷன் தொடர்ந்து 24 மாதங்கள் வழங்குகிறோம் என ஆசைவார்த்தை தெரிவித்தனர். இதனையடுத்து புளியங்குடியை சேர்ந்த ஒரு பெண் ஏஜென்ட், அவரது கணவர் மற்றும் உறவினர்கள் பொதுமக்களை சேர்த்தனர். பலர் போட்டிக்கொண்டு டெபாசிட் தொகையை வங்கி மூலம் செலுத்தாமல் ஏஜென்டிடம் கொடுத்துள்ளனர். அவர்கள் அதற்கு பதிலாக துண்டு சீட்டில் வரவு வைத்து அளித்துள்ளனர். பணத்தை டெபாசிட் செய்பவர்கள் சந்தேகம் அடைந்து விடக்கூடாது என்பதால் சில மாதங்கள் வட்டி வழங்கினர், பின்பு சாக்கு போக்கு கூறி தட்டி கழித்து வந்தனர்.

இதனிடையே உடுமலை பேட்டை, திருச்சி பகுதியில் இந்நிறுவனத்தால் ஏமாற்றம் அடைந்த பல டெபாசிட்தாரர்கள் கடந்த மாதம் திருச்சி மன்னார்புரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து அந்நிறுவன உரிமையாளர், உடுமலைபேட்டை, திருச்சியை சேர்ந்த பல ஏஜென்ட்கள் தலைமறைவாகினர்.

இதனையறிந்த புளியங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த டெபாசிட்தாரர்கள் பலர் புளியங்குடி போலீசில் 2 நாட்களாக தொடர்ந்து புகார் அளித்தனர். இதனையடுத்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் புளியங்குடி தம்பதியிடம் கடந்த இரு நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நூறு டெபாசிட்தாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும், இதில் டெபாசிட்தார்களுக்கு வெறுமனே துண்டு சீட்டில் பணத்தை வரவு வைத்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் எவ்வாறு வழக்குப்பதிவு செய்வது என அரசு சட்ட ஆலோசகரிடம் ஆலோசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.