May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கல்லூரி மாணவிகள் விடுதியில் பெண் வேடத்தில் புகுந்து நகை, செல்போன்களை அள்ளிச்சென்ற கொள்ளையன்

1 min read
The robber who stole jewelry and cell phones in the college girls hostel

2.3.2020

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. வெளி மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படிக்கிறார்கள். பிப். 27ம் அதிகாலை முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் உள்ள மாணவி கழிவறைக்கு செல்ல எழுந்தார்.

அப்போது, அந்த அறை கதவு திறந்து கிடந்தது. பொருட்களும் சிதறி கிடந்தது. அவரது செல்போனை காணவில்லை. தனது செல்போன் எங்கே என அவர் தேட தொடங்கியபோது மாணவிகளின் நகை, பணம், லேப்டாப் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

இதுபோல மேலும் சில அறைகளில் தங்கி இருந்த மாணவிகள் தங்களின் பணம், நகை, லேப்டாப், செல்போன்களை காணவில்லை என கதறினர். மாணவிகளின் சத்தம் கேட்டு விடுதி பொறுப்பாளர்கள் வந்து விசாரித்தபோது, 18 செல்போன்கள், 18 பவுன் நகைகள் (செயின், மோதிரம்), ₹25 ஆயிரம் ரொக்க பணம், லேப்டாப் ஆகியவை திருட்டு போய் விட்டதாக பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட மாணவிகள் கூறினர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. காலை 10 மணி அளவில் மாணவிகள் விடுதி பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது முதல் மாடியில் இருந்து லெக்கின்ஸ், சேலை அணிந்த ஒரு உருவம் கீழே இறங்கி செல்வது தெரிந்தது. அந்த உருவத்தை கூர்ந்து கவனித்தபோது அந்த உருவம் ஆண் என தெரியவந்தது. மீசையுடன் அந்த உருவம் காணப்பட்டது.

எனவே, மர்ம நபர் பெண்வேடமிட்டு மாணவிகள் விடுதிக்கு சென்று நகை, பணம், செல்போன், லேப்டாப் போன்றவற்றை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுகனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும் வந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் விடுதிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து உங்கள் பொருட்கள் மீட்டு தந்து விடுவோம். அதுவரை நீங்கள் கல்லூரிக்கு வரவேண்டாம் என அனுப்பி உள்ளனர்.

ஆனால் மார்ச் 2ம் தேதி காலை மீண்டும் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர். அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் மாணவிகள் வாசலிலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களை விடுதியில் அனுமதிக்க வேண்டும். திருட்டுபோன பொருட்களை மீட்டுத் தரவேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.