May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் காலமானார் -டாக்டர் ராமதாஸ் இரங்கல்

1 min read
Retired Professor Kumaraswamy passed away – Doctor Ramadas condolences

புதிய தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல் நலக்குறைவால் புதன்கிழமை காலமானார்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், “புத்தன் பேசுகிறான்’ என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

“மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை’, “தமிழ் அறிவோம்’, “தமிழ்ப் பெயர்க் கையேடு’, “இவர்தாம் பெரியார்’, “சோதிடப் புரட்டு’, “யார் இந்த ராமன்’ உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று அறிவரசன் 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை “ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள்’ என்ற பெயரில் நூலாக எழுதியுள்ளார்.

லண்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார். இவரது பூர்விக ஊர் சிவகிரி வட்டத்தில் உள்ள இராயகிரி ஆகும். இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துசெல்வி, தமிழ்செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வநம்பி,
அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர்.

இவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

பேராசிரியர் அறிவரசன் மறைவுக்கு டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்தள்ளார். அவர் கூறியிருப்பதாவது, கடையத்தைச் சேர்ந்த தமிழ்ப் பேராசிரியரும், ஈழப்போராளிகளுக்கு தமிழ் கற்றுத் தந்தவருமான பேராசிரியர் அறிவரசன் என்கிற மு.செ.குமாரசாமி முதுமை காரணமாக அவரது இல்லத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்ற அவர், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று ஈழத்திற்கு சென்று அங்குள்ள தமிழர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களில் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்து தமிழாசிரியர்களாக உருவாக்கினார்.

தமிழ் மற்றும் தமிழர் நலன் குறித்து ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். வாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடை அளித்த அவர், இறப்பிற்கு பிறகு தமது உடலையும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கியுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பா.ம.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.