ரஜினி அரசியல் திட்டம்… ரசிகர்கள் என்ன ஏமாளிகளா? காமராஜரின் அரசியல் ஒரு பாடமாக இருக்கட்டும்
1 min read
Rajini Political Plan ... Fans are not cheaters- Let Kamarajar's politics be a lesson
கமல்ஹாசன் பேசுவது பலருக்கு புரியாது என்பார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒரு வார்த்தை சொன்னாலும் அது சித்தர் வாக்காக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படிப்பட்ட ரஜினி… இப்போது ஏன் குழம்பி போய் பேசி ரசிகர்களை ஏமாற்ற வைத்தார் என்பது பலருக்கு புரியவில்லை.
12ம் தேதி ரஜினி அறிவித்ததின் முக்கிய சாராம்சம் இதுதான்… தான் கட்சிக்கு மட்டும் தலைமை தாங்குகிறேன், முதல்-அமைச்சராக ஒரு நல்லவரை பொறுப்பு ஏற்க வைப்பேன் என்பதுதான்.
இதற்கு இரண்டு காரணங்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். அவர் பல்வேறு சிறு கட்சி தலைவர்களின் விமர்சனத்தை தாங்கிக் கொள்ள வில்லையோ என்று தோன்றுகிறது. அதாவது கர்நாடகத்தைச் சேர்ந்தவர் முதல் அமைச்சர் ஆகக்கூடாது என்று சில அரசியல் கட்சியினர் சொன்னதை கேட்டு இப்படி முடிவு செய்து அறிவித்திருக்கலாம். அல்லது பொதுமக்களின் கருத்தை அறிந்து பின்னர் தானே முதல்-அமைச்சர் ஆகலாம் என்று அரசியல் ஸ்டண்ட் செய்திருக்க வேண்டும்.
ரஜினியை பொறுத்தவரை அவர் பல விஷயங்களில் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அப்படி பார்க்கும்போது இது அரசியல் ஸ்டண்டாக தெரியவில்லை. உண்மையில் தான் ஓர் அரசை இயக்கும் கட்சி தலைவராக இருக்கவே ஆசைப்படுகிறார் என்பது புலனாகிறது.
ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமா என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். ரஜினி ரசிகர்கள் அனைவரும் அவர் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார்கள். களத்தில் இறங்கி வேலை செய்யவும் செய்கிறார்கள். வேறு ஒருவரை முதல்வராக இருக்க இவர்கள் பாடுபடுவார்களா என்பது சந்தேகமே.
ஒரு நல்லவரை முதல் அமைச்சர் பொறுப்பில் அமர வைக்க வேண்டும் என்று சொல்கிறாரே… ரஜினி நல்லவர்தானே… அவரே அந்த பொறுப்பில் அமர வேண்டியதுதானே. இதுதான் அவரது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கும்.
காமராஜர் ஏமாந்தார்
ரஜினிகாந்த சொன்னது ஒரு வகையில் உண்மை. ஒரு ஜனநாயக நாட்டில் இப்படித்தான் அரசியல் கட்சியும், ஆட்சியும் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படித்தான் ஒரு காலத்தில் இந்திய தேசிய காங்கிரசும் இருந்தது. பெருந்தலைவர் காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது இப்படிதான் கட்சி, ஆட்சி என தனித்தனியாக இருந்தது. அதனால்தான் காமராஜர் லால்பகதூர் சாஸ்திரியையும் இந்திரா காந்தியையும் பிரதமர் ஆக்கினார்.
ஆனால் நடந்தது என்ன? இந்திரா காந்தி, தான் கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டுமா? என எண்ணினார். தூக்கி வைத்த தலைவரையே (காமராஜர்) எட்டி உதைத்தார். பாரம்பரிய மிக்க காங்கிரசை இரண்டாக உடைத்தார். கட்சியையும் ஆட்சியையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். கட்சிக்கு கட்டுப்பட்டு நடப்பார் என்று இந்திரா காந்தியை நம்பிய காமராஜர், பின்னாளில் உணர்ந்தார். எமர்ஜென்சியை கொண்டு வந்தபோதுதான் இவரை ஏன் கொண்டு வந்தோம் என்று வேதனையின் உச்சத்திற்கே சென்றுவிட்டார்.

தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். மூத்த தலைவர்கள் எல்லாம் கட்சிப் பணிக்கு செல்ல வேண்டும் என்ற ஒரு திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் கொண்டுவந்தபோது முதலில் முதல் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியவர் காமராஜர். காமராஜர் செய்த இன்னொரு பெரிய தவறு இது. அவர் கட்சியை வழி நடத்த சென்றுவிட்டார். ஆனால் தமிழகத்தை வழிநடத்த அந்த புதிய முதல் அமைச்சரால் (பக்தவச்சலம்) முடியவில்லை. இதனால் தி.மு.க.வே எதிர்பார்க்காத நிலையில் அந்த கட்சி ஆட்சியை பிடித்தது. அந்த நேரத்தில் காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் கண்டிப்பாக காங்கிரஸ் தோல்வியை சந்தித்து இருக்காது.
காங்கிரசுக்கு எதிராக அப்போது எழுப்பப்பட்ட முதல் குற்றச்சாட்டு அரசி விலை. அப்போது மழை இன்றி அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. எதிர்க்கட்சியாக இருந்த அண்ணாதுரை ரூபாய்க்கு 3 படி அரிசி போடுவோம் என்று பிராசாரம் செய்தார். ஆட்சிக்கும் வந்துவிட்டார்.
காமராஜர் முதல்வராக இருந்திருந்தால் எப்பாடு பட்டாவது அரிசியை இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை போக்கி இருப்பார். மதிய உணவு திட்டத்திற்காக பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியவர் பொதுமக்களை பட்டினி கிடக்க விடுவாரா என்ன? தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி உலக நாடுகளில் இருந்து அரிசியை கொண்டு வர ஏற்பாடு செய்திருப்பார்.
அதேபோல் அப்போது இந்தி பிரச்சினை பூதாகரமாக இருந்தது. காமராஜர் இந்தியை படிக்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் ஆட்சி அதிகாரத்தில் இந்தி நுழைவதை எதிர்த்தார். அவர் முதல்-அமைச்சராக இருந்திக்கும்போது ஆட்சி அதிகாரத்தில் இந்தியை நுழையவிட்டிருக்க மாட்டார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எப்படியாவது தனது சாணக்கிய தனத்தால் ஒடுக்கி இருப்பார்.
-இதை எல்லாம் ஏன் இங்கே சொல்கிறேன் என்றால்… ரஜினி அரசியல் கட்சிக்கு மட்டும் தலைவராக இருந்துகொண்டு ஆட்சி அதிகாரத்தை இன்னொருவரிடம் கொடுத்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்காகத்தான்…
அதே நேரம் திறம் படைத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆலோசனையை கேட்கலாம். ஆனால் அவர்களை தலைமை பொறுப்பை ஏற்க வைப்பது என்பது மிகப் பெரிய தவறு. அவர்கள் செயல்பாடு சட்டத்தின் படி இருக்கும். சமான்ய மக்களுக் முழுமையான நலன்பயக்கும் படி இருக்காது. பெருந்தலைவர் காமராஜர் எல்லா ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் கருத்தையும் கேட்டார். ஆனால் அவர்கள் சொல்வதைஎல்லாம் நடைமுறைப்படுத்த வில்லை. இதற்கு அவரது ஆட்சியில் எத்தனையோ எடுத்துக்காட்டை சொல்லலாம். ஒரு நல்ல மனிதரை ரஜினிகாந்த் ஆட்சி பொறுப்பில் அமர வைப்பேன் என்கிறார். ஆட்சி அதிகாரத்தில் நல்ல மனிதராக மட்டும் இருந்தால் போதாது. செயல்திறன் படைத்தவராகவும் இருக்க வேண்டும். நல்லவர் செயல்திறன் படைத்தவர் என ஒருவரை இவர் தேர்ந்து எடுத்தால், அவர் ஒரு காலத்தில் ரஜினிக்கு எதிராகவே வரவும் வாய்ப்பு உண்டு.
இதை எல்லாம் ரஜினிகாந்த் தெரிந்துதான் இப்படி பேசினாரா என்பது புரியவில்லை.
ரசிகர்கள் என்ன ஏமாளிகளா?
இன்னொருவர் முதல்-அமைச்சராக ஆக ரஜினி ஆசைப்படுவாராம், அதற்கு ரசிகர்கள் பாடுபட வேண்டுமாம்.. இது என்ன வேடிக்கை…. ரசிகர்கள் என்ன ஏமாளிகளா…-? அவரது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கட்சியின் மீது ஈர்ப்பு இருந்திருந்திருக்கும். அந்த ரசிகன் ரஜினி முதல்வராக வருவதாக இருந்தால் மட்டுமே தான் மானசீகமாக இருக்கும் கட்சியை விட்டுவிட்டு ரஜினியின் கட்சிக்கு ஓட்டுப்போடுவான். அவரே வராத பட்சத்தில் தான் ஏற்கனவே விரும்பிய கட்சிக்கு ஓட்டுப்போட்டுவிடுவான்.ஏற்கனவே விரும்பிய கட்சிக்கு ஓட்டுப்போட்டுவிடுவான்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரசியலில் வெற்றிபெற வில்லை என்று பலர் சொல்வார்கள். அது பெரிய தவறு. சிவாஜிகணேசனின் கை சுத்தமானது என்று பொதுமக்களுக்கு தெரியும். வெளியே காட்டிக் கொள்ளாத ரசிகர் பட்டாளங்கள் அவருக்கு நிறைய இருந்தது. அவர் இறந்தபோது யாரும் எதிர்பார்க்காத கூட்டம் திரண்டது ஒன்றே இதற்கு எடுத்துக்காட்டு. அப்படிப்பட்டவருக்கு ஏன் பொதுமக்கள் ஓட்டுப்போடவில்லை-? மக்களுக்கு தெரியும் நாம் சிவாஜி கணேசனுக்கு ஓட்டுப்போட்டால் அவரா முதல் அமைச்சராக வருவார்.. பின்னர் ஏன் ஓட்டுப்போட வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். (அப்போது சிவாஜி கணேசனை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை.)
ரஜினிகாந்த் அவர்களே உங்கள் ரசிகர்களும் அப்படிப்பட்டவர்தான். அவர்கள் இனம் தெரியாத ஒருவருக்காக உங்களுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். அவர்கள் ஏமாளிகள்அல்ல.
ரஜினி சொன்னத்தில் இன்னொன்று… தேர்தலுக்கு மட்டும் ஆட்களை பணிக்கு பயன்படுத்துவது என்று சொன்னது. இது நடைமுறை சாத்தியமா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பணியாற்ற யாரும் வரமாட்டார்கள். அதற்கு இன்னொரு வழியை அவர் தேட வேண்டும்…
அவர் தான் கூறியவற்றை முதலில் வாபஸ் பெற்றால்தான்… அவர் தைரிய சாலி… இல்லை என்றால் சில அரசியல் கட்சிக்காரர்களின் விமர்சனத்திற்கு பயந்துவிட்டார் என்றே தோன்றும்.