ரெயில் விபத்துக்களை தடுக்கும் கவாச் அமைப்பு
1 min readWays should be found to prevent train accidents- Gouache texture
4.6.2023
இந்தியாவை மட்டுமல்ல உலகையே அதிர்ச்சிக்குள்ளான விபத்தாக ஒடிசாவில் நடந்த ரெயில்விபத்து உள்ளது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இரவு 7 மணி அளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தின் பகனா பஜார் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சரக்கு ரெயில் மீது மோதியது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் பக்கத்து தண்டவாளத்தில் விழுந்துள்ளன. அந்த நேரத்தில் பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிவயது. இப்படி 3 ரெயில்கள் ஒன்றுக்கொன்று மோதி ஒன்றின் மீது மற்றொன்று ஏறி நின்றன, ஒன்றுக்குள் ஒன்று ஊடுருவி சிதைத்தன. தடம்புரண்ட 10-க்கும் மேற்பட்ட ரெயில் பெட்டிகள் நொறுங்கி விட்டன. விபத்தில் சிக்கிய 3 ரெயில்களில் 2 ரெயில்கள் பயணிகள் ரெயில் என்பதால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இடிபாடுகளில் சிக்கினார்கள். இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 என்று அதிகாரரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் புதன்கிழமைதான் முடிவடையும் என்று தெரிகிறது.
விபத்து நடந்த பகுதியில் நடந்து வரும் மீட்பு பணிகளை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறும்போது, இந்த ரெயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது. என்று கூறிய அவர் , “விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நடத்தப்படும் விசாரணையின் அறிக்கை வந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும்,” என்றும் கூறினார்.
இந்த விபத்தைத் தொடர்ந்து ‘கவாச் கருவி’ பெரிதும் விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கவாச் கருவி இருந்திருந்தால் விபத்து தவிர்த்திருக்க முடியும் என்பது பலரது குற்றச்சாட்டு. ஆனால் கவாச் கருவி இருந்திருந்தாலும் விபத்தை தடுத்திருக்க முடியாது என்று மந்திரி கூறினார்.
கவாச் என்பது இந்தி வார்த்தை. பாதுகாப்பு என்பதுதான் அதன் அர்த்தம். ரெயில்வே கவாச் பாதுகாப்பு முறை என்பது ரயில்களில் விபத்து நிகழாமல் தடுத்து நிறுத்த உதவும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்தப் பாதுகாப்புக் கருவியை ரெயில் என்ஜினில் பொருத்திவிட்டால், இரண்டு ரெயில்கள் ஒரே தடத்தில் வந்தாலும் மோதிக் கொள்ளாமல் தடுத்துவிட முடியும். ஏறக்குறைய அரை கி.மீ முதல் ஒரு கி.மீ தொலைவுக்குள்ளேயே இரு ரயில்களுக்கும் சிக்னல் கொடுத்து விபத்து ஏற்படாமல் ரெயிலை பாதுகாக்கும். ரெயிலை இயங்கவிடாமல் நிறுத்திவிடும். ஆனால், அந்த கவாச் கருவி பல ரெயில்களில் பொருத்தப்படவில்லை.
கவாச் அமைப்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டது. அரசாங்கத் திட்டத்தின்படி, 2000 கிமீ ரயில் நெட்வொர்க் கவாச் அமைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு முன்பு சமூக ஊடகம் ஒன்றிற்கு மந்திரி அஸ்வினி வைஷ்னவ் பேட்டி அளிக்கையில், “நாங்கள் சொந்தமாக கவாச் என்ற அமைப்பை உருவாக்குகிறோம்,” என்று கூறியிருந்தார். மேலும் அவர், “இந்த அமைப்பு ஐரோப்பிய தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது. நாங்களும் சோதனை செய்தோம். இந்தச் சோதனையில் நானும் ரெயிலில் இருந்தேன். ஒரே பாதையில் இருபுறமும் ரெயில்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்தன. கவாச் அமைப்பு தானாகவே 400 மீட்டர் தூரத்தில் ரெயில்களை நிறுத்துகிறது. நான் ஒரு பொறியாளர். எனவே, இந்த ரயில்களில் உட்கார்ந்து நானே ரிஸ்க் எடுத்து அந்தச் சோதனையைச் செய்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்,” என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் இப்போது நடந்த விபத்தில் கவாச் அமைப்பை ஏன் பயன்படுத்த வில்லை என்ற கேள்வி எழுகிறது. கவாச் அமைப்பு தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை வழித்தடங்களில் மட்டுமே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. விபத்து நடந்த பாதையில் கவாச் அமைப்பு நிறுவப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட தகவல்படி, 1,455 கிமீ வழித்தடத்தில் 77 ரெயில்களில் கவச் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா இடையே 3,000 கிமீ நீள ரெயில் பாதை அமைக்கப்படுகிறது என்று கூறப்பட்டது.
நாடு முழுவதும் இருக்கும் ரெயில் பாதைகளின் மொத்தம் நீளம் 68 ஆயிரம் கிலோமீட்டர். இதில் கவாச் அமைப்பு சுமார் 1455 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரெயில் பாதைகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. மேலும் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கான ªயில் பாதைகளில் தற்போது கவாச் அமைப்பை நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை கவாச் அமைப்பின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள ரெயில் பாதைகளின் தொலைவு என்பது மொத்த ரெயில் பாதைகளில் 5 சதவீதம் கூட இல்லை.
இந்த காவச் அமைப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டாலும் அதை முழுமைப்படுத்த வேண்டும்.
ரெயில்வே எத்தனையோ வகையில் முன்னேறி வருகிறது. பல ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்மயமாக்கப்பட்டு வருகிறது. வந்தேபாரத், சபர்மதி போன்ற அதி வரைவு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
விபத்து ஏற்படாமல் இருக்க ரெயில்வே கேட் உள்ள பகுதியில் பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற பாதுகாப்பு செயல்களை துரிதப்படுத்த வேண்டும். மேலும் கவாச் அமைப்பை அதைனத்து ரெயில்களுக்கும் கொண்டு வரவேண்டும். ரெயில்வே தகவல் பரிமாற்றம் செய்யும் ஊழியர்களுக்கு மொழி பிரச்சினை வரக்கூடாது. ஒவ்வொருமாநிலத்திலும் அந்ததந்த மாநில மொழி தெரிந்தவர்களை பணியில் அமர்த்த வேண்டும். இரு மாநில தொடர்புடைய பகுதிக்கு இரண்டு மொழியும் தெரிந்தநபர்களை பணியில் அமர்த்த வேண்டும்.
இரண்டை தண்டாவளம் எல்லாப்பகுதியிலும் அமைக்க வேண்டும். அதுபோக்குவரத்தையும் எளிமையாக்குவதோடு, மோதல் விபத்தையும் தடுக்கும்.