அருவருக்கத்தக்க சண்டையில் பெண் உயர் அதிகாரிகள்
1 min readFemale superiors in an awkward fight
25.2.2023
உயர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள் தங்களின் கவுரவத்தை கட்டிக் காக்க வேண்டும். அதை விடுத்து குழாயடி சண்டைபோல் குடுமிபிடி சண்டை போடக்கூடாது. அந்த அளவுக்கு கர்நாடக மாநிலத்தில் இரண்டு பெண் அதிகாரிகள் போர்களத்தில் இறங்கியுள்ளர். கர்நாடக இந்து சமய அறநிலையத்துறை கமிஷனராக பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி. ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் மீது கர்நாடக கைவினை பொருட்கள் வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்த ரூபா என்ற ஐ.பி.எஸ். அதிகாரி பல்வேறு புகார்களை கூறினார். ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினார். மேலும் அவர் தொடர்பான சில ஆபாச படங்கள் உள்ளதாகவும், அதை தற்போதைக்கு வெளியிடவில்லை என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு உடனடியாக கடும் கண்டனம் தெரிவித்த ரோகிணி சிந்தூரி, ரூபா ஒரு மன நலம் பாதித்தவர் என்றும், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி தற்கொலையில் ரோகிணி சிந்தூரியின் தொடர்பு குறித்தும் ரூபா கூறினார். அதாவது ரோகிணி சிந்தூரிக்கும், டி.கே.ரவிக்கும் இடையே நடந்த குறுந்தகவல் பரிமாற்றம் குறித்தும் குறிப்பிட்டார். மேலும் ரோகிணி சிந்தூரிக்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நெருக்கமாக உள்ளதாகவும், இதனால் அந்த அதிகாரிகளின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக அந்த மாநில முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, பெண் அதிகாரிகள் 2 பேருக்கும் நோட்டீசு அனுப்பி விளக்கம் கேட்கும்படி தலைமை செயலாளர் வந்திதா சர்மாவுக்கு உத்தரவிட்டார். மாநில அரசு நோட்டீசு அனுப்புவதற்கு முன்பே, ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரும் விதான சவுதாவில் தலைமை செயலாளர் வந்திதா சர்மாவை தனித்தனியாக நேரில் சந்தித்து மாறி, மாறி புகார் கூறினர். அது தொடர்பான புகார் கடிதங்களையும் அவர்கள் வழங்கினர்.
ரோகிணி சிந்தூரி சட்டவிரோதமான முறையில் அரசு பணத்தை முறைகேடு செய்ததாகவும், மைசூரு ஆட்சியராக இருந்தபோது, அவர் தங்கியிருந்த அரசு பங்களாவில் கொரோனா காலத்தில் விதிகளை மீறி நீச்சல் குளம் கட்டி முறைகேடு செய்ததாகவும் குற்றம் சாட்டினார். அதோடு, திருப்பதியில் இந்து அறநிலைத்துறை விடுதி கட்டிட முறைகேடு, விதிகளை மீறி சொகுசு பங்களா கட்டுவது, வெளிநாட்டில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை வரி கட்டாமல் கொண்டு வந்தது என்று அடுக்கடுக்கான புகார்களை அவர் கூறினார். இதே போல் ரோகிணி சிந்தூரியும், ரூபா சட்ட விதிகளை மீறி தனது தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு தனக்கு எதிராக அவதூறு பரப்பி இருப்பதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதனை அடுத்து ரோகிணி சிந்தூரி, ரூபா ஆகிய 2 பேரையும் கர்நாடக அரசு அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவர்கள் 2 பேரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர். ரூபாவின் கணவரான சர்வே, நில ஆவணங்கள் துறை கமிஷனர் முனீஸ் மவுட்கல் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை முதன்மை செயலாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண் அதிகாரிகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் 3-வது நபர் அதாவது ரூபாவின் கணவரும் தண்டிக்கப்பட்டு உள்ளார். ஏனென்றால் ரோகிணி சிந்தூரி தொடர்பான தனிப்பட்ட புகைப்படங்களை ரூபாவுக்கு அவரது கணவர் தான் வழங்கினார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடக அரசு ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். மற்றும் ரூபா ஐ.பி.எஸ். ஆகிய 2 அதிகாரிகளுக்கும் வாய்ப்பூட்டு போட்டுள்ளது. இதுகுறித்து அரசு அவர்கள் 2 பேருக்கும் பிறப்பித்துள்ள உத்தரவில், “தனிப்பட்ட புகார்கள், குறைகளை ஊடகங்களிடம் கூறியதை நீங்கள் தவித்து இருக்க வேண்டும். அதனால் இனி நீங்கள் இத்தகைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து ஊடகங்களில் பேசக்கூடாது. அகில இந்திய சேவை நடத்தை விதிகளை நீங்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவுக்கு ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்துரி ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், ரூபா எழுத்துபூர்வமாக “நிபந்தனையற்ற மன்னிப்பு” கேட்க வேண்டும் என்றும், “நற்பெயர் மற்றும் மன வேதனையை இழந்ததற்காக” ரூ. 1 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பிப்ரவரி 21&ந் தேதியிட்ட அந்த நோட்டீசில், “உங்கள் நடத்தையின் போக்கில் இருந்து, அவதூறான கருத்துகள்&அறிக்கைகள்&குற்றச்சாட்டுகளை, அறிந்தும், நம்புவதற்கு காரணமும் இருப்பதால், கூறப்பட்ட கருத்துக்கள்&அறிக்கைகள்& குற்றச்சாட்டுகள் பொய்யானவை, உண்மைக்குப் புறம்பானவை, நீங்கள் கடுமையான குற்றத்தைச் செய்துள்ளீர்கள். அதற்கு நீங்கள் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500ன் கீழ் தண்டிக்கப்படுவீர்கள். எனவே, உங்களைப் பாதுகாக்கவும், கையாளவும், சட்டத்தின்படி தண்டிக்கவும் உங்களை நீங்களே பொறுப்பாக்கியுள்ளீர்கள். இது தொழில்முறை, தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் அவரது இமேஜை அழித்துவிட்டது. அவருடைய ஒழுக்க நேர்மை, குணம் மற்றும் நடத்தை ஆகியவை அவருக்குத் தெரிந்த அனைவருக்கும் மற்றும் குறிப்பாக நிர்வாக&அதிகாரத்துவ வட்டத்தில் விவாதப் பொருளாகிவிட்டதால் அவர் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கிறார். எங்களிடம் சட்டஉதவி கோரியுள்ள அவர் அனுபவிக்கும் மன வேதனை, கணக்கிட முடியாதது தவிர கற்பனை செய்ய முடியாதது.” என்று கூறப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் இரண்டு பதவிகளும் இந்தியாவில் மிக உயர்ந்த பதவிகள். அந்த பதவியில் இருப்பவர்கள் இப்படி கீழ்த்தரமான செயலில் இறங்கி இருப்பது அருவருக்கத்தக்கது. பொதுவாக ஒவ்வொருவரும் சுய கவுரவத்துடனும் ஒழுக்கத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். அப்படியே ஒருவர் தவறு செய்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்யலாமே தவிர இப்படி தெருசண்டைககு வழிவகுக்கக்கூடாது. இனி அதிகாரிகள் பதவி ஏற்கும்போது சிறந்த ஒழுக்கத்தை கடைபிடிப்போம் என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.