May 9, 2024

Seithi Saral

Tamil News Channel

ஈரோடு டாக்டரின் குழந்தை, தாய் உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

1 min read
Erode doctor’s infant and mother confirmed corona

30.3.2020

தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்து, தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 5 பேரில் இரண்டு பேர், ஈரோடு ரயில்வே காலனி வளாகத்தில் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த 29 வயது பெண் டாக்டர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பணியிடமாறுதல் பெற்று கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில், டாக்டருக்கு காய்ச்சல், தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் கடந்த 27ம் தேதி கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது கணவர், இரண்டு குழந்தைகள், டாக்டரின் 58 வயது தாய் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்த 52 வயது பெண் ஆகியோர் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 29ம் தேதி டாக்டர் குடும்பத்தினரின் ஆய்வு முடிவு வந்தது. இதில், பெண் டாக்டர், அவரின் 10 மாத குழந்தை, டாக்டரின் தாய், வேலைக்கார பெண் ஆகிய 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், டாக்டரின் கணவர், அவரின் 9 வயது குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை. இருப்பினும், அவர்கள் இருவரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் ஏற்கனவே கோவையை சேர்ந்த 32 வயது பெண், திருப்பூர் தொழிலதிபர் ஆகியோர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா பாதிப்பின் காரணமாக சிகிச்சை பெறும் நபர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கோவையை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் தொண்டை வலி, காய்ச்சல் பாதிப்பின் காரணமாக சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ., கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவர், வெளியூர், வெளிநாடு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட 6 பேர் மற்றும் புதியதாக அட்மிட் செய்யப்பட்ட இளம்பெண், ஏற்கனவே சிகிச்சையில் இருந்த இரண்டு பேர் என மொத்தம் 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோடு பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் கொரோனோ சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 82 பேரில், ஏற்கனவே 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று ரத்தமாதிரி முடிவுகள் வந்ததையடுத்து, 45,48, 67,62 வயது ஆண்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் தாய்லாந்திலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது. பெருந்துறை மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 4 பேருக்கும், பெருந்துறை ஐஆர்டி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 4 பேருக்கும் என மொத்தம் 8 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டாக்டர்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.