தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி -டெல்லி சென்று வந்தவர்கள்
1 min read
1.4.2020
தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் அரசின் வேண்டுகோளை ஏற்று ஒரே இரவில் வந்து தங்களைப் பதிவு செய்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஏப்ரல் 1ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த பீலா ராஜேஷ் கூறியதாவது:
“அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க டெல்லி மாநாட்டில் பங்குபெற்றவர்கள் தாமாக முன் வந்து தகவலைத் தெரிவித்ததற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தேன். டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் 523 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்தால் உங்களுக்கு உரிய சிகிச்சை அளிப்போம். நீங்கள் சொல்லும் தகவல் உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் எனத் தெரிவித்திருந்தேன்.
அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவல் தெரிவித்துள்ளனர். அதற்கு முழுமையான நன்றி. தற்போது 1103 பேர் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்.
இதுவரை 77,330 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். அரசின் கண்காணிப்பில் உள்ளவர்கள் 81 பேர். தமிழகத்தில் செயல்படும் பரிசோதனை மையங்கள் 17. இதுவரை 2,726 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் பாசிட்டிவ் 234. இன்று (1ம் தேதி)மட்டும் 110 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 110 பேரும் டெல்லி சென்று திரும்பிய 1,103 பேரில் அடங்குவர். இதில் 658 பேருக்கு ரத்த மாதிரி எடுத்துள்ளோம். மீதமுள்ளவர்களுக்கும் ரத்த மாதிரி எடுப்போம்.
110 பேரில் யார் யார் கலந்துகொண்டார்கள், அவர்களைச் சுற்றி உள்ளவர்களின் 7 கி.மீ. முதல் 8 கி.மீ. வரை பஃபர் செய்ய முடிவு செய்துள்ளோம். இந்தத் தடுப்பு நடவடிக்கை மூலம் மட்டுமே நாம் கடுமையாக தடுக்க முடியுமோ தனியார் மருத்துவமனையுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளோம். கர்ப்பிணிப் பெண்கள் 1 லட்சம் பேர் வரை லிஸ்ட் எடுத்துள்ளோம். தனியார் மருத்துவமனைகளையும் அதே லிஸ்ட் எடுக்கக் கூறியுள்ளோம். வயதானவர்கள் மிக மிக எச்சரிக்கையாக தனியாக இருக்க வேண்டும். வெளியில் சென்று வருபவர்கள் அவர்களிடம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
டெல்லி மாநாட்டில் தமிழத்திலிருந்து கலந்து கொண்டவர்கள் 1500 பேருக்கு மேல் என்று சொன்னோம். அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன் இரவு முழுவதும் அனைவரும் வந்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை 1.103 பேர். அவர்கள் தாமாகவே வந்துள்ளனர். 190 பேரின் பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது.
மாநாட்டில் பங்கேற்று யாராவது வராமல் இருந்தால் தயவுசெய்து அவர்களும் வாருங்கள். உங்கள் குடும்பத்தை, இந்தச் சமூகத்தை பாதுகாக்க உதவும் என்று வேண்டுகோள் வைத்தது பலனளித்தது. அவரவர்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை செய்ய உள்ளோம். அவர்கள் வசிக்கும் பகுதியில் சுற்று வட்டாரம் முழுவதும் கிருமி நீக்கம் செய்யும் வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அனைத்துத் துறைகளையும் இணைத்து நடத்த உள்ளோம்.
நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். மாவட்ட வாரியாக நெல்லையில் 6 பேர், கோவையில் 28 பேர், ஈரோட்டில் 2 பேர், தேனியில் 20 பேர், திண்டுக்கல்லில் 17 பேர், மதுரையில் 9 பேர், சிவகங்கையில் 5, பேர் திருப்பத்தூரில் 7 பேர், செங்கல்பட்டில்7 பேர், திருவாரூரில் 2 பேர், தூத்துக்குடியில் 2 பேர், காஞ்சிபுரத்தில் 2 பேர், கரூரில் ஒருவர், சென்னையில் ஒருவர், திருவண்ணாமலையில் ஒருவர்.
நேற்றைய கணக்கு 80 பேர். 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர். 1,103 பேரில் 658 பேருக்கு டெஸ்ட் எடுத்துவிட்டோம். மீதமுள்ளவர்களுக்கு நாளை எடுத்துவிடுவோம். ஒரு நாளைக்கு 5000 பேருக்கு டெஸ்ட் எடுக்கலாம். இன்னும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டாலும் அதை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன”.
இவ்வாறு சுகாதரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.