கொரோனா தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சலுகை; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min read
Offer to Corona Prevention Equipment Manufacturers; Edappadi Palanisamy Announcement
3/4/2020
கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் தயாரிக்கும் சிறு, குறு, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா
சீனாவில் உருவான கொரோனா இந்தியாவிற்குள்ளும் புகுந்தது. தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
கொரோனாவைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுகாதாரத்துறை அமைச்சர், வருவாய்துறை அமைச்சர் அதன் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கொரோனா தடுப்பு உபகரணங்கள் உற்பத்தி தொடர்பான சலுகை அறிவிப்புகளை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சலுகை
இதுதொடர்பான அவருடைய டுவிட்டர் பதிவில், ‘கொரோனா நோய் தடுப்புக்கான கீழ்க்காணும் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களின் உற்பத்திக்கு சலுகைகள் வழங்கப்படும்.
அதன்படி, உள் நுழைவு செயற்கை சுவாச கருவிகள் , முகக் கவசங்கள், பல்வகை பண்பளவு கணினி திரைகள், கொரோனா நோய் தடுப்புக்கான வைரஸ் எதிர்ப்பு, மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்சிக் குளோரோ குவினோன், அசித்ரோமைசின் வைட்டமின்-சி (மாத்திரை, திரவ வடிவில்), தனி நபர் பாதுகாப்பு கவச உடை ஆகிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களோ அல்லது புதிய நிறுவனங்களோ தமிழ்நாட்டில் ஜூலை 31, 2020-க்குள் புதிதாக உற்பத்தி செய்யத் தொடங்கினால் சலுகைகள் வழங்கப்படும்.
குறு, சிறு நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு இச்சலுகைகள் பொருந்தும்.
தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு, மொத்த மூலதனத்தில் 30 சதவிதுதத்தில் மூலதன மானியம், ரூ.20 கோடி உச்சவரம்பாக கொண்டு 5 ஆண்டு காலத்திற்கு சம தவணைகளாக பிரித்து வழங்கப்படும்.
கொரோனா தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சிறப்பு தொழில் நிறுவனங்களாக கருதப்பட்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும்.
மேற்படி பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய அனைத்து நிறுவனங்களும் திட்ட அனுமதி உட்பட அனைத்துவித அனுமதிகளும் பெறுவதற்காக காத்திராமல் உடனடியாக உற்பத்தியை துவக்கலாம்.
உற்பத்தி தொடங்கிய பின்னர் அனுமதிகளை பெற்றுக் கொள்ளலாம்.
இவை அனைத்திற்கும் ஒற்றைச்சாளர அனுமதிகள் வழங்கப்படும்.
மானியம்
கொரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப குறுகிய, நீண்ட கால குத்தகை அடிப்படையில் சிப்காட், சிட்கோ நிறுவனங்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் / கூடாரங்கள் வழங்கப்படும். 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்கு உண்டு.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் பெறப்படும் செயல்பாட்டு மூலதனக் கடனிற்கான வட்டியில் 6 சதவீதத்தை 3 காலாண்டுகளில் (31.12.2020 வரை) தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் மானியமாக அரசு வழங்கும்.
அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளில், குறைந்தபட்சம் 50%-ஐ தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் கொள்முதல் செய்யும். இதற்கென திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளிகள் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
பெரு நிறுவனங்களுக்கு சிப்காட் நிறுவனமும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தொழில் வணிக ஆணையரகமும்
இச்சலுகைகளை வழங்குவதற்கான முகமை நிறுவனங்களாக செயல்படும்.
இத்திட்டத்தின்படி உற்பத்தி துவக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சலுகைகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்’
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.