July 30, 2026

Seithi Saral

Tamil News Channel

ஆகஸ்டு 3-ந்தேதி ஜோசப் விஜய்-டி.கே.சிவக்குமார் சந்திப்பு உறுதி

1 min read

Meeting between Joseph Vijay and D.K. Shivakumar confirmed for August 3rd.

30.7.2026
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் ஆகஸ்டு 3-ந்தேதி ஜோசப் விஜய்-டி.கே.சிவகுமார் சந்தித்து பேசுவது உறுதியாகியுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையானது தமிழ்நாடு – கர்நாடகா இடையே நூற்றாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்தாலும், மேகதாது அணை பிரச்சினை என்பது கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், காவிரி படுகையில் 5-வது அணையாக மேகதாதுவை கட்டி முடிக்க கர்நாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே, தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் – கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் ஆகஸ்டு 3-ந் தேதி பெங்களூருவில் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இந்த சந்திப்பில் பங்கேற்கக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதனால், எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜோசப் விஜய் – டி.கே.சிவகுமார் சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், இருமாநில முதல்வர்கள் சந்திப்பு நடப்பது உறுதியாகியுள்ளது. இதற்காக, ஆகஸ்டு 3-ந் தேதி காலை சென்னையில் இருந்து தனி விமானத்தில் முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பெங்களூரு செல்ல இருக்கிறார். அன்று பிற்பகல் 12 மணிக்கு கர்நாடக தலைமைச் செயலகமான விதான் சௌதாவில் கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசுகிறார்.

அதன்பின்னர், இருவரும் ஹெலிகாப்டரில் மேகதாது அணை அமைய உள்ள இடத்தையும், கர்நாடகாவில் உள்ள காவிரி பாசன பகுதிகளையும் பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த இருமாநில முதல்வர்கள் சந்திப்பில் என்ன முடிவு எட்டப்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் இப்போதே ஏற்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *