பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை
1 min read
4.4.2020
திருவண்ணாமலையில் மாதந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். அதன்படி, பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 7ம் தேதி காலை 11.01 மணிக்கு தொடங்கி, 8ம் தேதி காலை 8.05 மணிக்கு நிறைவடைகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. எனவே, பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. அதனால், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நூற்றாண்டு காலமாக நடைபெறும் பவுர்ணமி கிரிவல வரலாற்றில், முதன்முறையாக பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத சூழல் இந்த மாதம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் கூறுகையில், `திருவண்ணாமலையில் மாதந்தோறும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் சென்று வழிபடுவார்கள். ஆனால், தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், பக்தர்களால் கிரிவலத்துக்கு வர முடியாது. எனவே, இந்த மாதம் பவுர்ணமி கிரிவலம் நடைபெறாது. ஆனாலும், வழக்கம்போல் அண்ணாமலையார் கோயிலில் 6 கால பூஜையும், பவுர்ணமி சிறப்பு பூஜையும் நடைபெறும். கோயிலுக்கு வரவும், வழிபாட்டில் பங்கேற்கவும் பக்தர்களுக்கு வரும் 14ம் தேதி வரை அனுமதியில்லை’ என்றார்.