தென்காசியில் போலீஸ் தடியடி, 300 பேர் மீது வழக்கு
1 min read
பள்ளிவாசல் முன் குவிக்கப்பட்ட போலீசார்
4.4.2020
கொரோனா பரவலை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3ம் தேதி தென்காசி நடுப்பேட்டை தெரு பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை மதிய தொழுகைக்காக மக்கள் கூடினர்.
தகவல் அறிந்த தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். அப்போது போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்ததோடு கலைந்து செல்ல மறுத்தனர். மேலும் போலீசாரை சிலர் தாக்கத்தொடங்கினர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் மீது கல் வீசப்பட்டது. காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் மாதவன் ஆகியோரும் கல்வீச்சில் காயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தென்காசி போலீசார் 300 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 4 பேர் கைது செய்யப்பட்டனர்.