“அமெரிக்கா- சீனா உறவை புதிய பாதையில் கொண்டு செல்வோம்”- டிரம்ப் – ஜி ஜின்பிங் உறுதி
1 min read
“We will steer US-China relations onto a new path” – Trump and Xi Jinping pledge.
25/9/2026
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜி ஜின்பிங் 3 நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க சென்ற சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். ஓவல் அலுவலகத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. பின்னர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் இரு தலைவர்களும் அமெரிக்கா-சீனா உறவை பாராட்டி கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் பேசிய டிரம்ப் கூறியதாவது; “அமெரிக்காவும் சீனாவும் இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுவே இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் பரஸ்பர மரியாதைக்கு அடித்தளமாக உள்ளது. எதிர்கால தலைமுறைகளின் வளம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த உறவை தொடர்ந்து கட்டியெழுப்ப முடியும்” என்றார்.
ஜி ஜின்பிங் பேசுகையில், அமெரிக்கா-சீனா உறவுகள் மற்றொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டத்தை எட்டியுள்ளது. ஜனாதிபதி டிரம்பும் நானும் இன்று நேர்மையான மற்றும் ஆழமான பேச்சுவார்த்தையை நடத்தினோம். பல்வேறு விவகாரங்களில் பொதுவான புரிதலை எட்டியுள்ளோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆக்கப்பூர்வமான மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட உறவுக்கு புதிய அம்சங்களை சேர்த்துள்ளது” என்றார்.
அமெரிக்கா-சீனா இடையிலான வரலாற்று உறவுகளையும் இரு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். 158 ஆண்டுகளுக்கு முன்பு சீன தூதர்கள் முதன்முதலில் பாஸ்டன் நகருக்கு சென்றதை டிரம்ப் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளித்த ஜி ஜின்பிங், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனிடம் இருந்த மிகப்பெரிய சீன பீங்கான் பொருட்கள் சேகரிப்பு மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டதை நினைவுகூர்ந்தார்.சீன முன்னாள் தலைவர் மாவோ சேதுங்கும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனும் இரு நாடுகளின் உறவை இயல்புநிலைக்கு கொண்டு வர மேற்கொண்ட முயற்சிகளையும் ஜி ஜின்பிங் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, ஆக்கப்பூர்வமான சீனா-அமெரிக்க உறவு குறித்த புதிய பார்வையை செயல்படுத்த வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். அதே நேரத்தில், தைவான் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன், இந்த விவகாரத்தை அமெரிக்கா மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் ஜி ஜின்பிங் அறிவுறுத்தினார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.இந்தத் துறையில் அமெரிக்காவும் சீனாவும் ஒன்றையொன்று எதிர்த்து செயல்படுவதற்கு பதிலாக, தங்களது பலத்தை பயன்படுத்தி ஒத்துழைக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற 3 வகை உணவு விருந்தில் அமெரிக்க மற்றும் சீன உணவு பாரம்பரியங்கள் இடம்பெற்றன. விருந்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், என்விடியாவின் ஜென்சன் ஹுவாங், மெட்டாவின் மார்க் ஜுக்கர்பெர்க், ஓபன்ஏஐயின் சாம் ஆல்ட்மேன், கூகுளின் சுந்தர் பிச்சை, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் எலான் மஸ்க், மைக்ரானின் சஞ்சய் மெஹ்ரோத்ரா, மைக்ரோசாப்டின் சத்யா நாதெல்லா, ஆப்பிள் நிறுவனத்தின் டிம் குக் உள்ளிட்ட முக்கிய தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, வெள்ளை மாளிகைக்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள் “திபெத்தை விடுதலை செய்”, “ஜி ஜின்பிங், உங்களுக்கு இங்கு வரவேற்பில்லை”, “ஹாங்காங்கை விடுதலை செய்” உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்.