April 25, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் உருவான வரலாறு

1 min read

history of Kadayam

கடையம் எல்லா இயற்கை வளங்களையும் பெற்ற ஊர். இங்கு அனைத்து மதத்தினர், அனைத்து இனத்தினர் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்த ஊரில் பாரதியார் பல கவிதைகளை படைத்துள்ளார்.

இந்த ஊர் ஒரு காலத்தில் ஜம்பு நதிக்கு மேற்கே கல்யாணி அம்மன், பத்திரகாளி அம்மன் கோவில்கள் இருக்கும் பகுதியில்தான் இருந்துள்ளது. அப்போது வடபத்துகுளம் ஆறுபோல் ஓடியதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும் கல்யாணி அம்மன் மிக உக்கிரமாக இருந்தாள். இதனால் அந்த சன்னதிக்குச் சென்று பூஜை செய்யவே பலர் அஞ்சினார்கள்.
மக்கள் தங்களுக்கு நல்வாழ்வு வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டினர். அவர்கள் மீது இரக்கம் கொண்ட கல்யாணிஅம்மன் அவர்கள் முன்பு தோன்றிளாள். “இது உங்களுக்கு வாழ்வதற்கு தகுந்த இடம் அல்ல. நீங்கள் வாழ நல்ல இடத்தை நான் காட்டுகிறேன்”. என்றாள்.
“அம்மா சொல்லுங்கள்… அங்கேயே செல்கிறோம். எங்களுக்கு நல்வாழ்வு தந்தால்போதும்” என்றா£ர்கள். உடனே அன்னை கல்யாணி அம்மன் உயர்ந்த பாறை மீது ஏறி தன் காலில் அணிந்திருந்த தண்டயத்தை கழற்றி கிழக்கு நோக்கி வீசினாள். அது ஜம்பு நதியை தாண்டி வந்து விழுந்தது. அந்த இடத்தில் மக்கள் வீடு கட்டி வசித்தனர். கல்யாணி அம்மன் காலில் அணிந்திருந்த அணிகலனுக்கு கடகம் என்று பெயர். கடகம் விழுந்த இடம் கடகம் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் அது மறுவி கடையம் ஆனது. மேலும் கல்யாணி அம்மன் தன் உக்கரத்தை தணித்துக் கொண்டாள்.
மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து கல்யாணி அம்மன் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்று பயபக்தியுடன் வழிபட்டு வந்தனர்.
பின்னர் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே சிவன் கோவிலை நிறுவி தினமும் வழிபட்டு வந்னர். நித்ய கல்யாணி அம்மன் கோவிலின் கிளைக் கோவிலாக விளங்குகிறது. அதேபோல் பத்திரகாளி அம்மன் கோவிலையும் ஊருக்குள் கிளைக்கோவிலாக அமைத்து வழிபட்டு வருகிறார்கள்.
கடையம் உருவான வரலாறு இப்படி இருக்க, இவ்வூர் வரலாற்று சிறப்புகளை முனைவர் ச.கணபதிராமன் அவர்கள் எழுதிய கடையத்தில் பாரதியின் படையல்கள் என்ற புத்தகத்தில் விரிவாக குறிப்படப்பட்டு உள்ளது.
இயற்கை சூழல் நிறைந்த கடையம் தொன்மையான ஊர் என கருதப்படுகிறது. கடையத்திற்கு அருகில் உள்ள தோரணமலைப்பகுதியில் பழங்காலத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இவற்றை ஆராய்ந்த அறிஞர்கள் இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கணித்துள்ளனர். இங்கு ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலம் உள்ள பழங்கால செங்கற்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இங்குள்ள பாறைப்பகுதியில் சடுகுடு விளையாடுவதற்காக விளையாட்டு இடம் பாறையில் அமைக்கப் பெற்றதற்கான அடையாள சின்னங்களும் உள்ளன.
சங்க கால புலவர்கள் வரிசையில் ஓலை கடையத்தார் என்ற ஒருவர் இருந்தார் என்றும், அவர் இவ்வூரைச் சேர்ந்தவர் என்றும் குருசாமி பாண்டியன் என்ற தமிழாசிரியர் குறிப்பிட்டு உள்ளார்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாண்டிக் கோவை என்ற நூலில் கடையம் குறிக்கப்பட்டு உள்ளது. அந்நூல் இந்த ஊரை கடையல் என்று குறிப்பிடுகிறது. கடையம் என்ற ஊரை சேரர்களும் பாண்டியர்களும் ஆட்சி செய்திருக்கிறார்கள்.
பிற்கால பாண்டியர்களின் கல்வெட்டுக்கள் இவ்வூரில் காணப்படுகின்றன. சுந்தரபாண்டியனின் ஆட்சி கல்வெட்டில் இவ்வூரை கோநாடு விக்கிரபாண்டிய நல்லூர் என்று குறிப்பிடுகிறது. இன்னொரு கல்வெட்டில் பாரி கிரகத்தைச் சேர்ந்த தந்திரக்காரர்களும் தண்டநாயகமும் சேனாபதி தானமும் நிகழ்த்திய அவ்வூர் காரர்களும் தங்கள் ஜீவனாம்சம் உத்தரத்திற்கு ஏற்பட்ட ஆண்டார்குளம் பரவு என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆண்டார்குளம் என்பது இன்று ஆண்டையான் குளம் என்று சொல்லப்படுகிறது. இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1216 ஆகும்.
ஜடாவர்மன் ஸ்ரீவல்லபனின் 18ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டும் கடையத்தை குறிப்பிடுகிறது. சுந்தரபாண்டியனின் மற்றொரு கல்வெட்டு முள்ளிநாடு பண்ணன் குடியில் உள்ள சேனாபதி உதயவளவன் என்ற வீரமாறன் உதயநேரி குளத்தை எழுப்பினான் என்று குறிப்பிடுகிறது. பண்ணன்குடி வீரமாறன் வகையினரே கீழக்கடையத்தில் வசிக்கின்றனர். உதயநேரி குளம் என்ற இயற்கை குளம் வடபத்துகுளம் என்று சொல்லப்படுகிறது.
பழங்காலத்தில் புகழ்பெற்ற கடையம் பிற்காலமான நாயக்கர் காலத்திலும் புகழ்பெற்று விளங்கியது. நாயக்கர்கள் காலத்தில் குடிக்காவல் முறையை மேற்பார்வையிட இங்கு இரண்டு பழமையான நாடார் குடும்பங்கள் நியமிக்கப்பட்டன.
நாயக்கர்கள் ஆட்சிக்குப் பிறகு திருநெல்வேலி பகுதி பற்பல பாளையங்களாக பிரிக்கப்பட்டன. இப்பாளையங்களை மேற்பார்வையிடவும் வரிவசூல் செய்து ஆற்காடு நவாப்பிற்கு அனுப்பவும் தயவாய் அரியநாதர் குடும்பத்தைச் சார்ந்த மேடை தளவாய் குடும்பத்தினர் நியமிக்கப்பட்டனர். இக்குடும்பத்தைச் சேர்ந்த ஆறை அழகப்ப முதலியார் என்பவர் நெல்லை சீமையை கி.பி. 1679 முதல் கி.பி. 1730 வரை ஆட்சி புரிந்து வந்தார்.
கடையத்தில் இரண்டு நதிககள் ஓடுகிறது. ஒன்று தோரணமலைக்கு வடபுறம் உற்பத்தியாகி ஊரையட்டி ஓடுகிறது. அதற்கு ஜம்பு நதி என்று பெயர். இன்னொன்று ஊருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் உற்பத்தியாகி ஊருக்கு தென்புறமாக ஓடுகிறது. இந்த இரண்டு நதிகளும் ஊருக்கு தெற்கே ஒன்றாக கலக்கிறது.

-கடையம் பாலன்

/

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.